PIB Headquarters
சர்வதேச அஹிம்சை தினம்
Posted On:
01 OCT 2025 11:15AM by PIB Chennai
தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2 - ம் தேதி காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருவதுடன், சர்வதேச அஹிம்சை தினமாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஐ.நா. பொதுச் சபையில் ஜூன் 2007 - ம் ஆண்டு அகிம்சையை சர்வதேச அளவில் கொள்கையாக உறுதிப்படுத்தி, அமைதி மற்றும் சகிப்புத்தன்மையின் உலகளாவிய கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 140 - க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு அளித்தன. இது தேசிய பெருமையாக இருப்பதுடன், மகாத்மா காந்திக்கான உலகளாவிய மரியாதை என இரண்டையும் பிரதிபலிக்கும் இரட்டை அஞ்சலியாக கருதப்படுகிறது. இந்த இரண்டும் இந்தியாவின் தேசிய நினைவில் வேரூன்றிய ஒரு தனித்துவமான முக்கியத்துவத்தை அளிப்பதுடன், மனிதகுலத்திற்கான உலகளாவிய செய்தியாகப் பகிரப்படுகிறது.
ஐ.நா. சபைப் பொதுச் செயலாளரின் அறிக்கைகள் மற்றும் காந்தியின் தத்துவம் ஆகியவற்றை இன்றைய யதார்த்தங்களுடன் இணைக்கும் நிகழ்வுகளுடன் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. அண்மை ஆண்டுகளில் இந்த செய்திகள் உலகெங்கிலும் உள்ள மோதல்களை சுட்டிக்காட்டியுள்ளன. மேலும் காந்தியின் வாய்மை மற்றும் அகிம்சை மீதான நம்பிக்கை எந்தவொரு ஆயுதத்தையும் விட சக்தி வாய்ந்தது என்பதை நாடுகளுக்கு நினைவூட்டியுள்ளன.
இந்தியாவில், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துதல், கலாச்சார மற்றும் கல்வித் திட்டங்கள், காந்தியின் கொள்கைகளை எடுத்துக்காட்டும் பொது பிரச்சாரங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். பல ஆண்டுகளாக, நடத்தப்பட்டு வரும் நிகழ்வுகள் சம்பிரதாய நடவடிக்கைகளுக்கு அப்பால், தூய்மையை பராமரிப்பதற்கான தூய்மை இந்தியா இயக்கம் முதல், தன்னம்பிக்கையைக் குறிக்கும் காதி மற்றும் கிராமப்புற தொழில்களின் மறுமலர்ச்சி வரை தேசிய அளவிலான பணிகளுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளன.
இத்தினம் பெல்ஜியம், அமெரிக்கா, ஸ்பெயின், செர்பியா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, கஜகஸ்தான் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2173476
(Release ID: 2173476)
******
SS/SV/SH
(Release ID: 2174117)
Visitor Counter : 8