விவசாயத்துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் நாளை ஒடிசா செல்கிறார் - வேளாண் வளர்ச்சி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
Posted On:
09 NOV 2025 11:45AM by PIB Chennai
மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், நாளை (நவம்பர் 10, 2025 - திங்கட்கிழமை) ஒடிசா மாநலத்திற்குச் பயணமாக செல்கிறார். இந்தப் பயணத்தின் போது, விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல், பயிர்களின் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்தல், மாநிலத்தில் இயற்கை விவசாய நடைமுறைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட முக்கிய நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவுள்ளார்.
நாளை காலை 11:00 மணிக்கு புவனேஸ்வர் செல்லும் அவர், லோக் சேவா பவனில் அமைந்துள்ள மாநாட்டு மையத்தில் நடைபெறும் 'மண்டியா திபாசா' நிகழ்ச்சியின் தொடக்க அமர்வில் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்வில் சிறுதானிய உற்பத்தி, பதப்படுத்துதல், நுகர்வு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான மத்திய அரசின் முயற்சிகளை அவர் எடுத்துரைப்பார். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் ஒரு கருவியாக சிறுதானியங்களை ஊக்குவிப்பது குறித்த விவாதங்களும் இந்த நிகழ்வில் இடம்பெறும்.
பின்னர் கட்டாக் மாவட்டத்தின் சதார் பகுதிக்குச் சென்று, விவசாயிகளுடன் நேரடி கலந்துரையாடலில் அவர் ஈடுபடுகிறார். அவர்களின் அனுபவங்கள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி அவர் கேட்டறிகிறார். இந்த நிகழ்வின் போது, மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு விவசாயத் திட்டங்களின் கள நிலையை அவர் மதிப்பிட்டு ஆய்வு செய்யவுள்ளார்.
பிற்பகலில், கட்டாக்கின் பித்யாதர்பூரில் உள்ள ஐசிஏஆர் - மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் கூட்டத்தில் மத்திய வேளாண் அமைச்சர் பங்கேற்பார். இதில் பருப்பு வகைகளில் தன்னிறைவு இயக்கம், இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம் போன்றவற்றை வலுப்படுத்துவது குறித்த விரிவான விவாதங்கள் இடம்பெறும்.
வேளாண் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ஐசிஏஆர் விஞ்ஞானிகள், ஒடிசா அரசின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சர் திரு சௌகான் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, ஆய்வுகளைச் செய்து வருகிறார். விவசாயத்தில் வெற்றி பெறுவதற்கு விவசாயிகளுடன் நேரடி தொடர்பு மூலம் கள யதார்த்தங்களைப் புரிந்துகொள்வது அவசியம். அமைச்சரின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் இந்த அணுகுமுறையை பிரதிபலிக்கின்றன.
நவீன விவசாய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, மேம்படுத்தப்பட்ட விதை வகைகள், பண்ணை இயந்திரமயமாக்கல், மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தி ஆகியவை தொடர்பான அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதையும் அமைச்சரின் செயல்பாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாலையில், அனைத்து நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, திரு சிவராஜ் சிங் சௌகான் புவனேஸ்வரில் இருந்து விஜயவாடாவுக்குப் புறப்படுகிறார். மறுநாள் (நவம்பர் 11, 2025) அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
***
(Release ID: 2187973)
SS/PLM/RJ
(Release ID: 2188014)
Visitor Counter : 4