நிதி அமைச்சகம்
இந்திய அரசுக்கும், இஸ்ரேல் அரசுக்கும் இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் புதுதில்லியில் கையெழுத்தானது
Posted On:
08 SEP 2025 6:14PM by PIB Chennai
இந்திய அரசுக்கும், இஸ்ரேல் அரசுக்கும் இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் புதுதில்லியில் கையெழுத்தானது. இந்திய அரசின் சார்பில் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனும், இஸ்ரேல அரசின் சார்பில் அந்நாட்டு நிதித்துறை அமைச்சர் மேதகு திரு பெசலேல் ஸ்மோட்ரிச்சும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இஸ்ரேல் அரசின் மூத்த அதிகாரிகள் அடங்கிய பிரதிநிதிக் குழு மற்றும் இந்திய அரசின் உயரதிகாரிகளின் முன்னிலையில் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் உறவில் குறிப்பிடத்தக்க வரலாற்று தருணத்தைக் குறிக்கிறது. இந்த ஒப்பந்தம் முதலீடுகளை ஊக்குவித்து, முதலீட்டாளர்களுக்கு மேம்பட்ட நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் வழங்கும் என்றும், வர்த்தகம் மற்றும் பரஸ்பர முதலீடுகளின் வளர்ச்சியை எளிதாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 800 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டை கொண்டுள்ள இரு நாடுகளுக்கு இடையேயான இரு தரப்பு முதலீடுகள், இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக கணிசமாக அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் இந்தியா மற்றும் இஸ்ரேலில் வர்த்தகங்கள் மற்றும் பொருளாதாரங்கள் மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தத்தின் பயன்களைப் பெறுவதற்காக இரு நாடுகளும் முதலீட்டு வாய்ப்புகளை ஆய்வு செய்வதற்கு கூடுதல் வர்த்தக கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டும் என்று திருமதி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குவதற்கும், நாட்டில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கும், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா ஏராளமான தொடர்ச்சியான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வந்ததை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இஸ்ரேலில் இன்று நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு நிதியமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். உலகளாவிய அமைதிக்கு குறிப்பிடத்தக்க பங்களித்த இரு நாடுகளின் நாகரீக பண்புகள் மற்றும் பகிரப்பட்ட மாண்புகள் பற்றி திருமதி நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார். இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பயங்கரவாத அச்சுறுத்தலை இரண்டு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டதுடன், ஒருவருக்கொருவர் ஆதரவை வெளிப்படுத்தினர்.
பாதுகாப்பு சவால்களுக்கு இடையிலும் இரண்டு நாடுகளும் அதிக பொருளாதார வளர்ச்சியை அடைவதன் பின்னணியில் இருக்கும் வலிமையான பொதுவான காரணிகள் பற்றி இஸ்ரேல் அமைச்சர் பேசினார். சைபர் பாதுகாப்பு, பாதுகாப்பு, புத்தாக்கம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
நிதிநுட்ப துறையில் புத்தாக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு, நிதி ஒழுங்குமுறை மற்றும் டிஜிட்டல் கட்டண இணைப்பு முதலிய துறைகளில் மேம்பட்ட பொருளாதார ஒத்துழைப்பை நோக்கிய உறுதிப்பாட்டை இரு நாட்டு அமைச்சர்களும் முன்வைத்தனர். இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பை மேம்படுத்தவும் முதலீடுகளை பாதுகாத்து ஊக்குவிக்கவும் அவர்கள் இசைவு தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2164745
***
(Release ID: 2164745)
SS/BR/KR
(Release ID: 2164911)
Visitor Counter : 2