பிரதமர் அலுவலகம்
வேளாண் துறையில் ₹35,440 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் இரண்டு முக்கிய திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
விவசாயிகளின் நலனுக்காக விதைகள் முதல் சந்தை வரை சீர்திருத்தங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்: பிரதமர்
கடந்த 11 ஆண்டுகளாக, விவசாயிகளுக்கு அதிகாரமளித்து, விவசாயத்தில் முதலீட்டை அதிகரிப்பதை தொடர்ச்சியான முன்முயற்சியாக அரசு செய்து வருகிறது: பிரதமர்
Posted On:
11 OCT 2025 3:22PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.10.2025) புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற சிறப்பு வேளாண் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு பிரதமர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
பிரதமர் விவசாயத் துறையில் ₹35,440 கோடி செலவிலான இரண்டு முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார். ₹24,000 கோடி செலவில் பிரதமரின் தன தானிய வேளாண் திட்டத்தை (தன் தான்ய கிரிஷி) அவர் தொடங்கி வைத்தார். ₹11,440 கோடி செலவில் செல்படுத்தப்படும் பருப்பு வகைகளில் தற்சார்பு அடைவதற்கான இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், உணவு பதப்படுத்தும் துறைகளில் ₹ 5,450 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதே நேரத்தில் சுமார் ₹ 815 கோடி மதிப்பிலான கூடுதல் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பையும் கிராமப்புற வளர்ச்சியையும் மறுவரையறை செய்த பாரத அன்னையின் இரண்டு புகழ்பெற்ற மகன்களின் பிறந்தநாளைக் குறிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இன்று என கூறினார. ஜெயபிரகாஷ் நாராயண், நானாஜி தேஷ்முக் ஆகியோர் கிராமப்புற இந்தியாவின் குரல்களாக இருந்தனர் என்று அவர் தெரிவித்தார்.
பிரதமரின் தன - தானிய வேளாண் திட்டம், பருப்பு வகைகளில் தற்சார்பு அடைவதற்கான இயக்கம் ஆகியவை நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நேரடியாக பயனளிக்கும் என்று அவர் கூறினார். இது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கும், உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பை அடைவதற்கும் அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார்.
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் விவசாயம் எப்போதும் முக்கிய பங்கை வகித்து வருவதாக பிரதமர் கூறினார். வேகமாக வளர்ந்து வரும் 21-ம் நூற்றாண்டு இந்தியாவிற்கு ஒரு வலுவான விவசாய முறை தேவை என்றும், இந்த மாற்றம் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு தமது அரசின் கீழ் தொடங்கியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் விவசாய ஏற்றுமதி கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று பிரதமர் கூறினார். உணவு தானிய உற்பத்தி சுமார் 90 மில்லியன் மெட்ரிக் டன் அதிகரித்துள்ளது என்றும், பழங்கள், காய்கறிகள் உற்பத்தி 64 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பால் உற்பத்தியில் இந்தியா இப்போது உலகில் முதலிடத்தில் உள்ளது என்றும் உலக அளவில் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தியாளராக உள்ளது எனவும் அவர் கூறினார். 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தேன் உற்பத்தியும் முட்டை உற்பத்தியும் இரட்டிப்பாகியுள்ளது என அவர் தெரிவித்தார்.
