பிரதமர் அலுவலகம்
தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் உடனான சந்திப்பில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Posted On:
04 SEP 2025 9:58PM by PIB Chennai
நமது பாரம்பரியத்தில் ஆசிரியர்களுக்கான மரியாதை இயற்கையாகவே உள்ளது. மேலும் அவர்கள் சமூகத்தின் மகத்தான சக்தியாகவும் உள்ளனர். ஆசீர்வதிப்பதற்கு ஆசிரியர்களை எழுந்து நிற்கச் செய்வது தவறாகும். இத்தகைய பாவத்தை செய்வதற்கு நான் விரும்பவில்லை. ஆனால் நான் உங்களுடன் நிச்சயமாக உரையாட விரும்புகிறேன். என்னைப் பொருத்தவரை உங்கள் அனைவரையும் சந்திப்பது சிறப்பான அனுபவமாகும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கே உரித்தான ஒரு கதையைக் கொண்டு இருப்பீர்கள். ஏனெனில் அப்படி இல்லாமல் இந்த நிலையை நீங்கள் அடைந்திருக்க மாட்டீர்கள். அந்தக் கதைகள் அனைத்தையும் அறிவதற்கு போதிய நேரத்தைக் கண்டறிவது சிரமமாகும். ஆனால், உங்களிடமிருந்து என்னால் கற்றுக் கொள்ள முடிவது குறைவாக இருந்தாலும் அது உண்மையில் ஊக்கமளிப்பதாக இருக்கும். அதற்காக உங்கள் அனைவரையும் நான் மனமார வாழ்த்துகிறேன். இந்த தேசிய விருதைப் பெற்றிருப்பது முடிவல்ல. இந்த விருதுக்குப் பின் அனைவரின் கவனமும் உங்கள் மீது இருக்கும். இதன் பொருள், உங்களைப் பற்றிய கவனம், குறிப்பிடத்தக்க வகையில் விரிவடைந்திருக்கும். இதற்கு முன்பு, உங்களின் செல்வாக்கு ஒரு வரம்புக்கு உட்பட்டு இருந்திருக்கும். ஆனால், இந்த அங்கீகாரத்திற்குப் பின், அது மேலும் அதிகரிக்கும். வளர்ச்சியடையும். இது தொடக்கம் என்று நான் நம்புகிறேன். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்குள் இருப்பது எதுவாக இருந்தாலும் சாத்தியமான வரை நீங்கள் மாணவர்களுடன் அதனை பகிர வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்யும் போது தான், உங்களின் மனதிருப்தி உணர்வு அதிகரிக்கும். இந்தத் திசையில் நீங்கள் தொடர்ந்து பாடுபடவேண்டும். இந்த விருதுக்கான உங்களின் தெரிவு, உங்களின் கடின உழைப்பிற்கும் உறுதியான அர்ப்பணிப்புக்கும் சான்றாகும். அதனால் மட்டுமே இது சாத்தியமாகி உள்ளது. ஒரு ஆசிரியர் என்பவர் நிகழ்காலத்திற்கு மட்டுமானவர் அல்ல, அவர் நாட்டின் எதிர்கால தலைமுறையையும் கட்டமைக்கிறார், எதிர்காலத்தை மெருகூட்டுகிறார். நாட்டிற்கான சேவையில் மற்ற எதையும் விட, இது சற்றும் குறைவானதல்ல என்று நான் நம்புகிறேன். உங்களைப் போன்ற கோடிக்கணக்கான ஆசிரியர்கள் இதே அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் நாட்டுக்கான சேவையில் ஈடுபட்டுள்ளனர். இங்கு வருவதற்கான வாய்ப்பை அனைவரும் பெற்றிருக்கவில்லை. ஒரு வேளை பலர், முயற்சி செய்யாமல் இருந்திருக்கலாம் அல்லது சிலர் கவனம் செலுத்தாமல் கூட இருந்திருக்கலாம். இத்தகைய திறன்களுடன் ஏராளமானவர்கள் உள்ளனர். அனைவரின் கூட்டு முயற்சிகளால் தான் நாடு தொடர்ந்து வளர்ச்சியடைவதையும், புதிய தலைமுறைகள் தொடர்ந்து வளர்வதையும் உறுதி செய்ய முடிகிறது. நாட்டுக்காக, நாட்டுக்குள் வாழ்கின்ற அனைவரும் இதற்கு பங்களிக்கின்றனர்.
நண்பர்களே,
நமது நாடு எப்போதும் குரு - சிஷ்ய பாரம்பரியத்தைக் கடைப்பிடித்து வருகிறது. இந்தியாவில் ஆசிரியரை வெறுமனே ஞானத்தை வழங்குகின்ற ஒருவராக பார்ப்பதில்லை. மாறாக வாழ்க்கைக்கு வழிகாட்டியாக பார்க்கப்படுகிறார். நான் அடிக்கடி சொல்வதுண்டு, தாய் ஈன்றெடுக்கிறார். ஆனால், ஆசிரியர் வாழ்வளிக்கிறார். வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பது என்ற இலக்குடன் இன்று நாம் முன்னேறி வரும் நிலையில், குரு – சிஷ்யன் பாரம்பரியம் நமது மகத்தான வலிமைகளில் ஒன்றாகும். உங்களைப் போன்ற ஆசிரியர்கள், இந்த உயரிய பாரம்பரியத்தின் அடையாளங்களாக இருக்கிறீர்கள். இளம் தலைமுறைக்கு நீங்கள் எழுத்தறிவை கொடுப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டுக்காக வாழவும் அவர்களுக்கு கற்றுத் தருகிறீர்கள். எந்தக் குழந்தைக்காக உங்கள் நேரத்தை நீங்கள் அர்ப்பணிக்கிறீர்களோ, அந்தக் குழந்தை ஒரு நாள் இந்த நாட்டிற்கு சேவை செய்யும் என்ற எண்ணம் உங்கள் இதயத்தில் ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும். இத்தகைய அர்ப்பணிக்கப்பட்ட முயற்சிகளுக்காக உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்.
