இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவின் உலகளாவிய பங்கினை 2036-ம் ஆண்டுக்குள் 25% ஆக உயர்த்த இலக்கு - மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா
Posted On:
30 AUG 2025 4:43PM by PIB Chennai
விளையாட்டுத் துறையில் தற்சார்பு பாரதத்தை கட்டமைக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா கூறியுள்ளார். இன்று (30.08.2025) புதுதில்லியில் நடைபெற்ற முதலாவது விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி மாநாட்டிற்கு அவர் தலைமை வகித்தார். இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு, இந்தியாவின் விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தித் திறன்களுக்கான புதிய செயல்திட்டத்தை உருவாக்குவதற்காக நித்தி ஆயோக், வர்த்தக அமைச்சகம், தொழில் துறை அமைப்புகள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், முன்னணி விளையாட்டுத் துறை பிரதிநிதிகள் ஆகியோரை ஒருங்கிணைத்தது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு மன்சுக் மாண்டவியா, விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தியை தேசிய வளர்ச்சி செயல்திட்டத்துடன் இணைப்பது குறித்த அரசின் தொலைநோக்குப் பார்வையை சுட்டிக்காட்டினார். இந்தியாவில், விளையாட்டுச் சூழல் அமைப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. என அவர் கூறினார். விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி அரசின் முன்னுரிமைத் துறையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தியில் இந்தியா தற்போது 1 சதவீத பங்கினைக் கொண்டுள்ளதாகவும் இதை 2036-ம் ஆண்டுக்குள் 25 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த மாநாட்டில், விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தித் துறை, இந்தியாவின் பலம், அதை உலகளாவிய மையமாக மாற்றுவதற்கான உத்தி, இந்தத் துறையில் உள்ள சவால்கள், அதற்கான தீர்வுகள் ஆகியவை குறித்து தொழில்துறை பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்திய விளையாட்டுப் பொருட்கள் துறையின் மதிப்பு 2024-ம் ஆண்டில் 4.88 பில்லியன் அமெரிக்க டாலர் (42,877 கோடி ரூபாய்) ஆகும். இது 2027-ம் ஆண்டில் 6.6 பில்லியன் அமெரிக்க டாலர் (57,800 கோடி ரூபாய்) ஆகவும், 2034-ம் ஆண்டில் 87,300 கோடி ரூபாயாகவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் துறை ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர்க்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. ஆசியாவில் மூன்றாவது பெரிய விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தியாளராகவும், உலக அளவில் 21-வது பெரிய ஏற்றுமதியாளராகவும் இந்தியா உள்ளது.
*******
AD/SMB/ PLM/RJ
(Release ID: 2162316)
Visitor Counter : 23