குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத்தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டுக்கு முதல் முறையாக வருகை தந்த திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கு கோவை மற்றும் திருப்பூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
Posted On:
28 OCT 2025 7:19PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு திரு சி பி ராதாகிருஷ்ணன், தனது முதல் பயணமாக தமிழ்நாட்டுக்கு இன்று (அக்டோபர் 28–30, 2025) கோவை வந்தார். கோவை சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், கோவை கோடிசியா அரங்கில், கோவை மக்கள் மன்றத்தால் திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கு ஒரு பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தப்பட்டது. மக்களின் அன்பிற்கு நன்றி தெரிவித்த குடியரசு துணைத்தலைவர், சேவை, ஒருமைப்பாடு மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றின் மதிப்புகள் பற்றிப் பேசினார். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க கூட்டு முயற்சிகளின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
கோவையுடனான தனது நீண்டகால தொடர்பைப் பகிர்ந்து கொண்ட திரு சி பி ராதாகிருஷ்ணன், நகரத்தை துடிப்பானதாகவும், உற்சாகமாகவும், வளமானதாகவும் மாற்றிய மக்களின் கடின உழைப்பு மற்றும் தொழில்முனைவு உணர்வைப் பாராட்டினார். தொழில்கள் மற்றும் நிறுவனங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தொழிலாளர்களின் நலனை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். வேளாண் வளர்ச்சி, உற்பத்தி மற்றும் தொழில்துறையின் முன்னேற்றத்துடன் இணைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மகாகவி சுப்பிரமணிய பாரதியை மேற்கோள் காட்டி, இந்தியாவை வளமான நாடாக மாற்றுவதற்கு தொழில்கள், உற்பத்தி மற்றும் வர்த்தகத்தின் வளர்ச்சி அவசியம் என்று கூறினார். வளர்ச்சியடைந்த பாரதத்தை அடைய, ஒவ்வொரு தனிநபரும் பங்களிக்க வேண்டும் என்றும், இந்தப் பயணத்தில் தமிழகத்திற்கு முக்கிய பங்கு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.
பின்னர், கோவையில் உள்ள டவுன் ஹால் மாநகராட்சி கட்டிடத்திற்குச் சென்ற குடியரசு துணைத்தலைவர், மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கோவை பேரூர் மடத்தில் நடைபெற்ற சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவிலும் அவர் பங்கேற்றார். மாலையில், தனது சொந்த ஊரான திருப்பூருக்கு வருகை தந்த திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், திருப்பூர் குமரன் மற்றும் மகாத்மா காந்தியின் உருவச்சிலைகளுக்கு மலர் மரியாதை செலுத்தினார்.
அக்டோபர் 29, 2025 அன்று, குடியரசு துணைத் தலைவர் திருப்பூரில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்வார். அதைத் தொடர்ந்து மாலையில், மதுரை சென்று, மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்வார். அக்டோபர் 30, 2025 அன்று, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்வார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2183490
(Release ID: 2183490)
***
AD/BR/SH
(Release ID: 2183531)
Visitor Counter : 11