குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் ஆற்றிய உரை
Posted On:
26 NOV 2025 12:50PM by PIB Chennai
மாண்புமிகு குடியரசுத்தலைவர் அவர்களே, மாண்புமிகு பிரதமர் அவர்களே, மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு மத்திய அமைச்சர்களே, இரு அவைகளின் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்களே, மாண்புமிகு மாநிலங்களவை துணைத்தலைவர் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சக குடிமக்களே.
கடந்த 1949-ம் ஆண்டு, இந்த மகத்தான தினத்தில் தான் சுதந்திர இந்தியாவின் அரசியல் நிர்ணய சபையால் புனித அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2015-ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதியை அரசியல் சாசன தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். இந்த தினம், இப்போது நம் நாட்டின் குடிமக்கள் அனைவரும் கொண்டாடும் நாளாக மாறி உள்ளது.
பாபா சாகேப் டாக்டர் பீமா ராவ் அம்பேத்கர் அவர்கள், டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள், திரு என் கோபாலசாமி ஐயங்கார் அவர்கள், திரு அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள், திரு துர்கா பாய் தேஷ்முக் அவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகள் உருவாக்கிய அரசியல் சாசனம், அதன் ஒவ்வொரு பக்கத்திலும் தேசத்தின் ஆன்மாவை நாம் காணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அரசியல் நிர்ணய சபையில் இடம் பெற்றிருந்த பாரதத் தாயின் சீரிய தலைவர்களால் நமது அரசியல் சாசனம் வடிவமைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டது. நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட கோடிக்கணக்கான மக்களின் கூட்டு ஞானம், தியாகம் மற்றும் கனவுகளை இது பிரதிபலிக்கிறது.
கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கை மற்றும் லட்சியங்களைப் பூர்த்தி செய்வதற்காக வரைவுக் குழுவின் தலைசிறந்த அறிஞர்களும், அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களும் உள்ளார்ந்த கருத்துக்களை முன்வைத்தனர். அவர்களது தன்னலமற்ற பங்களிப்புகளால், உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக இந்தியா திகழ்கிறது.
நமது அரசியல் சாசனம், அறிவாற்றலில் இருந்து தோன்றி, அனுபவங்கள், தியாகங்கள், நம்பிக்கைகள் மற்றும் லட்சியங்களை உயிர் மூச்சாகக் கொண்டிருக்கிறது. இந்தியா என்பது ஒன்று, அது எப்போதும் அப்படியே இருக்கும் என்பதை நமது அரசியல் சாசனம் நிரூபித்துள்ளது.
நடைமுறைக்கு ஏற்ற மற்றும் முழுமை நிலையுடன் கூடிய அணுகுமுறையை பின்பற்றுவதன் மூலம் பல்வேறு வளர்ச்சிக் குறியீடுகளில் நம்மால் திறம்பட செயல்பட முடிந்துள்ளது. சாதாரண நிலையில் இருந்து, உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாகவும், விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும் முன்னேறும் நிலைக்கு நாம் வளர்ந்திருக்கிறோம். இதனால்தான் உலக நாடுகளே நம்மை உற்று நோக்குகின்றன.
கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 25 கோடி ஏழை மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளார்கள். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை. டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் உதவியுடன், 100 கோடி பேர் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். சாத்தியமற்றதையும் நாம் சாத்தியமாக்கி இருக்கிறோம்.
சர்தார் வல்லபாய் படேல், பகவான் பிர்சா முண்டா மற்றும் நமது தேசப்பற்றைத் தூண்டும் தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டை இந்த வருடம் நாம் கொண்டாடினோம்.
நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் வலியும், தியாகமும் நமக்கு எழுச்சியூட்டியதுடன், வருங்கால தலைமுறையினரையும் தொடர்ந்து ஊக்குவிக்கும். இந்திய இளைஞர்களின் மனதில் தேசப்பற்று, பெருமிதம் மற்றும் விசுவாசத்தை இது வளர்க்கிறது.
