சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொதுமக்களுக்கு அணுகக்கூடிய மற்றும் மலிவுக் கட்டணத்தில் சுகாதார சேவைகளை வழங்குவதற்காக, பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சர் திரு. பிரதாப்ராவ் ஜாதவ் தகவல்

Posted On: 08 AUG 2025 4:51PM by PIB Chennai

அனைத்து குடிமக்களுக்கும் அணுகக்கூடிய மற்றும் மலிவுக் கட்டணத்தில் சுகாதார சேவைகளை வழங்குவதற்காக, நாட்டில் பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

 

தேசிய சுகாதார இயக்கம் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப பொறுப்பான சமத்துவம் நிறைந்த, மலிவு மற்றும் தரமான சுகாதார சேவைகளை அனைவருக்கும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் மற்றும் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் ஆகிய இரண்டு துணைத் திட்டங்களை உள்ளடக்கிய தேசிய சுகாதார இயக்கம் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் சுகாதார அமைப்பை வலுப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளது. இனப்பெருக்கம், மகப்பேறு, சிசு, குழந்தை மற்றும் இளம் பருவ சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளித்தல், தொற்று மற்றும் தொற்றா நோய்களை நிர்வகித்தல் ஆகியவை முக்கிய திட்டக் கூறுகளில் அடங்கும்.

 

பிப்ரவரி 2018 இல், இந்திய அரசு டிசம்பர் 2022 க்குள் நாடு முழுவதும் 1,50,000 ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள், ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் என அழைக்கப்பட்டு வந்த மையங்கள் நிறுவப்படும் என்று அறிவித்தது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் தற்போதுள்ள துணை சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களை மாற்றி அமைப்பதன் மூலம் மொத்தம் 1,77,906 ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் நிறுவப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன.

 

பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் என்பது 2021-22 முதல் 2025-26 வரையிலான திட்டக் காலத்திற்கு 64,180 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் மத்திய துறை அம்சங்களைக் கொண்ட மத்திய நிதியுதவி திட்டமாகும். தற்போதுள்ள மற்றும் எதிர்கால தொற்றுநோய்கள் / பேரழிவுகளை திறம்பட எதிர்கொள்வதில் சுகாதார அமைப்புகளைத் தயார்படுத்துவதற்காக, முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என அனைத்து நிலைகளிலும் தொடர்ச்சியான பராமரிப்பை மேற்கொள்வது இந்த இயக்கத்தின் கீழ் உள்ள நடவடிக்கைகளில் முக்கியமானது ஆகும். சுகாதார அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் திறன்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படுகின்றன. 2021-26 நிதியாண்டில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 33,081.82 கோடிக்கு நிர்வாக ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 10,609 கட்டிடங்களற்ற ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள், 5456 நகர்ப்புற ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள், 2151 தொகுதி பொது சுகாதார அலகுகள், மாவட்ட அளவில் 744 ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள் மற்றும் 621 தீவிர சிகிச்சை தொகுதிகள் ஆகியவற்றைக் கட்டமைக்கவும் வலுப்படுத்தவும் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின்  மக்கள் ஆரோக்கிய திட்டம் என்பது மத்திய அரசின் முதன்மைத் திட்டமாகும். இது 12 கோடி குடும்பங்களுக்கு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பை மருத்துவமனையில் பெற ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் சுகாதார காப்பீட்டை வழங்குகிறது. இது இந்தியாவின் மக்கள்தொகையில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய 40% மக்களுக்கு பயன் தருகிறது. இந்தத் திட்டம் 29.10.2024 அன்று 4.5 கோடி குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 6 கோடி மூத்த குடிமக்களுக்கு, அவர்களின் சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், வய வந்தனா அட்டை மூலம் விரிவுபடுத்தப்பட்டது.

 

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பல்வேறு டிஜிட்டல் முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கிய முயற்சிகளில் ஒன்றாக செப்டம்பர் 2021 இல் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இஅயக்கத்தைக் கூறலாம். சுகாதார சூழலமைப்பில் சுகாதாரத் தரவை ஒன்றிணைக்க உதவும் ஒரு ஆன்லைன் தளத்தை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனின் மின்னணு சுகாதார பதிவை  உருவாக்குவதற்கு இது முன்னுரிமை அளிக்கிறது. நாட்டின் ஒருங்கிணைந்த டிஜிட்டல் சுகாதார உள்கட்டமைப்பை ஆதரிக்க தேவையான தரவுத் தளத்தை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. குடிமக்களுக்கான ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கு, சுகாதார தொழில்முறை பதிவேடு, சுகாதார வசதி பதிவேடு  மற்றும் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கு பயன்பாடு ஆகியவை இந்த இயக்கத்தின் முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன.

 

 

பிரதமரின் சுகாதார பாதுகாப்பு திட்டம் மலிவுக் கட்டணத்தில் மூன்றாம் நிலை சுகாதார சேவைகள் கிடைப்பதில் பிராந்திய அளவில் நிலவும்  ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்வதையும், நாட்டில் தரமான மருத்துவக் கல்விக்கான வசதிகளை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் இரண்டு அம்சங்களைக் கொண்டுள்ளது: அதாவது, (i) அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) அமைத்தல், (ii) தற்போதுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள்/நிறுவனங்களை மேம்படுத்துதல். இதுவரை, 22 புதிய எய்ம்ஸ்கள் அமைப்பதற்கும், அரசு மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துவதற்கான 75 திட்டங்களுக்கும் பல்வேறு கட்டங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

 

மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கையை அரசு அதிகரித்துள்ளதன் காரணமாக, இளங்கலை மற்றும் முதுகலை இடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. 2014ம் ஆண்டு முதல் இன்றுவரை மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387 லிருந்து 780 ஆகவும், இளங்கலை இடங்கள் 51,348 லிருந்து 1,15,900 ஆகவும், முதுகலை இடங்கள் 31,185 லிருந்து 74,306 ஆகவும் அதிகரித்துள்ளன.

 

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு. பிரதாப்ராவ் ஜாதவ் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

-----

AD/SM/DL


(Release ID: 2154452)
Read this release in: English , Urdu , Hindi