குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குஜராத்தின் ஏக்தா நகரில் தேசிய பாதயாத்திரையின் நிறைவு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்
प्रविष्टि तिथि:
06 DEC 2025 5:04PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (6.12.2025) குஜராத்தின் ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமை சிலையில் சர்தார் @150 ஒற்றுமை அணிவகுப்பு - தேசிய பாதயாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், இந்த வரலாற்று சிறப்புமிக்க தேசிய பாதயாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகுந்த கவுரமானது என்று கூறினார்.
நவம்பர் 26-ம் தேதி அரசியல் சாசன தினத்தன்று தொடங்கிய பாதயாத்திரையின் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார். 1,300- க்கும் மேற்பட்ட பாதயாத்திரைகளில் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பது சர்தார் வல்லபாய் படேல் ஏற்றிய நீடித்த ஒற்றுமையின் சுடரை நிரூபித்தது என்று அவர் குறிப்பிட்டார்.
560-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பதில் சர்தார் படேலின் வரலாற்று சாதனையை அவர் நினைவுகூர்ந்தார். "அகண்ட பாரதத்தின் வலுவான அடித்தளத்தை ஒன்றிணைத்து அமைத்ததற்காக இந்தியாவின் இரும்பு மனிதருக்கு நமது நாடு எப்போதும் கடன்பட்டிருக்கும்." என கூறினார்.
கடந்த பத்தாண்டுகளில் பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக, ராணுவ ரீதியாக இந்தியாவின் விரைவான முன்னேற்றத்தையும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான அதன் நிலையான பயணத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இளைஞர்கள் இந்தியாவின் எதிர்காலத்தின் சக்தியாக உள்ளனர் என்றும், ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் தேசிய நோக்கத்தால் வழிநடத்தப்படும்போது, புதுமை மற்றும் வளர்ச்சியில் நாட்டை உலகளாவிய தலைவராக மாற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.
இளைஞர்கள் 'போதைப்பொருட்கள் வேண்டாம்' என்று உறுதியாகக் கூற அழைப்பு விடுத்த அவர், சமூக ஊடகங்களை பொறுப்புடன் பயன்படுத்தவும், டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் சைபர் பாதுகாப்பிற்கு பங்களிக்கவும் அறிவுறுத்தினார்.
தேசிய பாதுகாப்பு குறித்து பேசிய அவர், இந்தியாவின் பாதுகாப்புத் திறன்கள் பன்மடங்கு வளர்ந்துள்ளன என்றும், ஆபரேஷன் சிந்தூர் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் உள்ள உறுதியை நிரூபிக்கும் ஒரு தீர்க்கமான தருணம் என்றும் குறிப்பிட்டார்.
நாடு 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி சீராக முன்னேறிச் செல்லும்போது, சர்தார் படேலின் கொள்கைகள் அதன் வழிகாட்டும் சக்தியாக தொடர்ந்து பரிணமிக்கும் என்று அவர் கூறினார்.
குடியரசு துணைத்தலைவராகப் பதவியேற்ற பிறகு குஜராத் மாநிலத்திற்கு முதல் முறையாகப் பயணம் மேற்கொண்டுள்ள திரு சி பி ராதாகிருஷ்ணன், முன்னதாக ஏக்தா நகரில் சர்தார் வல்லபாய் படேலுக்கு மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ்விரத், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மத்திய பஞ்சாயத்து ராஜ் மற்றும் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா, மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் திருமதி ரக்ஷா காட்சே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199824®=3&lang=1
***
AD/PKV/RJ
(रिलीज़ आईडी: 2199909)
आगंतुक पटल : 6