அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியாவின் மனித விண்வெளிப் பயண ஆராய்ச்சியை மேம்படுத்தும் முயற்சியில் சிஎஸ்ஐஆர்-இஸ்ரோ
Posted On:
14 NOV 2025 1:01PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்), இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) ஆகியவை இணைந்து விண்வெளி சந்திப்பு 2025 ஐ நவம்பர் 17 அன்று பெங்களூருவில் நடத்தவுள்ளன. மனித விண்வெளிப் பயண ஆராய்ச்சி, நுண் ஈர்ப்பு விசை ஆய்வுகள் மற்றும் விண்வெளி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதில் இந்தியாவின் முதன்மையான அறிவியல் மற்றும் விண்வெளி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும். இது இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் தற்சார்பு என்ற தொலைநோக்குப் பார்வையுடன் பொருந்தும்.
இந்தச் சந்திப்பு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் செயலாளரும், சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநருமான டாக்டர் என் கலைச்செல்வி, விண்வெளித் துறையின் செயலாளரும் இஸ்ரோவின் தலைவருமான டாக்டர் வி நாராயணன் ஆகியோரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்படும். விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், விண்வெளி வீரர்கள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 150 முதல் 200 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூருவில் உள்ள பிரான்ஸ் துணைத்தூதர், டிஆர்டிஓ, ஐஐஎஸ்சி, ஐஏஎப் அதிகாரிகள் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம், பிரெஞ்சு விண்வெளி நிறுவனம் ஆகியவற்றின் நிபுணர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.
சிஎஸ்ஐஆர்-ன் பல்துறை ஆராய்ச்சியை இஸ்ரோவின் பணி சார்ந்த தொழில்நுட்பத் தேவைகளுடன் ஒருங்கிணைப்பதில் இந்தச் சந்திப்பு கவனம் செலுத்தும். மனித விண்வெளிப் பயண உடலியல், உயிரி மருத்துவ கருவி, பொருள் அறிவியல், நுண் ஈர்ப்பு விசையில் உயிர் அறிவியல், விண்கலப் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டிற்கான மேம்பட்ட அமைப்புகள் போன்ற முக்கிய ஒத்துழைப்புத் துறைகளை இந்த மாநாடு உள்ளடக்கும். விண்வெளியில் தாவரங்களின் வளர்ச்சி, விண்வெளி உணவின் வளர்ச்சி, நுண் திரவவியல், பீங்கான் மெட்டா பொருட்கள் மற்றும் நுண்ணுயிர் அரிப்பு தடுப்பு போன்ற துறைகளில் புதுமைகளையும் இந்த விவாதங்கள் ஆராயும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189939
***
SS/PKV/AG/SH
(Release ID: 2190170)
Visitor Counter : 8