குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
தெலங்கானாவின் கன்ஹா சாந்தி வனத்தில் நடைபெற்ற உலக தியான தின கொண்டாட்டங்களில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
மன அமைதிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் தியானம் இன்றியமையாதது: குடியரசுத் துணைத்தலைவர்
प्रविष्टि तिथि:
21 DEC 2025 1:21PM by PIB Chennai
குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று (21.12.2025) தெலங்கானாவில் உள்ள கன்ஹா சாந்தி வனத்தில் நடைபெற்ற உலக தியான தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆழ் மன அமைதி, உணர்வு ரீதியான நல்வாழ்வு, சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பது ஆகியவற்றில் தியானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
தியானம் என்பது கலாச்சார, புவியியல், மத எல்லைகளைக் கடந்த ஒரு உலகளாவிய நடைமுறை என்று கூறினார். இது மனத் தெளிவு, மன உணர்வுகளின் நிலைத்தன்மை, உள் மனத்தின் சிறந்த மாற்றம் ஆகியவற்றுக்கான பாதை என்று அவர் கூறினார். நவீன கால வாழ்க்கையில் தியானத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க உலக தியான தினம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
டிசம்பர் 21-ம் தேதியை உலக தியான தினமாக அறிவிக்கும் ஐநா பொதுச் சபைத் தீர்மானத்தில் இந்தியா ஆற்றிய முக்கியப் பங்கை குடியரசுத் துணைத்தலைவர் நினைவு கூர்ந்தார். மன நலத்தையும் ஆன்மீக வளர்ச்சியையும் மேம்படுத்துவதில் தியானத்தின் சக்திக்கான உலகளாவிய அங்கீகாரம் இது என்று அவர் தெரிவித்தார். தியானம், யோகா, ஆன்மீகம் போன்ற பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியங்களைக் கொண்ட இந்தியா, உலகிற்கு ஞானத்தைத் தொடர்ந்து வழங்கி வருகிறது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் தியானம் என்பது நீண்ட காலமாக மனம், ஆன்மா ஆகியவற்றின் அறிவியலாகக் கருதப்படுகிறது எனவும் இது முனிவர்கள், ஞானிகளால் வளர்க்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். பகவத் கீதை, தமிழின் உன்னத ஆன்மீக நூலான திருமந்திரம் போன்றவற்றின் கருத்துகளை அறிந்து கொண்டு, தியானத்தின் மூலம் மனதைக் கட்டுப்படுத்தினால் அது நல்லிணக்கத்துடனும் நெறிமுறையுடனும் கூடிய வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார். மக்கள் தியானத்தை அன்றாட வாழ்வில் மேற்கொள்ள வேண்டும் என்று திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
தெலங்கானா ஆளுநர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா; தெலங்கானா அமைச்சர் திரு டி. ஸ்ரீதர் பாபு உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207153®=3&lang=1
***
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2207170)
आगंतुक पटल : 13