குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஸ்ரீ நாராயண குருவின் போதனைகள் மூலம் இளைஞர்கள் உத்வேகம் பெறவேண்டும் – குடியரசுத் துணைத்தலைவர்
प्रविष्टि तिथि:
30 DEC 2025 1:40PM by PIB Chennai
கேரள மாநிலம் வர்க்கலாவில் உள்ள சிவகிரி மடத்தில் 93-வது சிவகிரி யாத்திரையை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், சிவகிரியை வெறும் ஒரு புனித யாத்திரைத் தலமாக மட்டுமின்றி, ஸ்ரீ நாராயண குருவால் கற்பனை செய்யப்பட்ட ஒரு வாழும் தத்துவமாகவும், சமூக விழிப்புணர்வின் பயணமாகவும் திகழ்வதாக விவரித்தார்.
சிவகிரி, ஆன்மீகத் தேடலையும் சமூகப் பொறுப்பையும் இணக்கமாக ஒருங்கிணைப்பதன் அடையாளமாகத் திகழ்கிறது என்றும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.
சிவகிரி யாத்திரை ஒரு சடங்கு சார்ந்த செயலாக மட்டுமின்றி, கல்வி, தூய்மை, அமைப்பு, உழைப்பு, சுயமரியாதை ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு இயக்கமாகவே கருத்தாக்கம் செய்யப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீ நாராயண குருவால் எழுப்பப்பட்ட ஒரு சக்திவாய்ந்த கேள்வி சமூகத்தை மாற்றியமைத்தது என்று குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார். ஒரு மனிதனை மற்றொரு மனிதனை விடத் தாழ்வாக ஏன் நடத்த வேண்டும்? என்ற அநீதிக்கும், பல நூற்றாண்டுகால பாகுபாட்டிற்கும் பதிலளிக்கும் விதமாக "மனித சமுதாயத்திற்கு ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள்." என்று அவர் குறிப்பிட்டதாக திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
குருவின் புரட்சி அமைதி நிறைந்ததாகவும், கருணை மிக்கதாகவும், மாற்ற முடியாததாகவும், கண்ணியம், சமத்துவம் மற்றும் மனிதநேயத்தில் வேரூன்றியதாகவும் இருந்தது என்று அவர் கூறினார்.
ஆன்மீகம் மற்றும் பகுத்தறிவின் இந்த ஒருங்கிணைப்பு, குருவை ஒரு துறவியாக மட்டுமின்றி, எதிர்காலத்திற்கான ஒரு வழிகாட்டியாகவும் ஆக்கியது என்று அவர் கூறினார்.
இந்தியாவின் நாகரிகப் பண்புகளை எடுத்துரைத்த குடியரசுத் துணைத் தலைவர், இந்திய ஆன்மீகம் எப்போதும் அன்பையே மிக உயர்ந்த வழிபாட்டு வடிவமாக வைத்துள்ளது என்று தெரிவித்தார். ஸ்ரீ நாராயண குரு இந்தத் தத்துவத்தை செயல்கள் மூலம் வாழ்ந்து காட்டினார் என்றும், சமூகத்திற்குச் செய்யும் சேவையே சடங்குகளை விடச் சிறந்தது என்றும், சக மனிதர்கள் மீதான அன்பே பக்தியின் உண்மையான வடிவம் என்றும் அவர் நிரூபித்தார் என்றும் குறிப்பிட்டார்.
கேரளா உலகிற்கு அளித்த மாபெரும் பங்களிப்புகள் ஆதி சங்கராச்சாரியார் மற்றும் ஸ்ரீ நாராயண குரு ஆவர் என்றும், அவர்களின் தத்துவங்கள் மனித சமூகத்திற்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருவதாகவும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.
இந்தியாவில் யாத்திரை என்பது சுற்றுலா அல்ல, அது ஒரு மாற்றத்திற்கானது என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், சிவகிரி இந்த நாகரிக உண்மையை எடுத்துக்காட்டுவதாக குறிப்பிட்டார். பல நூற்றாண்டுகளாகத் துறவிகள் பிராந்தியங்கள் மற்றும் மொழிகளைக் கடந்து சுதந்திரமாகப் பயணம் செய்து, மதங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தில் வேரூன்றிய இந்தியாவின் நீடித்த வலிமையை வலுப்படுத்தினர் என்று அவர் குறிப்பிட்டார். ஸ்ரீ நாராயண குருவின் போதனைகள் மூலம் இளைஞர்கள் உத்வேகம் பெறவேண்டும் என்றும் குடியரசுத் துணைத்தலைவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209736®=3&lang=1
***
TV/IR/RK/KR
(रिलीज़ आईडी: 2209847)
आगंतुक पटल : 19