நண்பர்களே,
வலுவான தேசத்திற்கும், சமூகத்திற்கு அதிகாரம் அளிக்கவும், ஆசிரியர்கள் அடித்தளமாக இருக்கின்றனர். காலத்திற்கு ஏற்ப பாடத்திட்டத்தை ஏற்றுக் கொள்வதன் முக்கியத்துவத்தை ஆசிரியர்கள் அறிவார்கள். காலத்திற்கு ஒவ்வாத நடைமுறைகளிலிருந்து விடுபட அவர்கள் விரும்புவார்கள். இதே உணர்வு நாட்டிற்காக மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களிலும் பிரதிபலிக்கிறது. தற்போதுதான் இந்தக் கருத்தை தர்மேந்திரா அவர்கள் தெரிவித்தார். அதனை மேலும் முன்னெடுத்துச் செல்ல நான் விரும்புகிறேன். சீர்திருத்தங்கள் தொடர வேண்டும். அவை நிகழ்காலத்திற்கு பொருத்தமானதாக இருப்பது மட்டுமின்றி தொலைநோக்குப் பார்வையையும் கொண்டிருக்க வேண்டும். அவை எதிர்காலத்தை புரிந்துகொண்டும், ஏற்றுக் கொண்டும், அதற்குத் தயாராகவும் இருக்க வேண்டும். இந்த அரசைப் பொருத்தவரை, நாங்கள் உண்மையான உறுதிப்பாடு கொண்டுள்ளோம். ஏனெனில், காலத்திற்கேற்ற சீர்திருத்தங்கள் இல்லாமல், இன்றைய உலகச் சூழலில் தனக்கான சரியான இடத்தை இந்தியா கோர முடியாது என்று நாங்கள் நம்புகிறோம்.
நண்பர்களே,
இந்தியாவை, தற்சார்புடையதாக மாற்ற அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் தேவை என்பதை ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையிலிருந்து நான் தெரிவித்தேன். தீபாவளிக்கும், சத் பூஜைக்கும் முன்னால் இரட்டைக் கொண்டாட்டம் இருக்கும் என்று நாட்டு மக்களுக்கு நான் வாக்குறுதி அளித்தேன். இரண்டு நாட்களாக நீங்கள் அனைவரும் இங்கே இருப்பதால், செய்தித்தாள்களை படிக்கவோ, தொலைக்காட்சியைக் காணவோ வாய்ப்பில்லாமல் போயிருக்கும் அல்லது வீட்டில் இருக்கும் போது, “உங்களின் புகைப்படம் வெளிவந்துள்ளது” என்று சிலர் உங்களிடம் சொல்லியிருக்கக் கூடும். எவ்வாறாயினும், நாம் முன்னேறி வரும் அதே உணர்வுடன் இந்திய அரசு நேற்று மாநிலங்களுடன் இணைந்து, மிகப் பெரிய முடிவை மேற்கொண்டுள்ளது. இது மிகவும் முக்கியமான முடிவாகும். ஜிஎஸ்டி இப்போது மிகவும் எளிதானதாக மாறியுள்ளது. தற்போது, ஜிஎஸ்டியில் இரண்டு முதன்மை வரி விகிதங்கள் மட்டுமே உள்ளன. அதாவது, 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம். செப்டம்பர் 22, திங்கள் அன்று, தாய்மை சக்தியோடு ஆழமாக இணைந்துள்ள நவராத்திரியின் முதல் நாளன்று, அந்தப் புனிதமான நாளில் ஜிஎஸ்டியின் திருத்தப்பட்ட விகிதம், அடுத்த தலைமுறை சீர்திருத்தம் அமலுக்கு வருகிறது. நவராத்திரி நாளிலிருந்தே நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களின் அத்தியாவசியத் தேவைகள் குறைந்த விலையில் கிடைக்கத் தொடங்கிவிடும். இந்த ஆண்டு தந்தேராஸ் பண்டிகையின் உற்சாகமும் அதிக அளவு இருக்கும். ஏனெனில், டஜன் கணக்கான பொருட்கள் மீதான வரிகள் கணிசமான அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளன.
நண்பர்களே,
எட்டு ஆண்டுகளுக்கு முன், ஜிஎஸ்டி அமலாக்கப்பட்ட போது, பத்து ஆண்டுகால கனவு நனவானது. இது மோடி பிரதமரானதற்கு பின், தொடங்கப்பட்டதல்ல. வெகு காலத்திற்கு முன்பே, இதன் மீது விவாதங்கள் நடைபெற்றன. பிரச்சனை என்னவென்றால், அப்போது பேச்சு மட்டுமே இருந்தது. செயல்பாடு இல்லை. சுதந்திர இந்தியாவில், மிகப் பெரும் பொருளாதார சீர்த்திருத்தங்களில் ஒன்றாக ஜிஎஸ்டி இருந்தது. அந்த நேரத்தில், பன்முக வரிகள் என்ற வலையிலிருந்து நாடு விடுபட்டது. இது மிகப் பெரிய சாதனையாகும். தற்போது 21-ம் நூற்றாண்டில், இந்தியா முன்னேறி வரும் நிலையில், ஜிஎஸ்டியில் அடுத்த தலைமுறை சீர்திருத்தம் தேவைப்பட்டது. அது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஊடகங்களில் உள்ள சில நண்பர்கள் இதனை ஜிஎஸ்டி 2.0 என்கிறார்கள். ஆனால் உண்மையில் இது நாட்டிற்கான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் இரட்டை டோசாக உள்ளது. இரட்டை டோஸ் என்றால் ஒரு பக்கம் சாதாரண குடும்பங்களுக்கான சேமிப்பு மறுபக்கம் நாட்டின் பொருளாதாரத்திற்கு புதிய வலிமை. இந்தப் புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம், நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் மிகவும் பயனடையும். ஏழைகள், புதிய நடுத்தர வகுப்பு, நடுத்தர வகுப்பு, விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் உட்பட அனைவரும் இந்த வரிக்குறைப்பிலிருந்து ஆதாயம் பெறுவார்கள். பன்னீர் முதல் ஷாம்பு மற்றும் சோப்பு வரை அனைத்துப் பொருள்களும் முன்பைவிட இப்போது மலிவாக கிடைக்கும். இதனால், உங்களின் மாதாந்தர வீட்டுச் செலவும் சமையல் அறைச் செலவும் பெருமளவு குறையும். ஸ்கூட்டர்கள் மற்றும் கார்கள் மீதான வரிகள் கூட குறைக்கப்பட்டுள்ளன. தங்களின் தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கியுள்ள இளைஞர்களுக்கு இது உதவியாக இருக்கும். ஜிஎஸ்டி வரிக்குறைப்பால், வீட்டின் வரவு செலவை எளிதாக நிர்வகிக்க முடிவதோடு ஒருவரின் வாழ்க்கை முறையும் மேம்படும்.
