மக்களவை செயலகம்
68-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டின் பொதுச் சபைக் கூட்டத்தில் திரு ஓம் பிர்லா உரையாற்றினார்
இந்தியாவின் அரசியலமைப்பு நாட்டிற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக இருந்து வருகிறது : மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா
Posted On:
11 OCT 2025 6:23PM by PIB Chennai
ஜனநாயகம், சமத்துவம் ஆகியவற்றுக்கு இந்தியா ஒரு எடுத்துக்காட்டு என்றும், கடந்த 75 ஆண்டுகளாக இந்திய அரசியலமைப்பு நாட்டிற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக இருப்பதாகவும் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா கூறியுள்ளார். ஜனநாயகம் இந்தியாவின் ஆன்மா எனவும், சமத்துவம் அதன் உறுதிப்பாடு என்றும், நீதி அதன் அடையாளம் எனவும் அவர் எடுத்துரைத்தார். "காமன்வெல்த் - ஒரு உலகளாவிய ஒத்துழைப்பு" என்ற கருப்பொருளில் 68-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டின் பொதுச் சபை கூட்டத்தில் திரு ஓம் பிர்லா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
2026 ஜனவரி 7 முதல் 9 வரை புது தில்லியில் நடைபெறும் காமன்வெல்த் அவைத் தலைவர்கள், தலைமை அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு காமன்வெல்த் நாடாளுமன்றத்தின் தலைமை அதிகாரிகளை திரு ஓம் பிர்லா அழைத்தார்.
பருவநிலை மாற்றம், தொற்றுநோய்கள், உணவுப் பாதுகாப்பின்மை, சமத்துவமின்மை போன்ற உலகளாவிய நெருக்கடிகளுக்கு, கூட்டுத் தீர்வுகள் தேவை என்பதை அவர் வலியுறுத்தினார். இந்த சவால்களை எதிர்த்துப் போராடுவதற்கு ஒன்றுபட்ட முயற்சிகளை திரு ஓம் பிர்லா வலியுறுத்தினார். தீர்வுகளை தனித்துக் காண முடியாது என்பதை அவர் எடுத்துரைத்தார்.
உலகளாவிய உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பில் நம்பகமான நாடாக இந்தியாவின் பங்கை எடுத்துரைத்த திரு ஓம் பிர்லா, ஒரு காலத்தில் உணவுக்காக இந்தியா மற்றவர்களைச் சார்ந்து இருந்ததை நினைவு கூர்ந்தார். கொவிட்-19 தொற்றுநோய் காலத்தின் போது இந்தியாவின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைக் குறிப்பிட்ட அவர், 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளையும் தடுப்பூசிகளையும் வழங்கியதைக் குறிப்பிட்டார். இது ஆரோக்கியம் ஒரு உரிமை, சலுகை அல்ல என்ற இந்தியாவின் நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாகவும் இந்தியா உள்ளதை திரு ஓம் பிர்லா எடுத்துரைத்தார். பாரிஸ் பருவ நிலை ஒப்பந்த இலக்குகளை முன்கூட்டியே அடைந்த முதல் பெரிய நாடாக இந்தியா மாறியுள்ளது என்று அவர் பெருமையுடன் குறிப்பிட்டார். சர்வதேச சூரிய சக்தி கூட்டணி, பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி போன்ற முயற்சிகள் மூலம், இந்தியா புவி பாதுகாப்புக்கான உலகளாவிய பொறுப்பை வலியுறுத்தியுள்ளது என்று திரு ஓம் பிர்லா கூறினார்.
காமன்வெல்த் நாடுகளின் பரந்த பன்முகத்தன்மையை திரு ஓம் பிர்லா எடுத்துரைத்தார். வெவ்வேறு மொழிகளைப் பேசினாலும், வெவ்வேறு மரபுகளைப் பின்பற்றினாலும், பல்வேறு புவியியல் நிலைமைகளில் வாழ்ந்தாலும், காமன்வெல்த் மக்கள் ஜனநாயகம், சுதந்திரம், மனித கண்ணியம் ஆகியவற்றின் பகிரப்பட்ட மதிப்புகளால் ஒன்றுபட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். காமன்வெல்த் என்பது ஒரு பகிரப்பட்ட வரலாறு, பொதுவான மதிப்புகள், பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான ஒரு கூட்டுப் பார்வை ஆகியவற்றால் இணைக்கப்பட்ட ஒரு குடும்பம் என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்தப் பயணத்தில் இந்தியா தொடர்ந்து தீவிரமாகப் பங்கேற்கும் என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா உறுதியளித்தார்.
***
(Release ID: 2177851)
AD/PLM/RJ
(Release ID: 2177923)
Visitor Counter : 8