PIB Headquarters
நகர்ப்புற மையங்களில் இருந்து ஊரகப் பகுதிகளுக்கு கல்வியின் சமத்துவத்தை கொண்டு செல்லும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகள்
Posted On:
10 NOV 2025 2:12PM by PIB Chennai
நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்திய கல்விமுறை முக்கிய பங்களிப்பை செய்கிறது. லட்சக்கணக்கான மாணவர்களின் அறிவை, திறன்களை, மாண்புகளை இக்கல்வி வளர்க்கிறது. சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கான மைல்கல்லாக இது சேவையாற்றுகிறது. இந்தக் கட்டமைப்புக்குள் கேந்திரிய வித்யாலயா சங்கதன், ஜவஹர் நவோதயா வித்யாலயா ஆகியவை மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்புகளாக செயல்படுகின்றன. இவை இரண்டும் நாடு முழுவதும் உயர்தரமான, சமமான கல்வி வழங்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு, துணை ராணுவப்படைகள் உள்ளிட்ட மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களின் பிள்ளைகள், இதர வகைமைகளில் பொதுமக்களின் குழந்தைகள், ஒற்றை பெண் குழந்தை ஆகியோருக்கு ஒரே சீரான தரமான ஆரம்ப கல்வி வழங்குவதில் கேந்திரிய வித்யாலயா சங்கதன் கவனம் செலுத்துகிறது. தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப தேசிய ஒருமைப்பாட்டையும், கல்வி சார்ந்த மேன்மையையும் இது மேம்படுத்துகிறது.
மறுபக்கம் நவோதயா வித்யாலயா தகுதி அடிப்படையிலான தெரிவின் மூலம் கிராமப்புறங்களைச் சேர்ந்த திறமையான குழந்தைகளுக்கு கட்டணமின்றி உண்டு உறைவிட கல்வியை வழங்குகிறது. மேலும் நகர்ப்புற-கிராமப்புற கல்விப் பாகுபாட்டை போக்குவதும், ஒட்டுமொத்த வளர்ச்சியை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
இந்திய பள்ளிக்கல்வி முறையில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமபங்கு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு புவியியல் சூழல்களில் உள்ள 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு இந்த நிறுவனங்கள் கூட்டாக சேவை செய்கின்றன.
அனைத்து கேந்திரிய வித்யாலயாக்களும், மத்திய மேல்நிலை கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை மழலையர் பள்ளி முதல் 12-ம் வகுப்பு வரை இந்த வாரியத்தின் பாடத்திட்டங்களையே பின்பற்றுகின்றன. நவோதயா வித்யாலயாக்களை பொறுத்தவரை 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றுவதோடு மும்மொழி கொள்கையையும் அமலாக்குகின்றன.
2026-27 முதல் 9 ஆண்டு காலத்தில் ரூ.5,862.55 கோடி ஒதுக்கீட்டில் நாடு முழுவதும் 57 புதிய கேந்திரிய வித்யாலயாக்களை அமைக்க 2025 அக்டோபர் 1 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2024-25 முதல் 2028-29 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் ரூ.2,359.82 கோடி ஒதுக்கீட்டுடன் 28 புதிய நவோதயா வித்யாலயாக்கள் அமைக்க மத்திய அரசு 2024 டிசம்பர் 06 அன்று ஒப்புதல் அளித்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188297
***
SS/SMB/AG/SH
(Release ID: 2188463)
Visitor Counter : 6