நண்பர்களே,
நேற்று மேற்கொள்ளப்பட்ட முடிவு, உண்மையில், மனநிறைவு அளிப்பதாகும். ஜிஎஸ்டி-க்கு முன்பிருந்த வரி விகிதங்களை நீங்கள் மீண்டும் நினைத்துப் பார்த்தால்தான் இதன் உண்மையான தாக்கத்தை புரிந்து கொள்ள முடியும். சில நேரங்களில், எவ்வளவு விஷயங்கள் மாறியிருக்கின்றன என்பதை நாம் உணராமல் இருக்கிறோம். உதாரணமாக உங்கள் குடும்பத்தில் ஒரு குழந்தை 70 மதிப்பெண் பெறுகிறது. பின்னர், அது 71, 72 அல்லது 75 என அதனை உயர்த்துகிறது. அப்போது எவரும் அவ்வளவாக கவனம் செலுத்துவதில்லை. ஆனால், அதே குழந்தை 99 மதிப்பெண் பெற்றால் எல்லோரும் கவனிக்கிறார்கள். அது தான் என்னுடைய கருத்தாக உள்ளது.
நண்பர்களே,
2014-க்கு முன், முந்தைய ஆட்சியில்…. எந்த அரசையும் இங்கு நான் விமர்சிக்கவில்லை, இருப்பினும், நீங்கள் ஆசிரியர்களாக இருப்பதால், இந்த ஒப்பீட்டை எளிதாக எடுத்துக் கொள்வீர்கள். உங்கள் மாணவர்களிடமும், விளக்குவீர்கள். பெரும்பாலும் அனைத்துப் பொருள்களும், வீட்டு உபயோகப் பொருட்களாக இருந்தாலும் வேளாண் பொருட்களாக இருந்தாலும் மருந்துகளாக இருந்தாலும், ஆயுள் காப்பீடும் கூட அதிக வரிகளின் சுமையைக் கொண்டிருந்தன. இவற்றின் மீது காங்கிரஸ் அரசு தனியாக வரிகளை விதித்திருந்தது. அந்த நடைமுறை தொடர்ந்திருந்தால், 2014 வரி விகிதத்திலேயே நாம் இப்போதும் இருந்திருந்தால், 100 ரூபாய்க்கு வாங்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் 20 முதல் 25 ரூபாய் வரை வரியாக செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் இப்போது, சேவை செய்வதற்கான வாய்ப்பை எனக்கு நீங்கள் வழங்கியிருப்பதால் பிஜேபி – தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கவனம் சேமிப்பை அதிகரிப்பதிலும் குடும்பச் செலவுகளைக் குறைப்பதிலும் உள்ளது. இதனால் தான், ஜிஎஸ்டி-யில் தற்போது பல வரிக்குறைப்புகள் செய்யப்பட்டுள்ளன.
நண்பர்களே,
உங்களுடைய மாதாந்திர வீட்டுச் செலவை காங்கிரஸ் அரசு எவ்வாறு அதிகரித்தது என்பதை எவரும் மறந்திருக்க முடியாது. பற்பசை, சோப்பு, எண்ணெய் ஆகிய பொருட்களுக்கு 27 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. அது தற்போது உங்களுக்கு நினைவில்லாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் அதை செலுத்தினீர்கள். தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் போன்ற நாள்தோறும் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மீதான வரி 18 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக இருந்தது. பற்பொடி மீதான வரி 17 சதவீதமாக இருந்தது. காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் நாள்தோறும் பயன்படுத்தக்கூடிய பெரும்பாலான அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகமாக வரி விதிக்கப்பட்டது. குழந்தைகளின் மிட்டாய்களுக்கு கூட காங்கிரஸ் அரசு 21 சதவீத வரியை விதித்தது.
ஒருவேளை நீங்கள் அதை அப்போது செய்தித்தாள்களில் படித்திருக்கலாம், இல்லையெனில் கவனிக்காமலும் இருந்திருக்கலாம். ஆனால் மோடி அதைச் செய்திருந்தால், மக்கள் கோபத்தில் தங்கள் தலைமுடியை இழுத்திருப்பார்கள். இந்த நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் அன்றாடத் தேவையாக இருக்கும் மிதிவண்டிகளுக்குக் கூட 17 சதவீத வரி விதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கண்ணியத்திற்கும் சுயதொழிலுக்கும் ஆதாரமாக இருக்கும் தையல் இயந்திரங்களுக்கு 16 சதவீத வரி விதிக்கப்பட்டது. நடுத்தர வர்க்கத்தினருக்கும் ஓய்வு மற்றும் பயணம் கூட கடினமாகிவிட்டது. காங்கிரஸ் ஆட்சியின்போது, ஓட்டல் அறையில் பதிவு செய்வதற்கு 14 சதவீத வரி விதிக்கப்பட்டது. பல மாநிலங்களில் ஆடம்பர வரி விதிக்கப்பட்டது. தற்போது இதுபோன்ற சேவைகளுக்கு 5 சதவீத வரி மட்டுமே இருக்கும். உண்மையில், தற்போது மோடி இன்னும் 5 சதவீத வரி விதித்துள்ளதாக சில குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு எழுதப்படுகின்றன. ஆனால் மாற்றத்தை காணுங்கள்; ரூபாய் 7500 கட்டணமுடைய ஓட்டல் அறைகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி மட்டுமே விதிக்கப்படும். பி.ஜே.பி – தேசிய ஜனநாயக கூட்டணி அரசை தேர்ந்தெடுத்ததால் இது சாத்தியமானது.
