குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளைக் கேட்டறிந்தார்
Posted On:
06 NOV 2025 6:22PM by PIB Chennai
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு, குடியரசு துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான பல்கலைக்கழகத்தின் அலுவல் lசார் வேந்தர் திரு சி. பி. ராதாகிருஷ்ணனை இன்று நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, பல்கலைக்கழகத்தின் கல்விப் படிப்புகள் மற்றும் செயல்பாடுகள், உள்கட்டமைப்பு வசதிகள், மாணவர் நல நடவடிக்கைகள், ஆராய்ச்சி மற்றும் புதுமை சூழலியலை மேம்படுத்துதல், முன்னாள் மாணவர்களின் ஈடுபாடு, வளாக வேலைவாய்ப்புகள் மற்றும் வளாகத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மாணவர்களுக்கான வசதிகளை முறையாக உறுதி செய்தல், தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த மேம்பட்ட படிப்புகளை அறிமுகப்படுத்துதல், வளாகத்தில் தூய்மை இந்தியா முயற்சிகளை ஊக்குவிப்பதன் மூலம் தூய்மையைப் பராமரித்தல், பட்டியல் இன/ பட்டியல் பழங்குடி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு இடங்கள் முறையாக நிரப்பப்படுவதை உறுதி செய்தல், உள்ளூர் சமூகங்களுக்கு போதுமான பிரதிநிதித்துவத்தை வழங்குதல் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பு ஆகியவற்றின் அவசியத்தை குடியரசு துணைத்தலைவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
பயனுள்ள குறை தீர்க்கும் வழிமுறைகளை நிறுவுதல், போதைப்பொருள் பயன்பாட்டின் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மாணவர்களுக்கு ஆலோசனை மற்றும் ஊக்குவிப்பு வகுப்புகளை நடத்துதல் ஆகியவற்றையும் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
பல்கலைக்கழகத்தின் தரவரிசையை மேம்படுத்துதல், முழுமையான மாணவர் மேம்பாட்டில் கவனம் செலுத்துதல், இணைப்புக் கல்லூரிகளின் தொடர்ச்சியான கண்காணிப்பை உறுதி செய்தல் மற்றும் சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை குடியரசு துணைத்தலைவர் மேலும் எடுத்துரைத்தார்.
1985-ம் ஆண்டு நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட புதுச்சேரி பல்கலைக்கழகம், யூனியன் பிரதேசத்தின் காலாப்பட்டில் அமைந்துள்ள ஒரு மத்திய பல்கலைக்கழகமாகும். இது இப்பகுதியில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான முக்கிய மையமாக செயல்படுகிறது. 10,000க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் பல்வேறு துறைகளில் 100 க்கும் மேற்பட்ட இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளை இந்த நிறுவனம் வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2187068
(Release ID: 2187068)
***
AD/BR/SH
(Release ID: 2187172)
Visitor Counter : 4