ஜனநாயகம் என்பது இந்தியாவிற்கு புதிய விஷயம் இல்லை. வைஷாலி போன்ற இந்தியாவின் வடக்கு பகுதிகளில் ஜனநாயகம் நிலவியதாகவும், தெற்கில் சோழ பேரரசர்கள் ‘குடவோலை’ அமைப்புமுறையை ஏற்றுக் கொண்டதாகவும் வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. அதனால் தான் இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று அழைக்கிறோம்.
நாட்டு மக்களின் உணர்வுபூர்வமான பங்களிப்பு இல்லாமல் எந்த ஒரு ஜனநாயகத்தாலும் நிலைத்திருக்க முடியாது. நமது தாய்நாட்டில், ஏழை, பணக்காரர் என்ற எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல், குடிமக்கள் அனைவரும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு எப்போதுமே குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.
பிரிவு 370 தடை நீக்கப்பட்ட பிறகு, 2024-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் பெருமளவிலான மக்கள் வாக்களித்தது, ஜனநாயகத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை உணர்த்துகிறது. அதேபோல அண்மையில் பீகாரில் நடைபெற்ற தேர்தலில் வாக்களித்தோரின் எண்ணிக்கை, குறிப்பாக, பெண் வாக்காளர்கள் அதிக அளவில் பங்கேற்றிருந்தது, மிகுந்த ஆரோக்கியமான அறிகுறியாகும்.
அரசியல் நிர்ணய சபையின் பெண் உறுப்பினர்களின் பங்களிப்புக்கு நம் அனைவரின் சார்பாகவும் நான் மரியாதை செலுத்துகிறேன். “சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதியை நாங்கள் கேட்கிறோம்”, என்ற ஹன்ஸா மேத்தா அவர்களின் பொன்னான வார்த்தைகளை நான் நினைவு கூர்கிறேன்.
கடந்த 2023-ல் நிறைவேற்றப்பட்ட பெண்களுக்கு அதிகாரமளித்தல் சட்டம், அரசியல் நிர்ணய சபையின் பெண் உறுப்பினர்களும், நமது தாய் நாட்டின் மகளிர் சக்தியும் வழங்கிய பங்களிப்புக்கு நாம் செலுத்தும் பொருத்தமான மரியாதையாகும்.
ஆற்றல் வாய்ந்த நாடாக முன்னேறுவதற்கு, தேச கட்டமைப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தாய்மார்களும், சகோதரிகளும் முன் வருவதற்கு இந்த சட்டம் சம வாய்ப்புகளை வழங்கும்.
ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாநிலங்களின் ஆளுநராக நான் பணியாற்றிய போது, பழங்குடி சமூக மக்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன்.
சுதந்திரப் போராட்டத்திலும், அரசியல் நிர்ணய சபையிலும், பழங்குடி சமூக மக்கள் மற்றும் அவர்களது தலைவர்களின் அளப்பரிய பங்களிப்பையும், தியாகத்தையும் யாராலும் மறக்க இயலாது.
விடுதலைப் போராட்டத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் மக்களின் தியாகத்தையும், இன்னல்களையும் போற்றும் வகையில் 2021 முதல் பழங்குடியின கௌரவ தினத்தை நாம் கொண்டாடத் துவங்கியிருப்பது, பெருமை தரக்கூடிய விஷயம்.
பட்டியல் இனங்கள், பட்டியல் பழங்குடிகள், பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் மற்றும் நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் சமூக நீதி மற்றும் பொருளாதார மேம்பாட்டில் நாம் கொண்டுள்ள வலிமையான உறுதிப்பாட்டை நமது அரசியல் சாசனம் பிரதிபலிக்கிறது.ஒ
நமது அரசியல் சாசனத்தால் நாம் பெருமிதம் கொள்கிறோம்; உள்ளடக்கிய உணர்வை இது தன்னகத்தே கொண்டிருக்கிறது. நமது அரசியல் சாசன முகவுரையில் இடம்பெற்றுள்ள நீதி, விடுதலை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகள், சாதி, இன, பாலின, மொழி, பிராந்திய வேறுபாடு இல்லாமல் நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் சமமான உரிமை வழங்கப்படுவதை உறுதி செய்கின்றன.