நண்பர்களே,
முன்னதாக இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்கான செலவு மிகவும் அதிகமாக இருந்ததாக குற்றச்சாட்டு இருந்தது. அடிப்படை பரிசோதனைகள் கூட ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினருக்கு எட்டா நிலையில் இருந்தது. நோய் கண்டறிதலுக்கான உபகரணங்களுக்கு கூட காங்கிரஸ் அரசு 16 சதவீத வரி விதித்தது இதற்கு காரணமாகும். எங்களுடைய அரசு இதை வெறும் 5 சதவீதமாக குறைத்துள்ளது.
நண்பர்களே,
காங்கிரஸ் ஆட்சியின்போது, வீடுகளை கட்டுவது மிகவும் செலவு மிக்கதாக இருந்தது. ஏன்? ஏனென்றால் காங்கிரஸ் அரசு சிமெண்டுக்கு 29 சதவீத வரி விதித்தது. வீடு கட்டப்பட்டாலும் கூட, குளிர்சாதன இயந்திரம், தொலைக்காட்சிப் பெட்டி அல்லது மின்விசிறி போன்ற அடிப்படை வீட்டு உபயோகப் பொருட்களை கொண்டுவருவதும் செலவுமிக்கதாக இருந்தது. ஏனென்றால் காங்கிரஸ் அரசு இதுபோன்ற பொருட்களுக்கு 31 சதவீத வரி விதித்தது. முப்பத்தியோரு சதவீத வரி! தற்போது எங்களுடைய அரசு இதுபோன்ற பொருட்களுக்கு 18 சதவீத வரி விதித்துள்ளது. இது சுமார் பாதியளவாகும்.
நண்பர்களே,
காங்கிரஸ் ஆட்சியின்போது, விவசாயிகளும் மிகவும் இன்னல்களுக்கு ஆளாகினர். 2014-ம் ஆண்டிற்கு முன்பு லாபம் மிகவும் குறைவாக இருந்தபோது, அறுவடைக்கான செலவு மிகவும் அதிகமாக இருந்தது. வேளாண் உபகரணங்களுக்கு கூட அதிக வரியை விதித்தது இதற்கு காரணமாகும். டிராக்டர்கள், பாசன உபகரணங்கள், கைக் கருவிகள் அல்லது நீர் உறிஞ்சும் அமைப்புகள் எதுவாக இருந்தாலும் அப்பொருட்களுக்கு 12 முதல் 14 சதவீத வரி விதிக்கப்பட்டது. தற்போது இதுபோன்ற பல பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி பூஜ்ஜியமாகவோ அல்லது வெறும் 5 சதவீதமாகவோ விதிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
வளர்ச்சியடைந்த இந்தியாவின் மற்றொரு தூண் நமது இளையோர் சக்தி ஆகும். நமது இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளும் அவர்களின் சிறுதொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு குறைவான சிரமங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிக தொழிலாளர்களைக் கொண்ட துறைகள் குறைவான ஜி.எஸ்.டி விகிதம் மூலம், பெரும் நிவாரணம் பெறுகின்றனர். ஜவுளி, கைவினைப் பொருட்கள் அல்லது தோல் பொருட்கள் என எந்த துறையாக இருந்தாலும், அதனுடைய பணியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் மிகவும் பயன்பெற்றுள்ளனர். அத்துடன் துணிகள் அல்லது காலணிகளின் விலைகளும் கூட பெருமளவில் குறைய உள்ளன. நமது புத்தொழில் நிறுவனங்கள், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு வர்த்தகர்களுக்கான வரிகள் மட்டும் குறைக்கப்படவில்லை, சில நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன. இது அவர்களுடைய வர்த்தகத்தை மேலும் எளிதாக்கும்.
நண்பர்களே,
இளைஞர்கள் உடல் உறுதிக்கான துறையிலும் பயன்பெறுவார்கள். உடற்பயிற்சிக் கூடங்கள், முடி திருத்தகங்கள் மற்றும் யோகா வகுப்புகள் போன்ற சேவைகளுக்கு வரிகள் குறைக்கப்பட்டுள்ளது. நமது இளைஞர்கள் உறுதியுடன் இருப்பார்கள் என்பதே இதற்கு அர்த்தமாகும். உங்கள் உடல் உறுதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதை நான் உங்களுக்கு நினைவுறுத்தி ஒரு விஷயத்தை உங்களுக்கு தொடர்ந்து வலியுறுத்துகிறேன்; நாள்தோறும் 200 பேரிடம் நீங்கள் உரையாடுகிறீர்கள். உடல் பருமன் என்பது நமது நாட்டில் பெரும் கவலைக்குரிய ஒன்று என்ற எனது செய்தியை தயவுசெய்து பகிருங்கள். அதனால்தான் உங்களுடைய எண்ணெய் நுகர்வை 10 சதவீதம் அளவிற்கு குறைக்குமாறு கூறுகிறேன். முகமது அவர்களே, இதற்கான எனது தூதராக நீங்கள் இருக்கவும். உடல் பருமனுக்கு எதிரான போர் பலவீனமடைந்துவிடக்கூடாது.
நண்பர்களே,
ஜி.எஸ்.டி.யில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களை நான் பட்டியலிட்டால், இந்தியாவின் வளமான பொருளாதாரத்திற்கு 5 ஆபரணங்களை அவர்கள் சேர்த்துள்ளதாக கூறுவேன். முதலாவதாக வரி முறைகள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இரண்டாவதாக இந்திய குடிமக்களின் வாழ்க்கைத்தரம் மேலும் மேம்படும், மூன்றாவதாக நுகர்வு மற்றும் வளர்ச்சி புதிய மேம்பாட்டை எட்டும், நான்காவதாக, எளிதாக வர்த்தகம் செய்வது, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதை வலுப்படுத்தும், ஐந்தாவது, கூட்டுறவு கூட்டாட்சி, அதாவது, மாநில அரசு மற்றும் மத்திய அரசு இடையேயான கூட்டாண்மை, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காக மேலும் வலுவடையும்.
