சுற்றுலா அமைச்சகம்
ஆபத்தான இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள்
Posted On:
21 AUG 2025 4:20PM by PIB Chennai
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மாநில அரசின் பொறுப்பாகும். எனினும், மத்திய சுற்றுலா அமைச்சகமானது சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் பிரத்யேகமான சுற்றுலா காவல்துறையை உருவாக்குவது குறித்து மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகங்களுடன் தொடர்ச்சியாக கலந்தாலோசித்து வருகிறது. சுற்றுலா அமைச்சகம் மேற்கொண்ட முயற்சிகளால் தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், தில்லி, கோவா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், மத்தியப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம் மற்றும் உத்திரப் பிரதேச மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகங்கள் சுற்றுலாக் காவல்துறையை உருவாக்கியுள்ளன.
சுற்றுலா பயணிகளின் பயணம் பாதுகாப்பாக இருப்பதற்காக அமைச்சகம் மேற்கொள்ளும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக சுற்றுலா அமைச்சகம் 24X7 பல்மொழி சுற்றுலா உதவி எண்ணான 1800111363 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை செயல்படுத்தி வருகிறது. சுருக்கக் குறியீடாக 1363 என்ற எண் 12 மொழிகளில் செயல்படுகிறது. இதில் ஜெர்மன், பிரெஞ்ச், ஸ்பானிஷ், இத்தாலி, போர்ச்சுகீஸ், ரஷ்யன், சைனீஸ், ஜப்பானிஸ், கொரியன், அரபிக் ஆகிய 10 சர்வதேச மொழிகளும் உள்ளடங்கும். இந்தியாவில் பயணம் குறித்த தகவல்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தச் சேவையின் மூலம் பெற முடியும்.
நிதி அமைச்சகத்தின் பொருளாதார உறவுகள் துறை பிரத்யேகமான காலாவதியாகாத கார்பஸ் தொகையைக் கொண்டு நிர்பயா நிதியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தின் நிதியை குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.
நிர்பயா நிதியத்தின்கீழ் ”பெண்களுக்கான பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள்” என்ற செயல்திட்டத்தின் பலன்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு சுற்றுலா அமைச்சகம் அனைத்து மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. சுற்றுலா அமைச்சகம் இந்தச் செயல்திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறைக்கு மொத்தமாக ரூ.16.79 கோடி (தோராயமாக) அனுமதித்துள்ளது.
இத்தகவலை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று மாநிலங்களவையில் ஒரு எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.
***
AD/TS/DL
(Release ID: 2159527)