பாதுகாப்பு அமைச்சகம்
உலகளவில் புகழ்பெற்ற கண் மருத்துவர் டாக்டர் ஹர்மிந்தர் சிங் துவா புது தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு வருகை தந்தார்
Posted On:
10 AUG 2025 10:05AM by PIB Chennai
உலகளாவிய கண் மருத்துவ துறையில் புகழ்பெற்ற டாக்டர் ஹர்மிந்தர் சிங் துவா ஆகஸ்ட் 02, 2025 அன்று புது தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு (ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை) வருகை தந்தார். தற்போது அவர் இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் கண் மருத்துவப் பேராசிரியராக உள்ளார். மேலும் துவாவின் கருவிழி அடுக்கைக் கண்டுபிடித்தது உட்பட விழி வெண்படல அறிவியலுக்கு அவர் அளித்த மகத்தான பங்களிப்புகளுக்காக உலகளவில் கொண்டாடப்படுகிறார்.
கண் மருத்துவத் துறைக்கு வருகை தந்தபோது, டாக்டர் துவா மருத்துவமனையில் உள்ள அதிநவீன உள்கட்டமைப்பு, உபகரணங்கள், சுத்தமான மாசற்ற சூழல் மற்றும் நேர்த்தியான கருணைமிகு பணிக் கலாச்சாரம் ஆகியவற்றிற்கு பாராட்டு தெரிவித்தார். "ராணுவ மருத்துவமனையில் உள்ள வசதிகள் மற்றும் தரநிலைகள் உலகளவில் சில சிறந்த கண் மருத்துவ மையங்களுக்கு ஒப்பானதாக இருக்கின்றன, சில அம்சங்களில் அவற்றை மிஞ்சுவதாகக் கூட அமைந்துள்ளன," என்று அவர் குறிப்பிட்டார்.
பேராசிரியர் துவா, மூத்த ஆசிரியர்கள், முதுகலை மாணவர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் அடங்கிய பல்வேறு பார்வையாளர்களிடயே 'கற்றலிலிருந்து தலைமை ஏற்பது வரை: பொறுப்புகளை சுமப்பது' என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். மருத்துவத்தில் அவரது புகழ்பெற்ற பயணத்திலிருந்து பெறப்பட்ட அனுபவங்களுடன், கற்கும் நோக்கத்திலிருந்து தொலைநோக்குத் தலைமைத்துவம் வரையிலான நுணுக்கமான பரிணாமத்தை அவரது உரை விரிவாக எடுத்துரைத்தது.
ராணுவ மருத்துவமனையில் வரவிருக்கும் மேம்பட்ட கண் பார்வை அறிவியல் மையம், கூட்டு கண் மாற்று மையம் மற்றும் புற்றுநோயியல் மையம் ஆகியவை குறித்து டாக்டர் துவா பெருமிதம் தெரிவித்தார். இந்த மையங்கள், ஆயுதப் படைகளை ஊக்கப்படுத்துவதிலும், அவற்றை எதிர்காலத்திற்குத் தயாராக்குவதிலும் முனைப்புடன் செயல்பட்டு வரும் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படும் தொலைநோக்குத் திட்டங்கள் ஆகும். இந்த முயற்சிகளை முன்னெடுப்பதில் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி முக்கிய பங்கு வகித்துள்ளார்.
டாக்டர் துவா பல தசாப்தங்களாக சிறப்பு மருத்துவம், கல்வியில் வழிகாட்டுதல் மற்றும் அறுவை சிகிச்சை கண்டுபிடிப்புகளின் கலங்கரை விளக்கமாக இருந்து வருகிறார். அவரது பணி நவீன கண் மருத்துவத்தின் வடிவத்தை மாற்றியுள்ளது, மேலும் அவர் உலகெங்கிலும் உள்ள பல தலைமுறை மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார். அவரது வருகைக்கு ராணுவ மருத்துவமனை கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் சங்கர் நாராயண் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
****
(Release ID: 2154797)
AD/SM/SG
(Release ID: 2154812)