சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இமாச்சலப் பிரதேசம் பிலாஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் 3-வது நிறுவன தின நிகழ்விற்கு மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜெ பி நட்டா தலைமை தாங்கினார்
Posted On:
03 OCT 2025 4:55PM by PIB Chennai
இமாச்சலப் பிரதேசம் பிலாஸ்பூரில் இன்று (03.10.2025) நடைபெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையின் 3-வது நிறுவன தின நிகழ்வில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா தலைமை தாங்கினார். நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திரு அனுராக் தாக்கூர்; மாநிலங்களவை உறுப்பினர் திரு ஹர்ஷ் மகாஜன்; இமாச்சலப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான திரு ஜெய் ராம் தாக்கூர், இமாச்சலப் பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் கர்னல் டாக்டர் தானி ராம் ஷாண்டில் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய திரு நட்டா, மேம்பட்ட எம்ஆர்ஐ, சிடி ஸ்கேனர், பிஇடி-சிடி, எண்டோஸ்கோபி அறைகள், பிராங்கோஸ்கோபி அறைகள் போன்ற அதிநவீன வசதிகளுடன், பிலாஸ்பூர் எய்ம்ஸ் நிறுவப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றார். அருகிலுள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு சிகிச்சை பெறுவது இந்த நிறுவனத்தின் மீது வளர்ந்து வரும் நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் அரசின் உறுதிப்பாட்டை திரு நட்டா மீண்டும் வலியுறுத்தினார். மருத்துவத்திற்காக தங்கள் சொந்த செலவினங்களைக் குறைப்பது இமாச்சலப் பிரதேசத்திற்கு ஒரு முக்கிய மைல்கல் ஆகும். பிலாஸ்பூர் எய்ம்ஸ் இன்று இப்பகுதியின் உயர்நிலை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது என்று அவர் கூறினார்.
கடந்த 11 ஆண்டுகளில் மருத்துவக் கல்வியில் ஏற்பட்டுள்ள கணிசமான அதிகரிப்பை திரு நட்டா எடுத்துரைத்தார். நாட்டில் தற்போது 808 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இளங்கலை மருத்துவ இடங்கள் சுமார் 35,000 லிருந்து 1.25 லட்சமாக அதிகரித்துள்ளன. கடந்த அமைச்சரவையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,000 புதிய இளங்கலை மற்றும் முதுகலை இடங்களை பிரதமர் அனுமதித்தார் என்று அவர் கூறினார். அடுத்த ஐந்து ஆண்டுகளில், அரசு மருத்துவ நிறுவனங்களில் கூடுதலாக 75,000 மருத்துவ இடங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் திரு நட்டா கூறினார்.
இந்த நிகழ்வின் போது, பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையின் உணர்வு மற்றும் நெறிமுறைகளை அடையாளப்படுத்தும் வகையில், நிறுவனத்தின் பாடல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருது வழங்கும் விழாவும் இடம்பெற்றது. இதில் சிறந்த கல்வி மற்றும் கல்விசாராத சாதனைகளைப் படைத்த சிறந்த மாணவர்களை மத்திய அமைச்சர் பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2174491
***
AD/SMB/SH
(Release ID: 2174632)
Visitor Counter : 5