ஆயுஷ்
குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், சென்னையில் 9-வது சித்த மருத்துவ தினக் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தார்
சித்த மருத்துவம் என்பது இந்தியாவின் நாகரிக ஞானத்தில் ஆழமாக வேரூன்றிய பாரம்பரியம் - குடியரசுத் துணைத்தலைவர்
பாரம்பரிய ஞானத்தை நவீன அறிவியலுடன் ஒருங்கிணைக்க வேண்டும் - குடியரசுத் துணைத்தலைவர்
சுகாதாரத் துறையில் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு பாரம்பரிய மருத்துவம் முக்கியமானது - குடியரசுத் துணைத்தலைவர்
प्रविष्टि तिथि:
03 JAN 2026 4:59PM by PIB Chennai
குடியரசுத் துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன், சென்னையில் இன்று (03.01.2026) 9-வது சித்த மருத்துவ தினக் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தார். மாபெரும் தமிழ் முனிவரான அகத்தியருக்கு மரியாதை செலுத்துவதாகக் கூறிய குடியரசுத் துணைத்தலைவர், தற்கால சுகாதார சேவைகளில் சித்த மருத்துவ முறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள சித்த மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்குத் தமது அன்பான வாழ்த்துகளை அவர் தெரிவித்தார், சித்த மருத்துவம், இந்தியாவின் நாகரிக ஞானத்தில் ஆழமாக வேரூன்றிய, உயிரோட்டமான பாரம்பரிய முறை என்று அவர் கூறினார்.
ஆயுஷ் பாரம்பரிய மருத்துவ முறைகளின் கீழ் வரும் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, யோகா போன்ற பாரம்பரிய மருத்துவ, ஆரோக்கிய நடைமுறைகள் கடந்த காலத்தின் எச்சங்கள் அல்ல எனவும் அவை கோடிக்கணக்கான மக்களின் நல்வாழ்வுக்குத் தொடர்ந்து பங்களிக்கும், காலத்தால் அழியாத, நிரூபிக்கப்பட்ட நடைமுறைகள் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். உடல், மனம், இயற்கை ஆகியவற்றுக்கு இடையேயான நல்லிணக்கத்திற்கு சித்த மருத்துவ முறை முக்கியத்துவம் அளிப்பதாக அவர் தெரிவித்தார். ஆரோக்கியம், நோய்த்தடுப்பு, வாழ்க்கை முறை மேலாண்மை ஆகியவற்றுக்கு ஒரு முழுமையான அணுகுமுறையை சித்த மருத்துவ முறை வழங்குகிறது என்றும் அவர் கூறினார். வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும் உடல் நலக் குறைபாடுகள், மன அழுத்தம், சுற்றுச்சூழல் சவால்கள் போன்றவை அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்துக்கு சித்த மருத்துவ முறை மிகவும் பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சித்த மருத்துவ முறையின் தனித்துவமான வலிமையை எடுத்துரைத்த குடியரசுத் துணைத்தலைவர், சித்த மருத்துவம் நோய்களின் மூல காரணங்களைக் கண்டறிந்து நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது என்று கூறினார். இந்த மருத்துவ முறை அதன் விரிவான, ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் நோய்களில் இருந்து முழுமையாக குணமடைந்து, மீள்வதற்கான நம்பிக்கையை அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பாரம்பரிய அறிவையும் அவை தொடர்பான நடைமுறைகளையும் பாதுகாத்து மேம்படுத்துவதன் அவசியத்தை குடியரசுத் துணைத்தலைவர் வலியுறுத்தினார். சித்த மருத்துவத்தின் நெறிமுறைகளையும் தத்துவ அடித்தளங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். சித்த மருத்துவ அறிவை ஆவணப்படுத்தவும், நவீனமயமாக்கவும், உலக அளவில் பகிர்ந்து கொள்ளவும் ஆராய்ச்சியாளர்கள், பயிற்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியோர் கூட்டாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குணப்படுத்த முடியாத நோய்களாகக் கருதப்படும் நோய்களைக் குணப்படுத்த சித்த மருத்துவத்தில் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுமாறு இளம் மாணவர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு மருத்துவ முறைக்கும் அதன் சொந்த பலங்களும், நன்மைகளும் உள்ளன என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், மனிதகுலத்தின் நலனுக்காக அனைத்து மருத்துவ முறைகளையும் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். அந்த மருத்துவ முறைகளை நோக்கிய நேர்மறையான, அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
சித்த மருத்துவ தினம் ஒரு மருத்துவம் தொடர்பான முக்கியமான நினைவூட்டலாகச் செயல்படுகிறது என்று கூறிய குடியரசுத் துணைத்தலைவர், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க பாரம்பரிய ஞானத்தை நவீன அறிவியலுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்று கூறினார். முன்னதாக, நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியைக் குடியரசுத் துணைத்தரைவர் பார்வையிட்டார். சித்த மருத்துவ முறையின் செழுமையான பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில், சித்த மருத்துவ ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மூலப்பொருட்கள், மூலிகை மருந்துகள் ஆகியவற்றின் பரந்த தொகுப்பை காட்சிப்படுத்தியதற்காக ஆயுஷ் அமைச்சகத்தை அவர் பாராட்டினார்.
9-வது சித்த மருத்துவ தின கொண்டாட்டங்களை, ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவ- ஹோமியோபதி இயக்குநரகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
“உலக சுகாதாரத்திற்காக சித்தா” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த கொண்டாட்டங்கள், சித்த மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் அகத்திய முனிவரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளன. அகத்திய முனிவரின் பிறந்த நட்சத்திரமான மார்கழி மாதம் அயில்ய நட்சத்திரத்தன்று ஒவ்வொரு ஆண்டும் தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 2026 ஜனவரி 6 அன்று தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி 4 நாள் கொண்டாட்டங்களை இன்று (03.01.2026) குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், தமிழ்நாட்டையும் பிற மாநிலங்களையும் சேர்ந்த சித்த மருத்துவர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், அறிஞர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், சித்த மருத்துவத் துறைக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்புகளுக்காக, சித்த மருத்துவத் துறையைச் சேர்ந்த ஐந்து முக்கிய பிரமுகர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில், மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன், ஆயுஷ் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமதி மோனாலிசா தாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
****
AD/PLM/SH
(रिलीज़ आईडी: 2211120)
आगंतुक पटल : 50