பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐநா படைக்கு பங்களிப்பை வழங்கும் நாடுகளின் படைத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதிநிதிகளை வரவேற்க இந்தியா தயாராகிறது

Posted On: 12 OCT 2025 1:47PM by PIB Chennai

ஐநா அமைதி காக்கும் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கும் 32 நாடுகளின் மூத்த ராணுவத் தளபதிகளை ஒன்றிணைத்து, இந்திய ராணுவம் 2025 அக்டோபர் 14 முதல் 16 வரை புதுதில்லியில் ஐநா படை பங்களிப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை நடத்தவுள்ளது.

உலகெங்கிலும் ஐநா அமைதி காக்கும் பணிகளுக்கு படைகளை வழங்கிப் பங்களிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் 2025 அக்டோபர் 13 அன்று புதுதில்லிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயல்பாட்டு சவால்கள், வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள், முடிவெடுப்பதில் உள்ளடக்கிய தன்மை, ஐநா அமைதி காக்கும் பணியை வலுப்படுத்துவதில் பயிற்சி ஆகியவை குறித்து இந்த மூன்று நாள் மாநாட்டில் விவாதிக்கபடும். இந்த மாநாடு வசுதைவ குடும்பகம் (உலகம் ஒரே குடும்பம்) என்ற இந்தியாவின் நெறிமுறைகளை பிரதிபலிக்கிறது.

இந்த மாநாட்டில், பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் திரு எஸ். ஜெய்சங்கர், ஐநா அமைதி நடவடிக்கைகளுக்கான துணைப் பொதுச் செயலாளர் திரு ஜீன் பியர் லாக்ரோயிக்ஸ் உள்ளிட்டோர் உரையாற்றுவார்கள். மாநாட்டின் பல்வேறு அமர்வுகளில் ஐநா படைகளுக்கு பங்களிக்கும் நாடுகளின் படைத் தலைவர்களும் பிரதிநிதிகளும் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பார்கள்.

இந்த மாநாட்டில் அல்ஜீரியா, ஆர்மீனியா, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பூடான், பிரேசில், புருண்டி, கம்போடியா, எகிப்து, எத்தியோப்பியா, ஃபிஜி, பிரான்ஸ், கானா, இத்தாலி, கஜகஸ்தான், கென்யா, கிர்கிஸ்தான், மடகாஸ்கர், மலேசியா, மங்கோலியா, மொராக்கோ, நேபாளம், நைஜீரியா, போலந்து, ருவாண்டா, இலங்கை, செனகல், தான்சானியா, தாய்லாந்து, உகாண்டா, உருகுவே, வியட்நாம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.

******

(Release ID: 2178039)

AD/PLM/SG


(Release ID: 2178077) Visitor Counter : 11