நண்பர்களே,
நமது குடிமக்கள் தெய்வீகத்தை போன்றவர்கள் என்பது நமக்கு வழிகாட்டும் மந்திரமாகும். இந்த ஆண்டு ஜி.எஸ்.டி மட்டும் குறைக்கப்படவில்லை, வருமான வரியும் குறைக்கப்படுள்ளது. 12 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு முழுவதுமாக வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நீங்கள் வருமான வரி தாக்கல் செய்யும்போது இந்த சிறப்பான முடிவின் விளைவை நீங்கள் உணர்வீர்கள் இல்லையா? வருவாய் மற்றும் செலவினங்களில் வருவாய் என்பது இதற்கு அர்த்தமாகும். இது இரட்டைக் கொண்டாட்டம் இல்லாமல், வேறு என்ன!
நண்பர்களே,
தற்காலங்களில் பணவீக்க விகிதம் மிகவும் குறைந்து கட்டுக்குள் உள்ளது. இதைத்தான் மக்களுக்கு உகந்த நிர்வாகம் என்று நாங்கள் அழைக்கிறோம். பொதுமக்கள் மற்றும் நாட்டின் நலன்கருதி முடிவுகள் எடுக்கப்படும்போது, நாடு முன்னேற்றப்பாதையில் செல்கிறது. அதனால்தான், இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி சுமார் 8 சதவீதமாகும். உலகில் நாம் விரைவாக வளர்ச்சி அடைகிறோம். இது 140 கோடி மக்களின் வலிமையாகும். 140 கோடி மக்களின் உறுதிப்பாடாகும். எனது சக குடிமக்களுக்கு மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்வது: தற்சார்பு இந்தியாவை திகழச் செய்ய சீர்திருத்தப் பயணம் தொடரும் இது நிறுத்தப்படாது.
நண்பர்களே,
தற்சார்பு என்பது இந்தியாவுக்கான வெறும் சொற்றொடர் அல்ல, இந்த திசையில் வலுவான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நீங்கள் அனைவரும், நாட்டின் அனைத்து ஆசிரியர்களும், தற்சார்பு இந்தியா (ஒரு சுயசார்பாக இந்தியா) என்பதன் முக்கியத்துவத்தை, ஒவ்வொரு மாணவரிடமும் விதைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இந்தியாவிற்கு தன்னம்பிக்கை ஏன் மிகவும் முக்கியமானது என்பதை, குழந்தைகளுக்கு அவர்களின் சொந்த எளிய மொழியிலும் பேச்சுவழக்கிலும் விளக்கக்கூடியவர்கள் நீங்களே. அவர்கள் உங்களை நம்புகின்றனர். மற்றவர்களைச் சார்ந்திருக்கும் ஒரு நாடு அதன் உண்மையான ஆற்றலை ஈடுபடுத்தும் அளவிற்கு விரைவாக முன்னேற முடியாது என்று நீங்கள் அவர்களிடம் கூறலாம்.
நண்பர்களே,
தற்போதைய மாணவர்கள் மற்றும் இந்தியாவின் எதிர்கால தலைமுறையினரிடையே ஒரு கேள்வி அவசியம் தொடர்ந்து எழுப்பப்பட வேண்டும் என்பதே நமது கடமையாகும். பள்ளிக் கூடங்களில் கூட இதுகுறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சில நேரங்களில் இச்சோதனையை முயற்சித்துப் பாருங்கள். எத்தனை வெளிநாட்டுப் பொருட்கள் உங்கள் வீடுகளில் உள்ளது என்பதை உங்களால் கூட உணர இயலாது. நீங்கள் வெளிநாட்டுப் பொருட்களை விரும்பாவிட்டால் கூட, அவை ஏற்கனவே உங்கள் வீடுகளில் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள் தங்களுடையே குடும்பத்தினருடன் அமர்ந்து காலை முதல் அடுத்தநாள் காலை வரை பயன்படுத்தக்கூடிய அனைத்துப் பொருட்களையும் பட்டியலிட வேண்டும். கொண்டை ஊசியும் வெளிநாட்டு தயாரிப்பு, சீப்பும் வெளிநாட்டு தயாரிப்பு என்பதை அவர்கள் ஆச்சரியத்துடன் உணர்வார்கள்! தற்போது அவர்கள் அதை உணரவில்லை என்றாலும் ஒருமுறை விழிப்புணர்வு ஏற்படும்போது குழந்தைகள் சொல்வார்கள்; ஓ, இதன்மூலம் எனது நாட்டிற்கு என்ன பயன் என்று! அதனால்தான் புதிய தலைமுறையினருக்கு நீங்கள் உத்வேகம் அளிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். தற்போது மகாத்மா காந்தி நமக்கு விட்டுச்சென்ற பணியை நிறைவு செய்வதற்கான அதிர்ஷ்டம் நமக்கு கிடைத்துள்ளது. நாம் அனைவரும் இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். குழந்தைகள் அனைவரையும் ஊக்குவியுங்கள் என்று நான் எப்போதும் கூறுகிறேன்; என்னால் என்ன செய்ய முடியும், அதனால் எனது நாட்டின் குறைந்தது ஒரு தேவையை நான் நிறைவு செய்வேனா? எனது நாட்டில் ஏதேனும் ஒரு பொருள் இல்லை எனில் நான் அதைச் செய்வேன், நான் முயற்சிப்பேன், நான் அதை இங்கே கொண்டு வருவேன்.
