ஆயுஷ்
எஸ்விசிசி, கோனயூர் அமைப்புகள் இணைந்து நடத்திய சர்வதேச ஆயுர்வேத மாநாடு சாவ் பாலோவில் நடைபெற்றது பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியா - பிரேசில் இடையேயான ஒத்துழைப்பை எடுத்துக்காட்டியது
Posted On:
16 NOV 2025 10:13AM by PIB Chennai
மூன்றாவது சர்வதேச ஆயுர்வேத மாநாடு பிரேசிலின் சாவ் பாலோ நகரில் நடைபெற்றது. அங்குள்ள சுவாமி விவேகானந்தா கலாச்சார மையமும் (எஸ்விசிசி), பிரேசிலில் உள்ள ஆயுர்வேத அமைப்பான கோனயூர் அமைப்பும் இணைந்து 2025 நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் இந்த மாநாட்டை நடத்தின. இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த இரண்டு நாள் நிகழ்வு, பிரேசிலில் ஆயுர்வேத மருத்துவம் பின்பற்றப்படுவதன் 40 ஆண்டுகள் நிறைவை நினைவுகூர்வதாக அமைந்தது. இதில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்தும் இந்தியாவிலிருந்தும் ஆயுர்வேத நிபுணர்கள், மருத்துவர்கள், அறிஞர்கள், மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் "ஆயுர்வேதத்தில் பன்முகத்தன்மையும் உள்ளடக்கமும்: அனைத்து உயிரினங்களுக்குமான மருத்துவ சேவை" என்ற கருப்பொருளில் விவாதங்கள் நடைபெற்றன. இந்த மாநாட்டை பிரேசிலுக்கான இந்திய தூதர் திரு தினேஷ் பாட்டியா தொடங்கி வைத்துப் பேசினார். பாரம்பரிய மருத்துவ முறைகளில் இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் இடையே அதிகரித்து வரும் ஒத்துழைப்பை அவர் எடுத்துரைத்தார். ஆயுர்வேதத்தில் ஆராய்ச்சிகள், சர்வதேச ஒத்துழைப்பு மூலம் வலுப்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். 2025 டிசம்பர் 17 முதல் 19 வரை புதுதில்லியில் உலக சுகாதார அமைப்பும் ஆயுஷ் அமைச்சகமும் இணைந்து பாரம்பரிய மருத்துவம் குறித்த உலகளாவிய உச்சி மாநாட்டை நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஆயுர்வேத மருத்துவ முறையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் தென் அமெரிக்க நாடாக பிரேசில் திகழ்வதை இந்திய தூதர் பாராட்டினார். ஆயுர்வேதத்தையும் இந்திய கலாச்சாரத்தையும் மேம்படுத்துவதில் சுவாமி விவேகானந்தா கலாச்சார மையத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் வைத்ய ராஜேஷ் கோடேச்சா, ஆயுர்வேத மருத்துவ முறையானது, உடல், மனம், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் முழுமையான சமநிலையை உள்ளடக்கியது என்பதை எடுத்துரைத்தார். பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியா-பிரேசில் ஒத்துழைப்பு, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சுவாமி விவேகானந்தா கலாச்சார மையத்தின் இயக்குநர் டாக்டர் ஜோதி கிரண் சுக்லா-வும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். இந்த மாநாட்டில் கருப்பொருள் அடிப்படையிலான உரை நிகழ்ச்சிகள், விவாத அமர்வுகள், பிரேசிலில் ஆயுர்வேத மருத்துவத்தின் தொழில்முறை நடைமுறைகள் தொடர்பான விவாதம் உள்ளிட்டவை இடம்பெற்றன.
***
(Release ID: 2190467)
SS/PLM/RJ
(Release ID: 2190502)
Visitor Counter : 4