உள்துறை அமைச்சகம்
பயங்கரவாதத்திற்கு எதிராக மத்திய அரசின் பலபரிமாண உத்திகள்
Posted On:
29 JUL 2025 5:09PM by PIB Chennai
இந்திய அரசியல் சட்டத்தின் ஏழாவது அட்டவணைப்படி, 'காவல்துறை', 'பொது ஒழுங்கு' ஆகியவை மாநிலங்களின் பொறுப்பாகும். இருப்பினும், உள்நாட்டு மற்றும் எல்லைப் பாதுகாப்பு சவால்களைச் சமாளிக்கவும், உள்நாட்டு மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடவும், மத்திய அரசு பலபரிமாண உத்திகளைப் பின்பற்றுகிறது, இது பல்வேறு நடவடிக்கைகளை உள்ளடக்கியது. அவை பின்வருமாறு -
பாதுகாப்பு உபகரணங்களை நவீனமயமாக்கவும் வலுப்படுத்தவும் சிறப்பு கவனம் செலுத்துதல்.
மாநிலக் காவல் படைகள், சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் சைபர் புலனாய்வு முகமைகளுக்குத் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல்.
உளவுத்துறையின் திறன்களை அதிகரித்தல், சட்ட அமலாக்க முகமைகளை வலுப்படுத்துதல், அனைத்து பாதுகாப்புப் படைகளிடையேயும் நிகழ்நேர அடிப்படையில் உளவுத் தகவல்கள் பகிரப்படுவதை உறுதி செய்தல்.
சென்சார்கள், கேமராக்கள், தரை கண்காணிப்பு ரேடார்கள் மற்றும் கட்டளை-கட்டுப்பாட்டு அமைப்புகளை உள்ளடக்கிய விரிவான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை அமைப்பை செயல்படுத்துதல்
பாதிப்புக்குள்ளாகும் எல்லைப் பகுதிகளில் ஆளில்லா வான்வழி வாகனங்கள், ட்ரோன்கள், செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்துதல்.
பாரத்மாலா மற்றும் எல்லைப்பகுதி சாலை அமைப்பின் முன்முயற்சிகளுடன் எல்லைப் பகுதிகளில் சாலைகள், சுரங்கப்பாதைகள் மற்றும் பாலங்களைக் கட்டமைத்தல் .
பகலிலும் இரவிலும் தீவிரக் கண்காணிப்பு .
சர்வதேச எல்லைகளில் பல்வேறு இடங்களில் வேலிகள், அதிக ஒளிதரும் விளக்குகள், எல்லை புறக்காவல் நிலையங்கள்/நிறுவன செயல்பாட்டு தளங்கள், சாலைகள் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் அமைத்தல் மற்றும் கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்.
பங்களாதேஷ், நேபாளம், மியான்மர் போன்ற அண்டை நாடுகளுடன் வழக்கமான எல்லை-ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்துதல் கூட்டு ரோந்துப் பணி மேற்கொள்ளுதல்.
பயங்கரவாதத்திற்கு எதிராக 'சகிப்பின்மை' கொள்கையை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், பின்வரும் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன -
பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவு கட்டமைப்புகளுக்கு எதிராக தீவிரமான, தொடர்ச்சியான மற்றும் நீடித்த நடவடிக்கைகள்.
அரசின் அணுகுமுறையை முழுமையாகப் பயன்படுத்தி பயங்கரவாதச்சூழல் அமைப்பை அகற்றுதல்.
மத்திய ஆயுதக் காவல் படைகள், இந்திய ராணுவம் மற்றும் மாநிலக் காவல் படைகள் மூலம் தடுப்பு நடவடிக்கைகள், பயங்கரவாதத்தின் ஆதரவாளர்களை அடையாளம் காண்பது மற்றும் பயங்கரவாதத்திற்கு உதவி மற்றும் துணைபுரியும் அவர்களின் வழிமுறைகளை அம்பலப்படுத்த என்ஐஏ மூலம் விசாரணைகளைத் தொடங்குதல்.
பயங்கரவாத நெட்வொர்க் மற்றும் செயல்பாடுகளைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு, பெரிய தரவு பகுப்பாய்வு மற்றும் முக அங்கீகாரக் கருவிகளைப் பயன்படுத்துதல்.
இணையவழியிலான தீவிரவாதத்தைத் தடுக்க சமூக ஊடகங்கள் மற்றும் சைபர்ஸ்பேஸைக் கண்காணித்தல்.
மேலும் சர்வதேச அளவில் 26 நாடுகளுடனும், 5 பலதரப்பு மன்றங்களுடனும் (ஆசியான், பிம்ஸ்டெக், பிரிக்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் , க்வாட்) பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுப் பணிக்குழுக்களை இந்தியா முழுமையாகச் செயல்படுத்துகிறது; துனிசியாவுடன் தனித்த உரையாடலையும் கொண்டுள்ளது.
மக்களவையில் கேள்விஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149787
***
AD/SMB/DL
(Release ID: 2149915)