குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
வாரணாசியில் நகரத்தார் சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட புதிய சத்திரத்தைத் திறந்து வைத்து காசி-தமிழ்நாடு இடையையான கலாச்சார இணைப்பை குடியரசு துணைத்தலைவர் பாராட்டினார்
Posted On:
31 OCT 2025 8:46PM by PIB Chennai
வாரணாசியின் சிக்ராவில் ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திர கட்டிடத்தை குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி ராதாகிருஷ்ணன் இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத்தலைவர், காசி மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே உள்ள ஆன்மீக மற்றும் கலாச்சார தொடர்பை அடிக்கோடிட்டு காட்டினார். தாங்கள் செல்லும் இடமெல்லாம் தமிழ் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நிலையான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நகரத்தார் சமூகத்தினரின் அர்ப்பணிப்பை அவர் வெகுவாகப் பாராட்டினார். 60 கோடி ரூபாய் மதிப்பிலான சத்திரத்தை முற்றிலும் நன்கொடைகளின் வாயிலாக நிர்மாணித்ததற்காக அந்த சமூகத்திற்கு தனது பாராட்டுகளை திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துக்கொண்டார். பிராந்தியங்களுக்கு இடையேயான நம்பிக்கை, மீள்தன்மை மற்றும் ஒருங்கிணைப்பின் சின்னமாக இந்தப் புதிய கட்டிடம் திகழும் என்றார் அவர்.
ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திர நிர்வாக சங்கம், 60 கோடி ரூபாய் மதிப்பில் 140 அறைகள் கொண்ட 10 மாடி சத்திரத்தை நிர்மாணித்துள்ளது. வாரணாசியில் இந்த சங்கத்தால் கட்டமைக்கப்பட்டுள்ள இரண்டாவது சத்திரமான இது, பக்தர்களுக்கு சேவை செய்வதையும், இளம் தலைமுறையினர் புனித நகருக்கு வருவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்வு, 1863 ஆம் ஆண்டு நாட்டுக்கோட்டை அறக்கட்டளையால் முதல் சத்திரம் நிறுவப்பட்டதிலிருந்து, காசிக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால புனித யாத்திரை பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
நிகழ்ச்சிக்குப் பிறகு, குடியரசு துணைத்தலைவர், காசி விஸ்வநாதர் ஆலையத்திற்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். கோயில் வளாகத்திற்குள் அமைந்துள்ள அன்னபூரணி தேவி சன்னதியிலும் அவர் பிரார்த்தனை செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184928
(Release ID: 2184928)
***
AD/BR/SH
(Release ID: 2184967)
Visitor Counter : 14