PIB Headquarters
மன நலம் தொடர்பான உலகளாவிய கண்ணோட்டங்களும் இந்தியாவின் முன்முயற்சிகளும்
Posted On:
09 NOV 2025 3:05PM by PIB Chennai
மனநலம் என்பது மகிழ்ச்சியாக இருப்பது அல்லது நல்ல மனநிலையில் இருப்பது என்பது மட்டுமே அல்ல. அது நமது மனஉணர்ச்சிகள், சமூக சூழல், அறிவாற்றல், உடல் திறன்கள் அனைத்தையும் உள்ளடக்கியது. நமது மன ஆரோக்கியத்தை நாம் நன்கு கவனித்துக் கொண்டால் வாழ்க்கையின் சவால்களைக் கடந்து சென்று, வாழ்க்கையை முழுமையாக வாழ முடியும்.
மனநலம் என்பது ஒரு அடிப்படை மனித உரிமையாகும். அது தனிப்பட்ட, சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. கடந்த சில ஆண்டுகளில், மனநலப் பிரச்சினைகள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு, அவை குறித்த விவாதம் அதிகரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தகவல்படி,2021-ம் ஆண்டில், உலக அளவில் 7 பேரில் ஒருவர் மனநல பிரச்சினைகளுடன் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், 100 பேரில் சுமார் 11 பேர் மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். அனைத்து வயதினரிடையேயும் மனச்சோர்வும், பதற்றமும் உள்ளன. உலகளாவிய நோய் சுமையில் மனநல பிரச்சினைகள் 5.2% ஆகும். இவை, மனநலப் பிரச்சினைகள் ஒரு சவாலாக உருவெடுத்துள்ளதைக் காட்டுகின்றன.
இந்தியாவில் மனநலம்:
இந்தியாவில் பெரியவர்களில் சுமார் 10.6% பேர் மனநல பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருவதாக, தேசிய மனநல - நரம்பியல் நிறுவனமான நிம்ஹான்ஸ் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
ஆய்வில் தெரிய வந்த முக்கிய அம்சங்கள்:
* இந்தியாவில் ஒவ்வொரு 100 பேரிலும் 14 பேர் தங்கள் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் மனநல பிரச்சினைகளை அனுபவிக்கின்றனர்.
* மனநலக் பிரச்சினைகள் கிராமப்புறங்களை விட (6.9%) நகர்ப்புறங்களில் (13.5%) அதிகமாகக் காணப்படுகின்றன.
* நிம்ஹான்ஸ் ஆய்வின்படி, ஆண்களை விட (10%) பெண்களிடையே மனநலக் பிரச்சினைகள் (20%) அதிகமாகக் காணப்படுகின்றன.
* இந்தியாவில் தற்கொலை விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. 2023-ம் ஆண்டில் நாட்டில் 1,71,418 தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
* தற்கொலைகளிலும் ஆண்கள் விகிதம் 72.8% ஆகவும், பெண்கள் விகிதம் 27.2% ஆகவும் உள்ளது.
சிகிச்சை:
மனநலக் பிரச்சினை உள்ளவர்களில் 70% முதல் 92% பேர் வரை முறையான சிகிச்சை பெறுவது இல்லை. விழிப்புணர்வு இல்லாமை, தயக்கம், சமூக காரணங்கள், மன நல நிபுணர்கள் பற்றாக்குறை போன்றவை இதற்கு காரணங்களாகும்.
தாக்கங்கள்:
* மோசமான மன ஆரோக்கியம் மக்களின் சமூக-பொருளாதார வளர்ச்சியிலும் பரந்த அளவிலான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
* மன ஆரோக்கியத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. மனச்சோர்வு உள்ளவர்கள் இதய நோய்கள் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
மன நலத்தில் கோவிட்-19-ன் தாக்கம்:
* கோவிட்-19 தொற்றுநோய் உலகளாவிய மன ஆரோக்கியத்தில் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
* தொற்றுநோய் காலத்தில் பதட்டக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 25% வரை அதிகரித்தது.
* தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மக்களிடையே விரக்தி உணர்வுகளுக்கு வழிவகுத்தன.
* வேலை இழப்புகளால் நிதி பாதுகாப்பின்மை ஏற்பட்டு மன அழுத்தம் அதிகரித்தது.
உலகளாவிய கொள்கைகள்:
உலக சுகாதார அமைப்பில் உள்ள அனைத்து உறுப்பு நாடுகளும் "விரிவான மனநல செயல் திட்டத்தை செயல்படுத்த உறுதிபூண்டுள்ளன. இது மனநலத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் செயல்பாடுகள்:
* தேசிய மனநலத் திட்டம் – நாட்டில் மனநல பிரச்சினைகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்வதற்காக இத்திட்டம் 1982-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
* மாவட்ட மனநலத் திட்டம் - இது 1996 -ம் ஆண்டில் 4 மாவட்டங்களில் தொடங்கப்பட்டு, இப்போது 767 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
* தேசிய தற்கொலை தடுப்பு உத்தி - தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கில் இது மத்திய சுகாதார அமைச்சகத்தால்
2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஆயுஷ்மான் பாரத் மூலம் மனநலப் பராமரிப்பை வலுப்படுத்துதல்:
ஒட்டுமொத்த நல்வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக மனநலப் பராமரிப்பை அங்கீகரித்து, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் மூலம் மனநல சேவைகள் வழங்கப்படுகின்றன.
*டெலி மனாஸ் கட்டணமில்லா மனநல சேவையின் மூலம் கட்டணமில்லா எண்கள் 14416,
1-800-891-4416 ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மனநலம் என்பது உலகளாவிய சவாலாகவே உள்ளது. இது தனிநபர்களிடையேயும் சமூகத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. டெலி மனாஸ், தேசிய மனநலத் திட்டம் போன்ற முயற்சிகள் மூலம் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. முழு மனநலத்துடன் கூடிய சமூகத்தை உருவாக்குவதற்கு முழுமையான சமூக அணுகுமுறையைப் பின்பற்றுதல் அவசியமானதாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188003
***
SS/PLM/RJ
(Release ID: 2188067)
Visitor Counter : 10