தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

தேர்தல் நடைமுறைகளை சீரமைத்தல்: பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத 334 கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கியது தேர்தல் ஆணையம்

Posted On: 09 AUG 2025 4:22PM by PIB Chennai

நாட்டில் உள்ள தேசிய/மாநில அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 195-ன் பிரிவு 29-வின் விதிகளின் கீழ் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன

தற்போது, 6 தேசியக் கட்சிகள், 67 மாநிலக் கட்சிகள், 2854 பதிவுசெய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களில், ஒரு கட்சி 6 ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், அந்தக் கட்சி பதிவுசெய்யப்பட்ட கட்சி என்ற பட்டியலிலிருந்து நீக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 29-வின் படி, பதிவு செய்யும் நேரத்தில் கட்சிகள் பெயர், முகவரி, நிர்வாகிகள் போன்ற விவரங்களை வழங்க வேண்டும். மேலும் அதில் எந்த மாற்றத்தையும் ஆணையத்திற்கு தாமதமின்றி தெரிவிக்க வேண்டும்.

முன்னதாக, 2025 ஜூன் மாதத்தில், மேற்கூறிய நிபந்தனைகள் குறித்து, 345 பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளிடம்  சரிபார்ப்பு விசாரணைகளை நடத்துமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி தலைமைத் தேர்தல் அதிகாரிகள் விசாரணைகளை நடத்தினர். அதன் பிறகு, தலைமைத் தேர்தல் அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். அதன் அடிப்படையில், விளக்கம் கேட்கப்பட்ட 345 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் 334 கட்சிகள் உரிய நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. மீதமுள்ளவை மறு சரிபார்ப்புக்காக தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

 

தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் அனைத்து பரிந்துரைகளையும் பரிசீலித்த பிறகு, ஆணையம் 334 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளைப் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.

விவரங்களுக்கு இந்த இணையதள இணைப்பைப் பார்க்கலாம்https://www.eci.gov.in/list-of-political-parties

இப்போது, இந்த நடைமுறைக்குப் பிறகு மொத்தம் 2520 கட்சிகள் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பட்டியலில் உள்ளன. தேர்தல் முறையைச் சுத்தப்படுத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் விரிவான, தொடர்ச்சியான உத்தியின் ஒரு பகுதியாக இந்தப் பட்டியல் நீக்க நடைமுறை அமைந்துள்ளது.

 இந்த உத்தரவால் பாதிக்கப்பட்ட எந்தவொரு தரப்பினரும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்யலாம்.

 அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகள் :

1. ஆம் ஆத்மி கட்சி

2. பகுஜன் சமாஜ் கட்சி

3. பாரதிய ஜனதா கட்சி

4. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)

5. இந்திய தேசிய காங்கிரஸ்

6. தேசிய மக்கள் கட்சி

ஆகிய 6 கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளாக உள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் :

தமிழ் நாட்டைச் சேர்ந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம், நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்பட, நாடு முழுவதும் 67 கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் பட்டியலில் உள்ளன.

**

Release ID: 2154665

AD/SM/PLM/SG

 

 


(Release ID: 2154684) Visitor Counter : 169