ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உயர் ரக மருத்துவ சாதனங்கள் உற்பத்தியில் தற்சார்பை நோக்கி இந்தியா முன்னேறுகிறது : மருந்தியல் துறைச் செயலாளர் திரு அமித் அகர்வால்

Posted On: 30 AUG 2025 9:17AM by PIB Chennai

குறைந்த செலவில் புதுமையான சுகாதாரத் தீர்வுகளை வழங்குவதில் இந்தியா முன்னணி நாடாக உருவெடுத்து வருவதாக மத்திய மருந்தியல் துறைச் செயலாளர் திரு அமித் அகர்வால் கூறியுள்ளார்.

"ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு மருத்துவ தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல்: இந்தியாவில் தயாரிப்போம், உலகத்திற்காக தயாரிப்போம்" என்ற கருப்பொருளில், புதுதில்லியில் நடைபெற்ற 17-வது உலகளாவிய மருத்துவ தொழில்நுட்ப உச்சிமாநாட்டில் உரையாற்றிய அவர், மருத்துவத் தொழில்நுட்பத் துறையின் முக்கிய நோக்கம் நோயாளிகளின் நல்வாழ்வை மையமாகக் கொண்டது என்றார்.

கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின், எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் இயந்திரங்கள், மேமோகிராபி கருவிகள், வென்டிலேட்டர்கள், ஸ்டென்ட்கள், இதய வால்வுகள், டயாலிசிஸ் இயந்திரங்கள், பல்வேறு உள்வைப்பு சாதனங்கள் உள்ளிட்ட மேம்பட்ட உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை வெற்றிகரமாகக் கடந்துள்ளது என்று திரு அமித் அகர்வால் குறிப்பிட்டார். பத்து ஆண்டுகளுக்கு முன் உள்ளூர் உற்பத்திக்கு சாத்தியமற்றதாகத் தோன்றிய மருத்துவ சாதன தயாரிப்புகள் இப்போது இந்தியாவில் தயாரிக்கப்படுவதாக அவர் கூறினார். இது நாட்டின் தற்சார்புத் திறன்களையும் புதிய கண்டுபிடிப்பு சூழல் அமைப்பையும் நிரூபிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

மருத்துவத் தொழில்நுட்பத் துறைக்கு அரசு அளிக்கும் ஆதரவை எடுத்துரைத்த அவர், வரும் ஆண்டில் மூன்று பிரத்யேக மருத்துவ சாதன பூங்காக்கள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார். மருத்துவ சாதனங்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் அரசு வழங்கும் ஆதரவு இந்தத் தொழில்துறையை முன்னேற்றுவதற்கான முக்கிய நடவடிக்கை என அவர் குறிப்பிட்டார்

இந்த நடவடிக்கைகள், இத்துறையில் இந்தியா தனது சொந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மட்டுமின்றி, உலக அளவில் குறைந்த செலவில் புதுமையான சுகாதாரத் தீர்வுகளை வழங்கவும் உதவும் என்று திரு அமித் அகர்வால் கூறினார்.

***

(Release ID: 2162129)

AD/SMB/PLM/RJ


(Release ID: 2162335) Visitor Counter : 16