தற்போது கற்பனை செய்து பாருங்கள், தற்போதும் கூட, நம் நாடு ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சமையல் எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. சமையல் எண்ணெய்! நாம் வேளாண்மையை மையமாகக் கொண்ட நாடு. அது நமது வாழ்க்கை முறையாக இருந்தாலும் சரி, நமது தேவைகளாக இருந்தாலும் சரி, அல்லது நமது கட்டாயங்களாக இருந்தாலும் சரி, இதுபோன்ற பல அம்சங்கள் உள்ளன. ஆனால் நாடு தன்னிறைவு பெற வேண்டும். தற்போதைக்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய் வெளியே செல்கிறது. அந்தப் பணம் இங்கேயே இருந்திருந்தால், எவ்வளவு பள்ளிகள் கட்டப்பட்டிருக்கும், எவ்வளவு குழந்தைகளின் வாழ்க்கை வடிவமைக்கப்பட்டிருக்கும். அதனால்தான் நாம் தற்சார்பு இந்தியா என்பதை, நமது வாழ்க்கை மந்திரமாக மாற்ற வேண்டும். புதிய தலைமுறையை அதற்கு ஊக்குவிக்க வேண்டும், மேலும் நாட்டின் தேவைகளுடன் நம்மை இணைத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமானது. நாம் இருக்கும் இடத்திலிருந்து நாம் செல்லக்கூடிய இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்வது நாடாகும். நாடு நமக்கு நிறைய அளிக்கிறது. எனவே நாம் எப்போதும் நாட்டிற்கு என்ன பங்களிப்பு செய்ய முடியும் என்று சிந்திக்க வேண்டும். நாட்டின் என்ன தேவைகளை நாம் நிறைவேற்ற முடியும்? இது ஒவ்வொரு மாணவர் மற்றும் புதிய தலைமுறையின் ஒவ்வொரு உறுப்பினரின் மனதிலும் இடம்பெற வேண்டும்.
நண்பர்களே,
இன்று இந்திய மாணவர்களிடையே புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஈடுபாடு அதிகரித்துள்ளது. சந்திரயான் திட்டத்தின் வெற்றி இதில் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது. ஒரு விஞ்ஞானியாகவும், புதிய கண்டுபிடிப்பாளராகவும் கனவு காண்பதற்கு சந்திரயான் திட்டம் குழந்தைகளை ஊக்குவித்துள்ளது. குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமி திரும்பியதும் சமீபத்தில் தனது பள்ளிக்கு சென்றிருந்த போது அங்கு ஒட்டுமொத்த சூழலும் மாறி இருந்ததை நாம் அனைவரும் அறிவோம். சுபான்ஷுவின் சாதனைக்கு பின்னணியில் அவரது ஆசிரியர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். இளம் வயதினருக்கு ஆசிரியர்கள் கற்றுத் தருவது மட்டுமல்லாமல், அவர்களை சரியான பாதையில் வழி நடத்தி, அவர்களை உருவாக்குகிறார்கள் என்பதையும் இது காட்டுகிறது.
நண்பர்களே,
உங்களது முயற்சிகளுக்கு அடல் புத்தாக்க இயக்கமும், அடல் ஆய்வகங்களும் தற்போது உறுதுணையாக உள்ளன. இதுவரை நாடு முழுவதும் பத்தாயிரம் அடல் ஆய்வகங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 50,000 ஆய்வகங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டு இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. உங்களைப் போன்ற ஆசிரியர்களின் ஆதரவினால் தான் இந்தியாவின் இளம் தலைமுறையினர் இதுபோன்ற ஆய்வகங்களில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வாய்ப்புகளை பெறுகிறார்கள்.
நண்பர்களே,
ஒருபுறம் நமது அரசு புதிய கண்டுபிடிப்புகளை வலியுறுத்தி, இளைஞர்களுக்கு டிஜிட்டல் சார்ந்த அதிகாரத்தை வழங்கி வருகிறது. மறுபுறம் நமது புதிய தலைமுறையினர், பள்ளி மாணவர்கள் மற்றும் வீட்டில் உள்ள குழந்தைகளை டிஜிட்டல் உலகின் எதிர்மறை தாக்கங்களிலிருந்து நாம் பாதுகாக்க வேண்டும். இதனுடன் அவர்களது ஆரோக்கியம் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதிலும் நாம் இணைந்து கவனம் செலுத்த வேண்டும். அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது இணையவழி விளையாட்டுகள் தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆசிரியர்கள் இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இது விளையாட்டு மற்றும் சூதாட்டம் தொடர்பானது. துரதிஷ்டவசமாக, விளையாட்டாக தொடங்குவது, சூதாட்டமாக மாறுகிறது. அதனால்தான் முக்கிய முடிவை அரசு எடுத்துள்ளது. இது போன்ற சட்டம் வரக்கூடாது என்றும், நம் நாட்டில் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கூடாது என்றும் சில ஆதிக்க சக்திகள் முயற்சித்தன. ஆனால் அரசியல் உறுதிப்பாட்டுடன், நாட்டு மக்களின், குறிப்பாக குழந்தைகளின் வளமான எதிர்காலத்தில் அக்கறை கொண்டுள்ள அரசு தற்போது ஆட்சியில் உள்ளது. அதனால்தான் எந்தவிதமான அழுத்தத்திற்கோ, விமர்சனத்திற்கோ அடிபணியாமல், இணையவழி விளையாட்டுகள் தொடர்பான சட்டத்தை நாங்கள் இயற்றி இருக்கிறோம். மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இது போன்ற ஏராளமான விளையாட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இவற்றில் பணம் செலுத்தி விளையாட வேண்டும். கூடுதல் தொகையை சம்பாதிக்கும் நோக்கத்துடன் மக்கள் இதில் முதலீடு