அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்தியாவின் முதல் உள்நாட்டு மரபணு சிகிச்சை அறிமுகம்: அறிவாள் செல் ரத்தசோகை நோய்க்கு எதிரான போரில் வரலாற்று மைல்கல்!

Posted On: 19 NOV 2025 5:36PM by PIB Chennai

இந்தியாவின் மருத்துவத் துறை வரலாற்றில் இன்று ஒரு மிக முக்கியமான மைல்கல் எட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின் பழங்குடியின மக்களைப் பெருமளவில் பாதித்து வரும் சிஅறிவாள் செல்' (Sickle Cell) எனப்படும் ரத்த சோகை நோயைக் குணப்படுத்தும் வகையிலான, இந்தியாவின் முதல் உள்நாட்டு "கிரிஸ்பர்" (CRISPR) மரபணு சிகிச்சையை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தொடங்கி வைத்தார்.

சுதந்திரப் போராட்ட வீரரும், பழங்குடியின மக்களின் இக்கட்டான சூழலில் ஒளிவிளக்காகத் திகழ்ந்தவருமான பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்தச் சிகிச்சைக்கு "பிர்சா 101" (BIRSA 101) என்று பெயரிடப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமானதாகும்.

இந்தச் சிகிச்சையை அறிமுகப்படுத்திப் பேசிய அமைச்சர், "இந்தியா, அறிவாள் செல் இரத்த சோகை நோய் இல்லாத தேசமாக மாறுவதற்கான தனது தீர்க்கமான பயணத்தை இன்று முறைப்படி தொடங்கியுள்ளது. இது பொது சுகாதாரம் மற்றும் மரபணு மருத்துவத் துறையில் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாகும்," என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை அறிவாள் செல் நோய் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாம் ஒரு பெரிய படியை எடுத்து வைத்துள்ளோம். அதே வேளையில், நவீன மருத்துவத் தொழில்நுட்பங்களில் 'சுயச்சார்பு பாரதம்' (ஆத்மநிர்பர் பாரத்) என்ற கனவும் இதன் மூலம் நனவாகியுள்ளது.

இந்தச் சிகிச்சையின் சிறப்பம்சம் என்னவென்றால், வெளிநாடுகளில் சுமார் 20 முதல் 25 கோடி ரூபாய் வரை செலவாகும் இதேபோன்ற சிகிச்சையை, இந்தியாவில் மிகக் குறைந்த செலவில் வழங்க முடியும் என்பதாகும். சி.எஸ்.ஐ.ஆர் - ஐ.ஜி.ஐ.பி (CSIR-IGIB) எனப்படும் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் ஆராய்ச்சி  நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், உலகளாவிய செலவில் ஒரு சிறிய பகுதி மட்டுமே ஆகும். இது மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

இந்தத் தொழில்நுட்பத்தை எளிமையாக விளக்கிய அமைச்சர், "இது ஒரு துல்லியமான 'மரபணு அறுவை சிகிச்சை' (Genetic Surgery) போன்றது. இது நோயைக் குணப்படுத்துவது மட்டுமல்லாமல், பரம்பரை நோய்களுக்கான சிகிச்சை முறைகளையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டது," என்று விவரித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சி.எஸ்.ஐ.ஆர் தலைமை இயக்குனர் டாக்டர் கலைச்செல்வி, சீரம் இன்ஸ்டிட்யூட் இயக்குனர் டாக்டர் உமேஷ் ஷாலிகிராம் மற்றும் பல மூத்த விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். அறிவியல் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இத்தகைய கண்டுபிடிப்புகளை எளிய மொழியில் விளக்கப்படங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு அறிவியல் நிறுவனங்களை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191740

வெளியிட்டு அடையாள எண்:2191740

***

AD/VK/SH


(Release ID: 2191893) Visitor Counter : 7