குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் நினைவு தபால்தலையை குடியரசுத் துணைத்தலைவர் புதுதில்லியில் வெளியிட்டார்

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் வீரத்துக்கும், கோயில்கள், பாசனப் பணிகள் மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கும் குடியரசுத் துணைத்தலைவர் புகழாரம்

தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை மேம்படுத்துவதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையையும், மறைக்கப்பட்ட தமிழ் அரசர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை கௌரவிக்கும் மத்திய அரசின் முயற்சிகளையும் குடியரசுத் துணைத்தலைவர் பாராட்டினார்

प्रविष्टि तिथि: 14 DEC 2025 5:12PM by PIB Chennai

குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் (சுவரன் மாறன்) நினைவு தபால்தலையை புதுதில்லியில்  குடியரசுத் துணைத்தலைவர் இல்லத்தில் இன்று (14.12.2025) வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டிற்கு மத்திய அரசு தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவு மற்றும் முக்கியத்துவத்தைப் பாராட்டினார். காசி தமிழ் சங்கமம் போன்ற முன்முயற்சிகளையும், இதுவரை உரிய அங்கீகாரம் பெறாத தமிழ் மன்னர்கள், தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் மத்திய அரசின் தொடர்ச்சியான முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலையை வெளியிட்டது, இத்தகைய தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என குடியரசுத் துணைத்தலைவர் தெரிவித்தார்.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பண்டைய தமிழ்நாட்டின் மிகவும் புகழ்பெற்ற ஆட்சியாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார் என்றும், கி.பி. 7-ம் நூற்றாண்டிலிருந்து 9-ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டின் மையப் பகுதிகளை ஆண்ட முத்தரையர் வம்சத்தைச் சேர்ந்தவர் என்றும் குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார். திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு சுமார் நான்கு தசாப்தங்கள் ஆட்சி செய்த அவரது ஆட்சி, நிர்வாக நிலைத்தன்மை, ஆட்சி விரிவாக்கம், கலாச்சாரப் பாதுகாப்பு மற்றும் போர் வெற்றிகள்  ஆகியவற்றிற்காக போற்றப்பட்டது என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் கல்வெட்டுகள், பேரரசரின் கோயில் கொடைகள், பாசனப் பணிகள் மற்றும் தமிழ் இலக்கியத்திற்கான அவரது பங்களிப்புகளுக்கு சான்றாக விளங்குகின்றன என்றும் தெரிவித்தார். அவரது ஆட்சிக்காலம் தென்னிந்திய வரலாற்றில் சிறப்பான இடம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நினைவுகூர்ந்த குடியரசுத் துணைத்தலைவர், இந்தியாவின் பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் நாட்டிற்காக உழைத்த மகத்தான தலைவர்களின் பங்களிப்புகளை ஆவணப்படுத்தி, கௌரவித்து, பாதுகாப்பது  அவசியம் என்றும் அது ஒரு தேசிய முன்னுரிமை என்றும் தெரிவித்தார். சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவின் காலகட்டத்தில், தமிழ்நாட்டை உள்ளடக்கிய அனைத்து பகுதிகளிலிருந்தும் சுதந்திரப் போராட்ட வீரர்கள், தலைவர்கள் மற்றும் பேரரசர்களை கௌரவிக்கும் மத்திய அரசின் முயற்சிகளை அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாட்டிலிருந்தும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் கடத்தப்பட்ட 642-க்கும் மேற்பட்ட சிலைகள் மற்றும் தொல்பொருட்களை மத்திய அரசு 2014-ம் ஆண்டிலிருந்து இதுவரை  வெளிநாடுகளிலிருந்து மீட்டுள்ளது என்றும், நாட்டின் இழந்த பாரம்பரியத்தை மீட்டெடுக்க அரசு மேற்கொண்டு வரும் இத்தகைய முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றும் குடியரசுத் துணைத்தலைவர் கூறினார்.

நிகழ்ச்சியில், மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மாநிலங்களவை துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ் மற்றும் தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 2203727)

AD/SS/RJ


(रिलीज़ आईडी: 2203750) आगंतुक पटल : 72
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam