பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
இந்தியா-தென்கொரியா இடையே கடல்சார் ஒத்துழைப்பு வலுவடையும் - அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி
Posted On:
15 NOV 2025 4:41PM by PIB Chennai
தென் கொரியாவின் ஜியோஜி நகரில் ஹன்வா ஓஷன் நிறுவனத்தின் பரந்த கப்பல்கட்டுமான தளத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி இன்று பார்வையிட்டார்.
அரசுமுறைப் பயணமாக தென் கொரியா சென்றுள்ள அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையேயான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், கப்பல் கட்டுமானம், கடற்படை மேம்பாடு மற்றும் எரிசக்தி போக்குவரத்து போன்ற துறைகளில் உள்ள வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவின் வர்த்தகம் சார்ந்த கடற்படைத் திறனை கணிசமாக அதிகரிக்கவும், உள்நாட்டு கப்பல் கட்டுமானப் பணிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கடல்சார் பொறியியல் மற்றும் அது சார்ந்த பல்வேறு துறைகளில் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்தவும், இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக நவம்பர் 13 - முதல் 15 - ம் தேதி வரையிலான அவரது இந்தப் பயணம் அமைந்துள்ளது.
ஹன்வா ஓஷன் நிறுவனத்தின் கப்பல் கட்டுமானத் திறன்கள், மேம்பட்ட கப்பல் கட்டுமான செயல்முறைகள் மற்றும் கடல்சார் தொழில்நுட்பங்களில் புதுமைகள் குறித்து அமைச்சருக்கு விளக்கப்பட்டது. உலகளவில் விரைவான வளர்ச்சி கண்டு வரும் இந்திய பொருளாதாரத்தின் வலுவான செயல்திறன், நாட்டின் எரிசக்தி துறையின் விரிவாக்க நடவடிக்கைகளுடன் இணைந்து செயல்படுவதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை உருவாக்குகிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். இந்தியாவின் எரிசக்தித் துறையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் ஆண்டுதோறும் 5 முதல் 8 பில்லியன் அமெரிக்க டாலர்களை சரக்கு போக்குவரத்துக்காக செலவிடுகின்றன என்றும், நாட்டில் 59 கப்பல்களுக்கான உடனடித் தேவை இருப்பதாகவும் அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி கூறினார். ஹன்வா ஓஷன் போன்ற உலகளாவிய நிறுவனங்கள், கப்பல் கட்டுமானத்த துறையில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட இது ஒரு பெரிய வாய்ப்பை வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
கொரிய கப்பல் கட்டுமான நிறுவனம் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும், அனுபவத்தையும் கொண்டுள்ளது என்றும், அதே சமயம், இந்தியாவில் உள்ள வலுவான தேவை, திறமையான மனிதவளம் மற்றும் அரசின் கொள்கைகள் இதற்கு ஆதரவாக உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்தியாவின் மேக் இன் இந்தியா முயற்சி குறித்து எடுத்துரைத்த அமைச்சர், நாட்டின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மட்டுமின்றி, உலகளாவிய சந்தைகளுக்கு சேவை செய்வதற்கும் கப்பல்களை உருவாக்க உதவிடும் என்றார். இத்தகைய கூட்டு நடவடிக்கைகள் மூலம் கட்டப்படும் கப்பல்கள் ஐந்து ஆண்டுகளுக்குள் அதற்கான செலவுகளை மீட்டெடுக்கும் என்றும், உலகின் கடல்சார் மையமாக இந்தியா உருவெடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190325
(Release ID: 2190325)
***
SS/SV/SH
(Release ID: 2190382)
Visitor Counter : 6