செய்வார்கள். ஒரு சில வீடுகளில் குடும்பத்தினர் பணிக்கு சென்றதும் செல்பேசி வைத்திருக்கும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து குடும்ப உறுப்பினர்களும் இதுபோன்ற விளையாட்டுகளில் நேரம் செலவழிப்பதாக எனக்கு தகவல்கள் கிடைத்தன. இத்தகைய விளையாட்டுகளால் பாதிக்கப்பட்டு தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்ததுடன் மக்கள் கடனிலும் மூழ்கினர். குடும்பங்கள் சீரழிந்ததுடன் நிதி இழப்பு அதிகரித்தது. போதைப் பொருட்கள் போன்ற அடிமை போக்காக இது மாறியது. இது போன்ற விளையாட்டுகள் உங்களை வலையில் சிக்க வைத்து, உங்கள் ஆர்வத்தை தூண்டி யாரை வேண்டுமானாலும் பலியாக்கலாம். குடும்பங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இது மாறியது. அதனால்தான், சட்டம் இயற்றப்பட்டதும் குழந்தைகளிடையே அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம் என்று நான் கூறுகிறேன். பெற்றோர்கள் புகார் அளிக்கலாம், எனினும் வீட்டு சூழலில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் இது போன்ற சூழ்நிலையை அவர்களால் மாற்ற முடியாது. எனினும் இது போன்ற விஷயங்களில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கலாம். நாங்கள் சட்டத்தைக் கொண்டு வந்திருப்பதுடன், இதுபோன்ற அபாயகரமான விஷயங்கள் குழந்தைகளை ஒருபோதும் சென்றடையக் கூடாது என்பதை முதன் முறையாக உறுதி செய்திருக்கிறோம். இது குறித்து உங்கள் மாணவர்கள் அனைவரிடமும் விழிப்புணர்வு அதிகரிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். எனினும் இதில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன: அனைத்து விளையாட்டுகளும் தவறானவை அல்ல; சூதாட்டம் தான் தவறானது. ஒரு விளையாட்டில் பணம் அங்கம் வகிக்காத போது, அந்த விஷயமே வேறாக மாறிவிடுகிறது. ஒரு சில வகையான கேமிங்களை ஒலிம்பிக் அமைப்பே விளையாட்டாக அங்கீகரித்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். திறன் வளர்ச்சி, திறமை மேம்பாடு மற்றும் சிறந்து விளங்குபவர்களுக்கு பயிற்சி அளிப்பது முதலியவை முற்றிலும் வேறுபட்டுள்ளது. ஆனால் அது அடிமைப்போக்காக மாறும்போதும், குழந்தைகளின் வாழ்வை பாதிக்கும் போதும், நாட்டிற்கான பெரும் அச்சுறுத்தலாக மாறுகிறது.
நண்பர்களே,
நமது இளைஞர்கள் கேமிங் துறையில் தங்களது உலகளாவிய இருப்பை விரிவுபடுத்துவதற்கு எங்கள் அரசு ஏராளமான முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தியாவிலும் படைப்பாற்றல் துறையில் ஈடுபட்டிருப்போர் நமது புராணங்கள், கதைகள் மற்றும் கலாச்சாரத்தின் வழியாக புதிய விளையாட்டுகளை உருவாக்கலாம். இணையவழி விளையாட்டு உலகில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் பழமையான விளையாட்டுகள் மற்றும் வளமான கலாச்சார உள்ளீடுகளை இந்தியா தன்னகத்தே கொண்டிருக்கிறது. இவை ஏற்கனவே புழக்கத்தில் இருந்தாலும் நம்மால் இது போன்று மேலும் பல படைப்புகளை உருவாக்க முடியும். இந்தத் துறையில் ஏராளமான புத்தொழில் நிறுவனங்கள் பாராட்டத்தக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இது போன்ற வாய்ப்புகள் பற்றிய தகவல்களை பள்ளிகளும் கல்லூரிகளும் மாணவர்களுக்கு வழங்கினால் அவர்களுக்கு புதிய தொழில்சார் வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
பெரும்பாலானோர் என்னிடம் கேட்ட ஒரு விஷயத்தை குறித்து செங்கோட்டையிலிருந்து நான் கூறியிருந்தேன். சுதேசி போக்கை ஏற்றுக் கொள்வதற்காக, “உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுத்தல்” என்ற அணுகுமுறையைப் பின்பற்றுமாறு வலியுறுத்தி இருந்தேன். சுதேசி என்பது நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட, இங்கு உருவாக்கப்பட்ட, நம் நாட்டு மக்களின் வியர்வையில் உருவான, நமது மண்வாசனையை தாங்கியுள்ள பொருட்களை உள்ளடக்கி இருக்கிறது. என்னை பொறுத்தவரைக்கும் சுதேசி என்பது இதுதான். இதை எண்ணி நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். “இல்லந்தோறும் மூவண்ணக் கொடி” என்று நாம் கூறுவது போல, “இல்லந்தோறும் சுதேசி” என்பதை பறைசாற்றும் பலகையை வீடுகளில் பொருத்துமாறு ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளிடம் கூற வேண்டும். “இது சுதேசி தயாரிப்பு” என்ற அறிவிப்பை ஒவ்வொரு விற்பனையாளரும் பெருமிதத்துடன் பறைசாற்ற வேண்டும். “இது என் நாட்டிற்கு உரியது, இது என் நாட்டில் தயாரிக்கப்பட்டது”, என்று நாம் அனைவரும் பெருமிதத்துடன் உரைக்க வேண்டும். உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுத்தல் இயக்கத்தில் ஆசிரியர்கள் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி, இதற்கான சூழலியலை நாம் கட்டமைக்க வேண்டும்.