கடந்த 11 ஆண்டுகளில் நாட்டில் ஆறு பெரிய உரத் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். விவசாயிகளுக்கு 25 கோடிக்கும் மேற்பட்ட மண் வள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். நுண்ணீர் பாசன வசதிகள் 100 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களை அடைந்துள்ளன என்றும் பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ₹2 லட்சம் கோடி மதிப்புள்ள காப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 11 ஆண்டுகளில், விவசாயிகளின் சந்தை அணுகலை மேம்படுத்துவதற்காக 10,000-க்கும் மேற்பட்ட விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாற வேண்டுமென்றால், ஒவ்வொரு துறையிலும் தொடர்ச்சியான முன்னேற்றம் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். இந்த தொலைநோக்குப் பார்வையுடன்தான் பிரதமரின் தன தானிய வேளாண் திட்டம் (தன்- தான்ய கிரிஷி யோஜனா) தொடங்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
இந்த புதிய விவசாய முயற்சி, லட்சிய மாவட்டங்கள் திட்டத்தின் வெற்றியிலிருந்து உத்வேகம் பெற்றதாக பிரதமர் எடுத்துரைத்தார். முந்தைய அரசுகள் நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களை "பின்தங்கியவை" என்று அறிவித்து, அதன் பிறகு அவற்றைப் பெரும்பாலும் புறக்கணித்ததாக அவர் கூறினார். இதற்கு நேர்மாறாக, தமது அரசு இந்த மாவட்டங்களில் கவனம் செலுத்தி, அவற்றுக்கு "லட்சிய மாவட்டங்கள்" என்று மறுபெயரிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த 100 மாவட்டங்கள் மூன்று முக்கிய அளவுருக்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். முதலாவதாக நிலத்தில் விவசாய உற்பத்தியின் அளவு எனவும், இரண்டாவதாக, ஒரு வருடத்திற்குள் ஒரே நிலத்தில் எத்தனை முறை பயிர்கள் பயிரிடப்படுகின்றன என்றும், மூன்றாவதாக, விவசாயிகளுக்கான நிறுவனக் கடன்கள், முதலீட்டு வசதிகள் கிடைக்கும் தன்மை என்றும் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். இந்தத் திட்டம் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கிறது எனவும், இதனால் ஒவ்வொரு மாவட்டத்தின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப திட்டமிடலை வடிவமைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். உள்ளூர் மண், பருவ நிலை சூழல்களுக்கு ஏற்ப மாவட்ட அளவிலான செயல் திட்டங்களைத் தயாரிக்க விவசாயிகளையும் மாவட்ட நிர்வாகங்களையும் திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
தல்ஹான் ஆத்மநிர்பர் பாரத் இயக்கம் எனப்படும் பருப்பு உற்பத்தியை அதிகரித்து தற்சார்பை அடையும் இயக்கம், நாட்டின் எதிர்கால சந்ததியினரை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறினார். இந்தியாவின் விவசாயிகள் சமீபத்தில் கோதுமை, அரிசி போன்ற உணவு தானியங்களில் சாதனை உற்பத்தியை அடைந்துள்ளனர் என்று அவர் கூறினார். இது இந்தியாவை உலகின் சிறந்த உணவு உற்பத்தியாளர்களில் ஒன்றாக நிலைநிறுத்தியுள்ளது என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். தாவர அடிப்படையிலான புரதத்தின் மிக முக்கியமான ஆதாரமாக பருப்பு வகைகள் உள்ளன என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
உள்நாட்டு பருப்பு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் தற்சார்பை அடைய இந்த இயக்கம் முயல்கிறது என்று அவர் கூறினார். ₹11,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கம் விவசாயிகளுக்கு கணிசமான ஆதரவை வழங்கும் என்று அவர் கூறினார். பருப்பு சாகுபடி பரப்பளவை 35 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பதே இலக்கு என்றும் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். இந்த இயக்கத்தின் கீழ், துவரம் பருப்பு, உளுந்து, மசூர் பருப்பு வகைகளின் உற்பத்தி அதிகரிக்கப்படும் எனவும் பருப்பு வகைகளை கொள்முதல் செய்வதற்கான சரியான அமைப்பு உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார். இது நாடு முழுவதும் உள்ள கிட்டத்தட்ட இரண்டு கோடி பருப்பு விவசாயிகளுக்கு நேரடியாக பயனளிக்கும் என அவர் தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி, விவசாயிகளின் நலனுக்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்தார். கடந்த பதினொரு ஆண்டுகளில், விவசாயிகளை மேம்படுத்துவதற்கும் விவசாயத்தில் முதலீட்டை அதிகரிப்பதற்கும் அரசு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார். இந்தக் காலகட்டத்தில் விவசாயத்துக்கான நிதி ஒதுக்கீடு கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்திய விவசாயத்தையும் கிராமப்புற வளத்தையும் மாற்றுவதில் பெண்களின் பங்கை திரு நரேந்திர மோடி பாராட்டினார். பயிர் சாகுபடி, கால்நடை வளர்ப்பு அல்லது இயற்கை விவசாயம் என எதுவாக இருந்தாலும், கிராமப்புற பொருளாதாரத்தில் பெண்கள் முக்கிய பங்காற்றுவதாக அவர் கூறினார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் பெண்களின் முக்கிய பங்கையும் பிரதமர் எடுத்துரைத்தார்.
சமீபத்திய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் விவசாய உபகரணங்கள், அத்தியாவசியப் பொருட்களை மிகவும் மலிவு விலையில் வழங்கும் என்றும், இதன் மூலம் இந்தியாவின் விவசாயிகளுக்கும் கிராமப்புற குடும்பங்களுக்கும் நேரடி பொருளாதார நிவாரணம் கிடைக்கும் எனவும் அவர் எடுத்துரைத்தார். உணவு உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்வதில் விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை மீண்டும் எடுத்துரைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் முன்னணியில் இருக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2177772
***
AD/PLM/RJ
(Release ID: 2177877)
Visitor Counter : 13