விவசாயத்துறை அமைச்சகம்
புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், இந்திய விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்: மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான்
Posted On:
06 SEP 2025 8:41PM by PIB Chennai
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள், வேளாண் துறையில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், வேளாண் உபகரணங்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டிருப்பதால், சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் லாபங்கள் அதிகரித்து, அவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் மத்திய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
போபாலில் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர், உயிரி- பூச்சிக்கொல்லிகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் முதலியவற்றின் மீதான வரிகள் குறைக்கப்பட்டிருப்பது, விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்றும், ரசாயன உரங்களிலிருந்து இயற்கை உரங்களுக்கு ஏராளமான விவசாயிகள் மாறுவார்கள் என்றும் கூறினார். பால்வளத் துறையைப் பொறுத்தவரை, பால் மற்றும் பாலாடைக் கட்டிக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால், சாமானிய மக்கள், கால்நடை பராமரிப்பாளர்கள், விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்று திரு சிவராஜ் சிங் சவுகான் குறிப்பிட்டார்.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் அதிகளவில் ஈடுபடும் கைவினைப் பொருட்கள், தோல் மற்றும் பால் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்பட்டிருப்பதன் வாயிலாக அவர்களின் வருமானம் பெருகுவதுடன், லட்சாதிபதி சகோதரிகளாக அவர்களது நிலை மேலும் வலுவடையும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் என்றும், ஒருங்கிணைந்த வேளாண்மையை நோக்கி நாடு முன்னேறுகிறது என்றும் அவர் கூறினார். வேளாண் விளைப் பொருட்களின் வளர்ச்சியுடன், இந்தப் பணியில் ஈடுபடும் விவசாயிகளும் எழுச்சி பெறுவார்கள் என்று திரு சிவராஜ் சிங் சவுகான் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2164420
****
(Release ID: 2164420)
AD/BR/SG
(Release ID: 2164485)
Visitor Counter : 2