சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய சுகாதார அமைச்சர் திரு. ஜே.பி. நட்டா புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 50-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார்
Posted On:
25 OCT 2025 2:06PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஜே.பி. நட்டா இன்று புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) 50-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார்.
பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்தி, இந்தியாவில் மருத்துவ அறிவியல், கல்வி மற்றும் நோயாளி பராமரிப்பை முன்னேற்றுவதற்கு எய்ம்ஸ் நிறுவனம் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பை அவர் பாராட்டினார். இளம் மருத்துவர்கள் கருணையுடன் பணியாற்றவும், உயர்ந்த நெறிமுறைகளை நிலைநிறுத்தவும், நாட்டின் வளர்ந்து வரும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதுமைகளைப் பயன்படுத்தவும் அவர் வலியுறுத்தினார்.
புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைப் பற்றிப் பேசுகையில், "மருத்துவ அறிவியல், பயிற்சி மற்றும் சுகாதாரப் பராமரிப்புத் துறையில், எய்ம்ஸ் நிறுவனம் இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது" என்று திரு நட்டா கூறினார். மருத்துவக் கல்வி, அதிநவீன ஆராய்ச்சி மற்றும் நோயாளி பராமரிப்பில் சிறந்து விளங்குவதற்கான அதன் நீடித்த அர்ப்பணிப்புக்காக அந்நிறுவனத்தை அமைச்சர் பாராட்டினார்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறையில் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துரைத்த திரு. ஜே.பி. நட்டா, கடந்த நூற்றாண்டின் இறுதியில் நாட்டில் ஒரே ஒரு எய்ம்ஸ் மட்டுமே இருந்த நிலையில், இன்று இந்தியா முழுவதும் 23 எய்ம்ஸ் நிறுவனங்கள் உள்ளன, இது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் தரமான சுகாதாரம் மற்றும் மருத்துவப் பயிற்சியை விரிவுபடுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார்.
கடந்த 11 ஆண்டுகளில், நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387 லிருந்து 819 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல், இளநிலை மருத்துவ இடங்கள் 51,000-லிருந்து 1,29,000 ஆகவும், முதுநிலை இடங்கள் 31,000-லிருந்து 78,000 ஆகவும் உயர்ந்துள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில், கூடுதலாக 75,000 இடங்கள் சேர்க்கப்படும் என்று திரு நட்டா தெரிவித்தார்.
இந்தியாவில் காசநோய் பாதிப்பு 17.7% குறைந்துள்ளது என்றும், இது உலகளாவிய விகிதமான 8.3% ஐ விட இரண்டு மடங்கு அதிகமாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.
பட்டம் பெறும் மாணவர்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு தீவிரமாக பங்களிக்கவும், அவர்களின் தொழில்முறை மற்றும் நெறிமுறை நடத்தையில் சிறந்து விளங்குவதன் மூலம் எய்ம்ஸ் நிறுவனத்தின் மதிப்புமிக்க மரபு மற்றும் நற்பெயரை நிலைநிறுத்தவும் வலியுறுத்தினார். மருத்துவ அறிவியலை முன்னேற்றுவதற்கும், இரக்கத்துடன் சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் உறுதியளித்து, வாழ்நாள் முழுவதும் கற்றவர்களாகவும் புதுமைப்பித்தர்களாகவும் இருக்க அவர்களை ஊக்குவித்த அவர், தமது உரையை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியில் பேசிய நித்தி ஆயோக் உறுப்பினர் பேராசிரியர் வி.கே. பால், “நம்மை வளர்த்த சமூகத்திற்குத் திருப்பித் தர வேண்டிய ஆழமான சமூகப் பொறுப்பு நமக்கு உள்ளது. நீங்கள் முன்னேறும்போது, சிறப்பை உங்கள் அன்றாட நடைமுறையாகவும், புதுமை உங்கள் வழிகாட்டும் கொள்கையாகவும் மாற்றட்டும்” என்று கூறினார்.
விழாவின் போது, 50 பிஎச்.டி. அறிஞர்கள், 95 டி.எம்./எம்.சி.எச். நிபுணர்கள், 69 எம்.டி.க்கள், 15 எம்.எஸ். கள், 4 எம்.டி.எஸ். கள், 45 எம்.எஸ்.சி., 30 எம்.எஸ்.சி (நர்சிங்) மற்றும் 18 எம்.பயோடெக் பட்டதாரிகள் உட்பட 326 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கூடுதலாக, எய்ம்சில் சிறந்த பங்களிப்புகள் மற்றும் அர்ப்பணிப்பு சேவைக்காக ஏழு மருத்துவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182413
***
AD/PKV/RJ
(Release ID: 2182508)
Visitor Counter : 5