சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மருத்துவ சுகாதார சேவைகளில் எச்எல்எல் நிறுவனத்தின் செயல்பாடுகள் நம்பகத்தன்மை கொண்டதாக உள்ளது திரு. ஜே.பி. நட்டா
Posted On:
25 OCT 2025 5:31PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மினி - ரத்னா சிறப்பு கொண்ட பொதுத்துறை நிறுவனமான எச்எல்எல் லைஃப்கேர் நிருவனம், 2024–25 - ம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு 69.53 கோடி ரூபாயை ஈவுத்தொகையாக வழங்கி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் வலுவான நிதிசார் செயல்திறனைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் இதுவரை வழங்கிய மிக உயர்ந்த ஈவுத்தொகைகளில் ஒன்றாகும்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் திருமதி புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, கூடுதல் செயலாளர் & நிதி ஆலோசகருமான திருமதி ஹோவ்யேதா அப்பாஸ், இணை செயலாளர் திரு விஜய் நெஹ்ரா ஆகியோர் முன்னிலையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஜே.பி. நட்டாவிடம், ஈவுத் தொகைக்கான காசோலையை அந்நிறுவனத்தின் தலைவர் டாக்டர் அனிதா தம்பி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் இயக்குநர் (சந்தைப்படுத்தல்) திரு. என். அஜித், இயக்குநர் (நிதி) திரு. பி ரமேஷ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு. ஜே.பி. நட்டா, மருத்துவ சேவைகள் துறையில் எச்.எல்.எல் நிறுவனம் நம்பகத்தன்மை கொண்டதாக உள்ளது என்றும், அனைவருக்கும் எளிதாக அணுகக்கூடிய வகையில், குறைந்த செலவில், தரமான சுகாதாரப் பராமரிப்பு கிடைக்க வேண்டும் என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட உறுதிபூண்டுள்ளது என்றும் கூறினார்.
எச்.எல்.எல் நிறுவனத்தின் செயல்திறனைப் பாராட்டிய திரு. ஜே.பி. நட்டா, அதன் துணை நிறுவனங்கள் மற்றும் அம்ரித் மருந்தகங்களுடன் இணைந்து சுகாதாரத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று கூறினார். கடந்த 10 ஆண்டுகளில், மக்கள் மருந்தகங்களின் மலிவு விலை மருந்துகள் மூலம் 6.7 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். இதன் மூலம் மருத்துவத்திற்காக அவர்கள் செலவழித்த தொகையில் 8,000 கோடி ரூபாய்க்கும் கூடுதலாக சேமிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார்.
2024–25 - ம் நிதியாண்டில் எச்.எல்.எல் நிறுவனம் அதன் உற்பத்தி மற்றும் சேவை ஆகிய இரண்டிலும் விரிவான வளர்ச்சி கண்டுள்ளது. அந்நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடுகள் காரணமாக கிடைக்கும் வருவாய் 4,500 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 20% வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. மார்ச் 31, 2025 நிலவரப்படி, இந்நிறுவனத்தின் நிகர மதிப்பு 1,100 கோடி ரூபாயாக கணிசமான அளவிற்கு உயர்ந்துள்ளது.
அதன் துணை நிறுவனங்களான எச்ஐடிஇஎஸ், ஜிஏபிஎல் மற்றும் லைஃப்ஸ்பிரிங் மருத்துவமனைகள் உட்பட ஒட்டுமொத்தக் குழுமமாக அந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 4,900 கோடி ரூபாயாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 19% வளர்ச்சியைக் குறிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182460
***
AD/SV/RJ
(Release ID: 2182517)
Visitor Counter : 9