பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் 4.0-க்கான ஆயத்த நடவடிக்கைகளை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை தொடங்குகிறது
Posted On:
10 SEP 2025 3:26PM by PIB Chennai
நாடு முழுவதும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 4.0 - ஐ நவம்பர் 1 முதல் 30, 2025 வரை நாட்டில் உள்ள அனைத்து 1600 மாவட்டங்கள் மற்றும் துணைப்பிரிவு தலைமையகங்களில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை நடத்தவுள்ளது.
19 ஓய்வூதிய விநியோக வங்கிகள் மற்றும் இந்திய அஞ்சலக பேமென்ட்ஸ் வங்கி ஆகியவற்றின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற உயர்நிலை மதிப்பாய்வுக் கூட்டம் செப்டம்பர் 9, 2025 அன்று ஓய்வூதியச் செயலாளர் திரு வி. ஸ்ரீனிவாஸ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 3.0 - ன் செயல்திறன் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது. முந்தைய நடவடிக்கையில் முக அங்கீகாரத் தொழில்நுட்பம் மூலம் பெறப்பட்ட 50 லட்சத்திற்கும் மேற்பட்ட டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்கள் உட்பட மொத்தம் 1.62 கோடி டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்கள் பெறப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகள், இந்திய அஞ்சலக பேமென்ட்ஸ் வங்கி, மத்திய அரசு அமைச்சகங்கள் / துறைகள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கங்கள் ஆகியவற்றின் தீவிர பங்கேற்புடன் 800-க்கும் அதிகமான மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் 1,900 முகாம்கள் நடத்தப்பட்டன.
ஓய்வூதியம் பட்டுவாடா செய்யும் வங்கிகளின் சார்பில், பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொது மேலாளர் திரு அமிர்தேஷ் மோகன், பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமைப் பொது மேலாளர் திரு ராஜேஷ் பிரசாத் மற்றும் இந்திய அஞ்சலக பேமென்ட்ஸ் வங்கியின் தலைமைப் பொது மேலாளர் திரு குருஷரன் ராய் பன்சால் ஆகியோர் பங்கேற்றனர். ஓய்வூதியம் வழங்கும் பிற வங்கிகளின் மூத்த பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, அவர்களின் வங்கிகளின் சார்பில் ஓய்வூதியம் தொடர்பான வலையமைப்பின் செயல்பாடுகள் மற்றும் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று சேவை வழங்கும் வகையில் அனைத்து வசதிகளும் முழு அளவில் தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்தனர்.
2025 நவம்பர் மாதத்திற்கான தினசரி டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை உருவாக்க இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, 1600 மாவட்டங்கள் மற்றும் துணைப்பிரிவு தலைமையகங்களில் முகாம்களை நடத்த திட்டமிடுதல் மற்றும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களது இல்லங்களுக்கே நேரடியாகச்சென்று சேவைகளை வழங்குதல் போன்ற அம்சங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டது. நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் அறிக்கை தாக்கல் செய்வதற்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்கும் தேசியத் தகவல் மையத்தின் இணையதளத்தைப் பயன்படுத்துவதற்கும் இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து பிரதிநிதிகளும் ஒப்புக்கொண்டனர். வங்கிகளும், இந்திய அஞ்சலக பேமென்ட்ஸ் வங்கியும் 2025 அக்டோபர் மாதத்தில் இதற்கான விரிவான விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளது. இதில் குறுஞ்செய்தி, வாட்ஸ் அப் செயலி, சமூக ஊடகங்கள், பதாகைகள் மற்றும் உள்ளூர் ஊடகங்களைப் பயன்படுத்தி ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படும்.
***
AD/SV/AG/SH
(Release ID: 2165497)
Visitor Counter : 2