தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மலேசியாவில் புலம்பெயர் இந்தியத் தொழிலாளர்களுடன் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கலந்துரையாடினார்

Posted On: 03 OCT 2025 4:31PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை  அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று மலேசியாவில் வசிக்கும் இந்தியத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை வலுப்படுத்துவதில் அவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் வலியுறுத்தியதுடன், வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற இலக்கை அடைவதில் வெளிநாடுவாழ் இந்திய சமூகத்தின் முக்கியப் பங்கைச் சுட்டிக்காட்டினார்.

2.9 மில்லியனுக்கும் அதிகமான இந்திய மக்களுடன் உலகளவில் மூன்றாவது பெரிய  புலம்பெயர் இந்திய சமூகத்தை மலேசியா கொண்டுள்ளது. இச்சமூகத்தைப் பாராட்டிய மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, அவர்கள் தங்கள் கலாச்சாரத்தைப் பாதுகாத்து, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதுடன், மலேசியாவின் முன்னேற்றத்திற்கும், இந்தியா-மலேசியா உறவை மேம்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை வலியுறுத்திய அமைச்சர், 150க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள்  மலேசியாவில் செயல்படுவதாகவும், சுமார் 70 மலேசிய நிறுவனங்கள் இந்தியாவில் உள்கட்டமைப்பு, சுகாதாரம், தொலைத்தொடர்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, மலேசியாவுடன் ஆகஸ்ட் 2024 இல் கையெழுத்திடப்பட்ட வேலைக்கு அமர்த்துதல், வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர்களைத் திரும்ப அனுப்புதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அவர் மேற்கோள் காட்டினார். விபத்து மரணம், ஊனம், மருத்துவ அவசரநிலைகள் மற்றும் தாயகம் திரும்புதல் உள்ளிட்ட விரிவான காப்பீட்டை வழங்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான காப்பீடுத் திட்டத்தைப்  பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் தொழிலாளர்களை கேட்டுக்கொண்டார்.

புலம்பெயர் மக்களுக்கு இந்திய அரசின் தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்திய டாக்டர் மன்சுக் மாண்டவியா, “உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும், உங்கள் குரல்கள் கேட்கப்படுவதையும், உங்கள் குடும்பத்தினர் தாயகத்தில் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதிசெய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்," என கூறினார்.

***

AD/SE/SH


(Release ID: 2174656) Visitor Counter : 5