மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மீன்வளத் துறை சார்பில் உலக மீன்வள தினம் நவம்பர் 21 அன்று புதுதில்லியில் கொண்டாடப்படுகிறது
Posted On:
19 NOV 2025 3:28PM by PIB Chennai
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மீன்வளத் துறை, உலக மீன்வள தினம் 2025-ஐ நவம்பர் 21 அன்று புதுதில்லி சுஷ்மா ஸ்வராஜ் பவன் வளாகத்தில் கொண்டாட உள்ளது. இந்தாண்டின் கருப்பொருள் இந்தியாவின் நீல மாற்றம்: கடல் உணவு ஏற்றுமதியில் மதிப்புக்கூட்டலை வலுப்படுத்துதல் என்பதாகும். இது இந்தியாவின் கடல் மற்றும் நீர்வாழ் வளங்களை உயர்மதிப்புடைய, உலகளாவிய போட்டித்திறன் கொண்ட தயாரிப்புகளாக மாற்றும் உறுதியை பிரதிபலிக்கிறது.
தொடக்க நிகழ்ச்சியில், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் அவர்கள் காணொலி மூலம் கலந்து கொள்ள உள்ளார். மேலும், மத்திய இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல் மற்றும் மத்திய இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பல்வேறு பிரதிநிதிகள், குறிப்பாக சுமார் 27 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் நேரடியாகக் கலந்து கொள்வது, நீலப் பொருளாதாரத் துறையில் இந்தியாவின் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மீன்வளம் மற்றும் நீர்வளத்துறைக்கான தேசிய தடமறிதல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. இந்த நெறிமுறைகள், நாட்டின் மீன்வளம் மற்றும் நீர்வாழ் வளங்கள் உற்பத்திக்காக மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தடமறிதல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விதிமுறைகளை எளிதில் பின்பற்றுதல், உணவுப் பாதுகாப்பு, நிலைத்தன்மை, ஏற்றுமதி சந்தைகளுக்கான அணுகல் ஆகியவை மேம்படுத்தப்படும்.
மேலும் இந்நிகழ்ச்சியில் இரண்டு கலந்துரையாடல் அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மீன்வளம் மற்றும் நீர்வளத்தில் மதிப்புக்கூட்டல் என்ற முதல் அமர்வில், தயாரிப்புப் பல்வகைப்படுத்தல், புதுமை, தரநிலைகள், சான்றிதழ் முறைகள் மற்றும் உள்கட்டமைப்பு வலுப்படுத்துதல் போன்ற தலைப்புகள் விவாதிக்கப்படுகின்றன. தொடர்ந்து, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏற்றுமதி திறனை மேம்படுத்துதல் என்ற இரண்டாவது அமர்வில், குறிப்பாக மீன்வகைகளின் ஏற்றுமதி வாய்ப்புகளை பற்றி நிபுணர்கள் கருத்துரைகளை வழங்குகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191658
(Release ID: 2191658)
***
AD/SE/SH
(Release ID: 2191798)
Visitor Counter : 12