சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஃபாஸ்ட்டேக் இல்லாத வாகனங்களுக்குச் சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் கட்டணங்களை ஊக்குவிக்க புதிய பயனர் கட்டண விதிமுறை

தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) (மூன்றாவது திருத்தம்) விதிகள், 2025, வரும் 2025 நவம்பர் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது.

Posted On: 04 OCT 2025 2:56PM by PIB Chennai

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் இல்லாத பயனர்களிடையே டிஜிட்டல் முறையிலான கட்டணங்களை ஊக்குவிக்கவும், ரொக்கப் பரிவர்த்தனைகளை முற்றிலுமாக அகற்றும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) விதிகள், 2008-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

புதிய விதியின்படி, செல்லுபடியாகும் மற்றும் செயல்படும் நிலையில் ஃபாஸ்ட்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிக்குள் நுழையும் வாகனங்கள், கட்டணத்தை ரொக்கமாகச் செலுத்தினால், அந்த வாகன வகைக்குப் பொருந்தக்கூடிய கட்டணத்தை விட இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும். அதே சமயம், யுபிஐ (UPI) மூலம் கட்டணம் செலுத்தும் பயனர்கள், பொருந்தக்கூடிய கட்டணத்தில் 1.25 மடங்கு மட்டுமே செலுத்தினால் போதுமானது.

உதாரணமாக, ஒரு வாகனத்திற்கு ஃபாஸ்ட்டேக் மூலம் செலுத்த வேண்டிய கட்டணம் 100 எனில், அதே வாகனத்திற்கு ரொக்கமாகச் செலுத்தினால் கட்டணம் 200 ஆகவும், UPI மூலம் செலுத்தினால் 125 ஆகவும் வசூலிக்கப்படும்.

இந்தத் திருத்தமானது, கட்டண வசூல் செயல்முறையை வலுப்படுத்தவும், சுங்க வசூலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், தேசிய நெடுஞ்சாலைப் பயணிகளின் பயணத்தை எளிதாக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் 2025 நவம்பர் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது.

திறமையான சுங்க வசூலுக்காகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலும், சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதிலும் இந்திய அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்த சமீபத்திய திருத்தம் பிரதிபலிக்கிறது. இந்தத் திருத்தப்பட்ட விதிகள் டிஜிட்டல் கட்டணப் பயன்பாட்டை ஊக்குவிப்பதோடு, சுங்கச் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையையும், தேசிய நெடுஞ்சாலைப் பயணிகளின் ஒட்டுமொத்த அனுபவத்தையும் மேம்படுத்தும்.

*****

(Release: 2174761)

AD/EA/SG


(Release ID: 2174888) Visitor Counter : 13