குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

கர்நாடகாவின் ஷ்ரவண பெலகோலாவுக்கு ஆச்சார்ய ஸ்ரீ 108 சாந்திசாகர் மகாராஜ் சென்றதன் நூற்றாண்டு விழா - குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

தமிழ்நாட்டுக்கும் சமணத்துக்கும் ஆழமான வரலாற்றுத் தொடர்பு உள்ளது - குடியரசுத் துணைத்தலைவர்

Posted On: 09 NOV 2025 3:42PM by PIB Chennai

1925-ம் ஆண்டு மகாமஸ்தகாபிஷேக விழாவிற்காக ஆச்சார்ய  ஸ்ரீ  சாந்திசாகர் மகாராஜ், ஷ்ரவண பெலகோலா புனித தலத்திற்கு வருகை தந்ததன் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், கர்நாடகாவின் ஷ்ரவணபெலகோலாவில் இன்று (09.11.2025) நடைபெற்ற பரமபூஜ்ய ஆச்சார்ய ஸ்ரீ 108 சாந்திசாகர் மகாராஜின் நினைவஞ்சலி விழாவில்  குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆச்சார்ய ஸ்ரீ  சாந்திசாகர் மகாராஜின் சிலையையும் திரு சி பி  ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், திகம்பர மரபை உயிர்ப்பிப்பதில் ஆச்சார்ய ஸ்ரீ சாந்திசாகர் மகாராஜின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். சமணக் கொள்கைகளின் உருவகமாக உள்ள அவரது வாழ்க்கையை குடியரசுத் துணைத்தலைவர் பாராட்டினார். அமைதியின்மை நிறைந்த ஒரு யுகத்தில், ஆச்சார்ய ஸ்ரீ சாந்திசாகர் மகாராஜின் வாழ்க்கை, உண்மையான சுதந்திரம் உள் அமைதியில் உள்ளது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது என்று குடியரசுத் துணைத்தலைவர் கூறினார்.

இந்த நூற்றாண்டு விழாவின் மூலம், ஷ்ரவணபெலகோலாவில் உள்ள திகம்பர ஜெயின் மடம், வருங்கால தலைமுறையினருக்கு ஆன்மீகச் சுடரை ஏற்றி வைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். புதிதாகத் திறக்கப்பட்ட சிலை ஒவ்வொருவருக்கும் எளிமை, தூய்மை, இரக்கம் ஆகியவற்றின் சக்தியை நினைவூட்டும் அடையாளமாகத் திகழும் என்று அவர் கூறினார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சமண மத மையமாக விளங்கும் ஷ்ரவணபெலகோலாவின் புகழ்பெற்ற வரலாற்றை அவர் நினைவு கூர்ந்தார்.

 சமணத்துடன் தொடர்புடைய பிராகிருத மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதற்காகவும், சமண கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கும் ஞான பாரதம் இயக்கத்துக்காகவும் மத்திய அரசுக்கு குடியரசுத் துணைத்தலைவர் பாராட்டு தெரிவித்தார். இந்தியாவின் வளமான கலாச்சார, ஆன்மீக பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான இந்த முயற்சிகள் பாராட்டத்தக்கவை என அவர் கூறினார்.

 தமிழ்நாட்டிற்கும் சமண மதத்திற்கும் இடையிலான வலுவான வரலாற்றுத் தொடர்பை அவர் சுட்டிக் காட்டினார். சங்க காலத்திலும், தமிழ் இலக்கியங்களிலும், தமிழ் கலாச்சாரத்திலும் சமண மதத்தின் ஆழமான பங்களிப்புகள் உள்ளதாக அவர் கூறினார். சிலப்பதிகாரம் போன்ற  படைப்புகளில் இது பிரதிபலிப்பதாக திரு சி பி ராதாகிருஷ்ணன் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் திரு ஹெச் டி குமாரசாமி, கர்நாடக வருவாய் துறை அமைச்சர் திரு கிருஷ்ண பைரே கௌடா, கர்நாடக புள்ளியியல் துறை அமைச்சர் திரு டி சுதாகர், ஷ்ரவணபெலகோலா திகம்பர ஜெயின் மகாசமஸ்தான மடத்தின் துறவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 2188020)

SS/PLM/RJ


(Release ID: 2188043) Visitor Counter : 10