நமது தாய் நாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் சாசனத்தை உருவாக்கும் நோக்கத்தில், அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள், இரண்டு ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள் ஆலோசனை நடத்தி, விவாதங்களை மேற்கொண்டார்கள்.
அரசியல் சாசன வடிவமைப்பாளர்கள் கொண்டிருந்த அதே உணர்வுடன், இந்த அமிர்தக் காலத்தில், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை நோக்கி நாம் இப்போது பணியாற்ற வேண்டும்.
பொருளாதார ரீதியாகவும் புவிசுார் அரசியல் சூழலிலும் மாற்றத்தை சந்தித்து வரும் இன்றைய உலகில், வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது கட்டாயமாகிறது. தேர்தல் சீர்திருத்தங்கள், நீதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் நிதி சார்ந்த சீர்திருத்தங்கள் மிகவும் அவசியம்.
ஒரு தேசம், ஒரு வரி அமைப்புமுறையான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), மக்களின் வாழ்க்கையில் செழிப்பை ஏற்படுத்தி இருப்பதுடன், எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதையும் ஊக்குவிக்கிறது. சிக்கலான பல்வேறு வரி அமைப்புமுறைகளை ரத்து செய்வதற்கும், நாட்டில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளை ஒரே இரவில் அகற்றுவதற்கும் இது வழிவகை செய்தது. சாதாரண குடிமக்கள் மீது அரசு பெரும் நம்பிக்கை வைத்திருந்ததை இது நிரூபிக்கிறது.
அதேபோல ஜன்தன் வங்கிக் கணக்கு, ஆதார் மற்றும் செல்பேசி ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய ஜேஏஎம் (JAM) திட்டம், கோடிக்கணக்கான நாட்டு மக்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது. நாட்டின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் குடிமகனும், அரசு திட்டங்களின் பயன்களை முழுமையாகப் பெறுவதை, நேரடி பலன் பரிமாற்றத் திட்டம் உறுதி செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அரசிற்கும் பயனாளிக்கும் இடையே எந்த இடைத்தரகரும் செயல்படுவது இல்லை.
வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்கும் லட்சிய இலக்கை அடைவதற்கு நவீன தகவல் தொழில்நுட்பங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும்.
நாட்டு மக்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த ஒரு நாடும் தானாக உருவாகி விடாது. கடமை உணர்வுடன் நமது பொறுப்புகளை நாம் திறம்பட நிறைவேற்ற வேண்டும்.
நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி, மாநில சட்டமன்றங்களாக இருந்தாலும் சரி, உள்ளாட்சி அமைப்புகளாக இருந்தாலும் சரி, மக்கள் பிரதிநிதிகளாக, அவர்களது நியாயமான விருப்பங்களை நிறைவேற்ற பேச்சுவார்த்தை, விவாதம் மற்றும் கலந்துரையாடலை மேற்கொள்வது நமது தலையாய கடமையாகும்;
நமது அரசியல் சாசனத்தின் மதிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அதன் கூற்றுப்படி வாழ உறுதிமொழி எடுப்பதே, இந்த நாளில் நமது சிறப்பு வாய்ந்த அரசியலமைப்பிற்கு நாம் செய்யும் மகத்தான மரியாதையாகும்.
ஜெய் ஹிந்த்! இந்திய தாய்த்திருநாடு நீடுழி வாழ்க!
***
(Release ID: 2194349)
AD/BR/KR
(Release ID: 2194806)
Visitor Counter : 9