கல்விசார் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் வாயிலாக “இந்தியாவில் உற்பத்தி செய்தல்” தயாரிப்புகளை அடையாளம் காண பள்ளிகளில் குழந்தைகளுக்கு கற்றுத் தரப்படலாம். விளையாட்டுகளின் மூலம் நீங்கள் இதை கற்பிக்கலாம். உதாரணமாக தங்கள் வீடுகளில் உள்ள பொருட்களில் சுதேசி தயாரிப்புகள் எத்தனை உள்ளன என்பதை குழந்தைகள் பட்டியலிடலாம். நான் ஏற்கனவே கூறியது போல, அதை மறுநாள் வகுப்பில் அவர்கள் பகிர்ந்து கொள்ளலாம். இந்த மாதம் சுதேசி அல்லாத தயாரிப்புகளை இவ்வளவு குறைக்கலாம் என்றும் அடுத்த மாதம் அதை மேலும் குறைக்கலாம் என்றும் குடும்பத்தினர் முடிவு செய்யலாம். இவ்வாறாக படிப்படியாக ஒட்டுமொத்த குடும்பமும் சுதேசிக்கு மாறும். மேலும் ஒரு பள்ளியில் 10 வகுப்புகள் இருக்கிறது என்றால், ஒவ்வொரு வகுப்பும் தினமும் காலை சுதேசி தயாரிப்புகளை ஊக்குவிக்கும் பதாகைகளை ஏந்தி கிராமத்தில் பேரணி நடத்தலாம் என்று நான் யோசனை கூறுவேன். முதல் நாள் ஒன்றாம் வகுப்பு, அடுத்த நாள் இரண்டாம் வகுப்பு, அதற்கு மறுநாள் மூன்றாம் வகுப்பு என்ற வகையில் இதை மேற்கொள்ளலாம். இந்த வகையில் சுதேசி என்ற முழக்கம் கிராமத்தில் எப்போதுமே உயிர்ப்பித்திருக்கும். இதன் மூலம் நாட்டின் பொருளாதார சக்தியும் கணிசமாக வலுவடையும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு தனிநபரும் தன்னால் இயன்ற சிறிய பங்களிப்பை வழங்கினால், 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நமது கனவை நாம் அடையலாம். நாடு வளர்ச்சி அடைவதை விரும்பாதவர் யார் தான் இருப்பார்? ஒருவர் கூட இருக்க மாட்டார். ஆனால் அதற்காக நாம் ஏதேனும் துவக்கத்தை மேற்கொள்ள வேண்டும். நாம் முயற்சிகளை எடுக்க வேண்டும்.
நண்பர்களே,
பள்ளிகளில் பல்வேறு வகையான பண்டிகைகளையும் விழாக்களையும் நாம் கொண்டாடுகிறோம். இது போன்ற கொண்டாட்டங்களில் சுதேசியின் முக்கியத்துவத்தையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம். விழாக்களுக்கான அலங்கார தயாரிப்புகளில் இந்திய பொருட்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும், கலை மற்றும் கைவினை வகுப்புகளில் உள்நாட்டு தயாரிப்புகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். இது போன்ற நடைமுறைகள் இளம் வயதில் இருந்தே குழந்தைகளிடையே சுதேசி உணர்வை வளர்க்கும் சூழலை உருவாக்கும்.
நண்பர்களே,
பள்ளிகளில் ஏராளமான விழாக்களை நாம் கொண்டாடுகிறோம். அந்த வகையில் “சுதேசி தினம்”, “சுதேசி வாரம்” அல்லது “உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான தினம்” முதலியவற்றை நாம் ஏன் கொண்டாடக்கூடாது? ஆசிரியர்களாகிய உங்களின் வழிகாட்டுதலின் கீழ் இத்தகைய பிரச்சாரங்களை நாம் மேற்கொண்டால், சமுதாயத்திற்கு புதிய அடையாளத்தையும் பாதையையும் உருவாக்குவதில் நீங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவீர்கள். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு பொருளை வீடுகளில் இருந்து குழந்தைகள் பள்ளிக்கு எடுத்து வந்து, அது எங்கே தயாரிக்கப்பட்டது, யாரால் உருவாக்கப்பட்டது, நாட்டிற்கு அதன் முக்கியத்துவம் போன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் சூழலை உருவாக்கலாம். பல தலைமுறைகளாக கலைப் பொருட்களின் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கைவினை கலைஞர்கள் குடும்பங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களுடன் குழந்தைகளை கலந்துரையாட வைக்கலாம். இது போன்ற நபர்கள் மாணவர்களிடம் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அவர்கள் பள்ளிகளுக்கு அழைக்கப்படலாம். பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போதும் பரிசுகளை பரிமாறிக் கொள்ளும் போது, “இதோ இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள். உனக்காகவே இதை நான் வாங்கி வந்தேன்”, என்று பெருமிதத்துடன் குழந்தைகள் கூறிக் கொள்ளும் சூழலை ஏற்படுத்தித் தரலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட தயாரிப்புகளை நமது வாழ்க்கையின் அடிப்படையாக நாம் கொள்ள வேண்டும். இதை நமது பொறுப்பாக கருதி முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை மற்றும் உழைப்பின் மதிப்பு போன்ற மாண்புகள் நமது சமூக வாழ்க்கையின் ஓர் அங்கமாகவ இயற்கையாகவே மாறிவிடும். தங்களது தனிப்பட்ட வெற்றியை நாட்டின் முன்னேற்றத்துடன் இணைக்க இது இளைஞர்களை ஊக்குவிக்கும். ‘வளர்ச்சியடைந்த பாரதத்தைக்’ கட்டமைப்பதற்கான மிகப்பெரிய சூத்திரமாக இதை நான் கருதுகிறேன். பொறுப்புணர்வுடன் தேச கட்டமைப்பிற்கான இந்த மகத்தான இயக்கத்தில் ஆசிரியர்களாகிய நீங்கள் இணைவீர்கள் என்று நான் நம்புகிறேன். நமது நாட்டை வலிமைப்படுத்துவதற்கான பொறுப்பை உங்கள் தோள்களில் நீங்கள் சுமக்கும் போது நாம் விரும்பும் பலன்களை நிச்சயம் அடைவோம். இத்தகைய மதிப்புமிக்க தேசிய விருதை வென்றதற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக நீங்கள் தருவதை உங்களுக்கு நான் அளித்திருக்கிறேன்- அதாவது உங்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கி இருக்கிறேன். நீங்கள் இதை முழுமையாக பூர்த்தி செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். மிக்க நன்றி!
***
(Release ID: 2163981)
SS/SMB/IR/BR/KPG/LDN/KR
(Release ID: 2165023)
Visitor Counter : 4
Read this release in:
Hindi
,
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam