பிரதமர் அலுவலகம்
குஜராத்தின் பாவ்நகரில் 'கடலில் இருந்து வளம்' என்ற நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் - ₹34,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்
உலக அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பு ஆகியவற்றுக்கு, இந்தியா தற்சார்பு அடைய வேண்டும்: பிரதமர்
இந்தியாவின் கடற்கரைகள் நாட்டின் செழிப்புக்கான நுழைவாயில்களாக மாறும்: பிரதமர்
Posted On:
20 SEP 2025 1:40PM by PIB Chennai
குஜராத்தின் பாவ்நகரில் இன்று (20.09.2025) ₹34,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 'சமுத்திர சே சம்ரிதி' எனப்படும் கடலில் இருந்து வளம் என்ற நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை, நாடு முழுவதும் சேவை இயக்கம் நடைபெறுவதை எடுத்துரைத்தார். கடந்த சில நாட்களில் குஜராத்தில் பல சேவை சார்ந்த நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நூற்றுக்கணக்கான இடங்களில் ரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும் இவற்றில் இதுவரை ஒரு லட்சம் பேர் ரத்த தானம் செய்துள்ளனர் என்றும் பிரதமர் கூறினார். ஏராளமான நகரங்களில் தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்கள் அதில் தீவிரமாக பங்கேற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மாநிலம் முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட சுகாதார முகாம்கள் நடைபெறுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். நாடு முழுவதும் சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அவர் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.
நவராத்திரி பண்டிகை தொடங்கவிருக்கும் வேளையில், தாம் பாவ்நகருக்கு வந்திருப்பதைக் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, சரக்கு மற்றும் சேவை வரிக் குறைப்பு காரணமாக, சந்தைகள் அதிகரித்த உற்சாகத்தைக் காணும் என்று கூறினார். இந்த மகிழ்ச்சியான சூழ்நிலையில், நாடு கடலில் இருந்து வளம் என்ற பிரமாண்டமான நிகழ்வைக் கொண்டாடுகிறது என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். 21-ம் நூற்றாண்டு இந்தியா கடலை ஒரு முக்கிய வாய்ப்பாகக் கருதுகிறது என்பதை அவர் குறிப்பிட்டார். துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை விரைவுபடுத்த ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள திட்டங்கள் இப்போதுதான் தொடங்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன என்றும் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். கப்பல் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, மும்பையில் உள்ள சர்வதேச கப்பல் முனையமும் இன்று திறக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். பாவ்நகருடனும் குஜராத்தின் பிற பகுதிகளுடனும் தொடர்புடைய பல மேம்பாட்டுத் திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன என்று பிரதமர் கூறினார். இதற்காக, குஜராத்தின் அனைத்து மக்களுக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளைப் பிரதமர் தெரிவித்தார்.
அதிக அளவில் அந்நிய நாட்டைச் சார்ந்திருப்பது தோல்விக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார். உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பு ஆகியவற்றுக்கு, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா தற்சார்புடையதாக மாற வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மற்றவர்களைச் சார்ந்திருப்பது தேசிய சுயமரியாதையை சமரசம் செய்யும் செயல் என்று அவர் கூறினார். 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தை வெளிப்புற சக்திகளிடம் விட்டுவிட முடியாது எனவும் அவர் தெரிவித்தார். பல பிரச்சினைகளுக்கான தீர்வு ஒன்றுதான் எனவும் அது தற்சார்பு பாரதத்தை உருவாக்குதல் என்றும் அவர் கூறினார்.
இந்தியா வரலாற்று ரீதியாக ஒரு முன்னணி கடல்சார் சக்தியாகவும், உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டும் மையங்களில் ஒன்றாகவும் இருந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் கடலோர மாநிலங்களில் கட்டப்பட்ட கப்பல்கள் ஒரு காலத்தில் உள்நாட்டு மற்றும் உலகளாவிய வர்த்தகத்தை இயக்கி வந்ததாக அவர் கூறினார். முந்தைய ஆட்சியாளர்களின் கொள்கைகள், கப்பல் கட்டும் சூழல் அமைப்பை மோசமாக்கி, வெளிநாட்டு கப்பல்களை நம்பியிருப்பதற்கு வழிவகுத்தது என அவர் தெரிவித்தார்.
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு கப்பல் நிறுவனங்களுக்கு கப்பல் சேவைகளுக்காக கிட்டத்தட்ட 75 பில்லியன் டாலர்களை அதாவது சுமார் ஆறு லட்சம் கோடி ரூபாய்களை செலுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த தொகை இந்தியாவின் தற்போதைய பாதுகாப்பு பட்ஜெட்டுக்கு சமம் என்று பிரதமர் எடுத்துரைத்தார். இந்த செலவினத்தில் ஒரு சிறிய பகுதியையாவது முந்தைய அரசுகள் இந்தியாவின் கப்பல் துறையில் முதலீடு செய்திருந்தால், இன்றைய உலகம் இந்திய கப்பல்களைப் பயன்படுத்தும் என்றும், இந்தியா கப்பல் சேவைகளில் லட்சக்கணக்கான கோடிகளை சம்பாதித்திருக்கும் என்றும் திரு நரேந்திர மோடி கூறினார்.
தற்சார்பு என்ற தொலைநோக்குப் பார்வையுடன், இந்தியாவின் கடல்சார் துறை இப்போது அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை நோக்கி நகர்கிறது என்று அவர் கூறினார். கடல்சார் துறையில் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், ஐந்து கடல்சார் சட்டங்கள் புதிய வடிவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இந்த சட்டங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுக நிர்வாகத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்றும் அவர் கூறினார்.
பல நூற்றாண்டுகளாக பெரிய கப்பல்களை உருவாக்குவதில் இந்தியா நிபுணத்துவம் பெற்றிருப்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் இந்த மறக்கப்பட்ட மரபை மீட்டெடுக்க உதவும் என்று கூறினார்.
இந்தியாவை ஒரு பெரிய கடல்சார் சக்தியாக மாற்றுவதற்காக, அரசு மூன்று பெரிய திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் கூறிய பிரதமர், இந்த முயற்சிகள் கப்பல் கட்டும் துறைக்கு நிதி உதவியை எளிதாக்கும் என்றார். வரும் ஆண்டுகளில் இந்தத் திட்டங்களில் ₹70,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இன்றைய இந்தியா தனித்துவமான உத்வேகத்துடன் முன்னேறி வருவதை எடுத்துரைத்த பிரதமர், நாடு லட்சிய இலக்குகளை நிர்ணயிப்பது மட்டுமல்லாமல், அவற்றை முன்கூட்டியே அடைகிறது என்றும் குறிப்பிட்டார். சூரிய சக்தி துறையில், இந்தியா நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தனது இலக்குகளை அடைந்து வருகிறது. பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு துறைமுகம் சார்ந்த வளர்ச்சிக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் தற்போது குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று வருகின்றன என்பதை திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். சாகர்மாலா போன்ற முயற்சிகள் மூலம் கடல்சார் இணைப்பு மேம்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
உலக கடல்சார் வர்த்தகத்தில் இந்தியா தற்போது 10 சதவீத பங்களிப்பை வழங்குவதாகக் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, இந்தப் பங்கை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், 2047-ம் ஆண்டுக்குள், உலக கடல்சார் வர்த்தகத்தில் இந்தியா தனது பங்களிப்பை மூன்று மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியா தனது மீனவர்கள் மற்றும் பழங்கால துறைமுக நகரங்களால் அடையாளப்படுத்தப்பட்ட ஒரு வளமான கடல்சார் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்பதை திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார். பாவ்நகர், சவுராஷ்டிரா பகுதிகள் இந்த பாரம்பரியத்தின் முக்கிய எடுத்துக்காட்டுகள் என்று அவர் குறிப்பிட்டார். எதிர்கால சந்ததியினருக்கும் உலகிற்கும் இந்த பாரம்பரியத்தைப் பாதுகாத்து காட்சிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். லோதலில் ஒரு உலகத் தரம் வாய்ந்த கடல்சார் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இது ஒற்றுமை சிலையைப் போலவே, இந்தியாவை அடையாளப்படுத்தும் புதிய அடையாளமாக மாறும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் கடற்கரைகள் தேசிய செழிப்புக்கான நுழைவாயில்களாக மாறும் என்று பிரதமர் கூறினார். இந்தியாவில் கடல் வழியாக வரும் சரக்குகளில் 40 சதவீதம் குஜராத் துறைமுகங்களால் கையாளப்படுகிறது என்றும், இந்த துறைமுகங்கள் விரைவில் பிரத்யேக சரக்கு வழித்தடத்தால் பயனடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
வளர்ந்த இந்தியாவை உருவாக்க, அனைத்து துறைகளிலும் விரைவான முன்னேற்றம் தேவை என்று பிரதமர் வலியுறுத்தினார். மக்கள் தாங்கள் வாங்கும் பொருட்கள் உள்நாட்டுப் பொருட்களாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கூட்டு முயற்சிகள் ஒவ்வொரு பண்டிகையையும் இந்தியாவின் செழிப்பின் கொண்டாட்டமாக மாற்றும் என்று கூறிய பிரதமர் திரு நரேந்திர மோடி, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து தமது உரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், மத்திய அமைச்சர்கள், திரு சிஆர் பாட்டீல், திரு சர்பானந்தா சோனோவால், திரு மன்சுக் மாண்டவியா, இணையமைச்சர் திரு சாந்தனு தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னணி
கடல்சார் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாக, பிரதமர் ₹34,200 கோடி மதிப்புள்ள கடல்சார் துறை தொடர்பான பல மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்திரா கப்பல்துறையில் மும்பை சர்வதேச கப்பல் முனையத்தையும் அவர் திறந்து வைத்தார். கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் ஒரு புதிய கொள்கலன் முனையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வசதிகள்; பாரதீப் துறைமுகத்தில் புதிய கொள்கலன் நிறுத்துமிடம், சரக்கு கையாளும் வசதிகள் மற்றும் தொடர்புடைய மேம்பாடுகள்; டுனா டெக்ரா பல் சரக்கு முனையம்; எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் தீயணைப்பு வசதிகள் மற்றும் நவீன சாலை இணைப்பு; சென்னை துறைமுகத்தில் கடல் சுவர்கள் மற்றும் தடுப்புகள் உள்ளிட்ட கடலோர பாதுகாப்பு பணிகள்; கார் நிக்கோபார் தீவில் கடல் சுவர் கட்டுமானம்; கண்ட்லாவில் உள்ள தீன்தயாள் துறைமுகத்தில் ஒரு பல்துறை சரக்கு நிறுத்துமிடம் மற்றும் பசுமை உயிரி-மெத்தனால் ஆலை; மற்றும் பாட்னா, வாரணாசியில் கப்பல் பழுதுபார்க்கும் வசதிகள் ஆகியவற்றிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
குஜராத்தில் பல்வேறு துறைகளுக்கு உதவும் வகையில், ₹26,354 கோடிக்கு மேல் மதிப்புள்ள மத்திய, மாநில அரசின் பல திட்டங்களைத் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். சாரா துறைமுகத்தில் ஹெச்பி எல்என்ஜி மறுசுழற்சி முனையம், குஜராத் ஐஓசிஎல் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய திட்டம், 600 மெகாவாட் பசுமை முன் முயற்சி, விவசாயிகளுக்கான பிரதமரின் குசும் திட்டத்தில் 475 மெகாவாட் சூரிய சக்தி திட்டம், 45 மெகாவாட் படேலி சூரிய மின் சக்தி திட்டம், தோர்டோ கிராமத்தின் முழுமையான சூரிய சக்தி மின் உற்பத்தி உள்ளிட்டவற்றை அவர் திறந்து வைத்தார். பாவ்நகரில் உள்ள பொது மருத்துவமனை, ஜாம்நகரில் உள்ள குரு கோவிந்த் சின் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் விரிவாக்கங்கள் உட்பட, எரிசக்தி திட்டங்கள், கடலோர பாதுகாப்பு பணிகள், நெடுஞ்சாலைகள், சுகாதாரம், நகர்ப்புற போக்குவரத்து திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
லோதலில் சுமார் ₹4,500 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வரும் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் (NHMC) முன்னேற்றத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
***
(Release ID: 2168875)
AD/PLM/RJ
(Release ID: 2168933)