உள்துறை அமைச்சகம்
இடதுசாரி தீவிரவாதம் பெருமளவு குறைந்துள்ளது
Posted On:
29 JUL 2025 5:08PM by PIB Chennai
அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி, காவல்துறை மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான விஷயங்கள் மாநில அரசுகளின் கீழ் வருகின்றன. இருப்பினும், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தீவிரவாதத்தை ஒடுக்கும் முயற்சிகளுக்கு மத்திய அரசு துணைபுரிந்து வருகிறது. இடதுசாரி தீவிரவாத பிரச்சனையை முழுமையாக நிவர்த்தி செய்ய 2015-ம் ஆண்டு தேசிய செயல்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வளர்ச்சிப் பணிகளும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளடக்கிய பன்முக உத்தியின் அடிப்படையில் செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சாலை கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படுகின்றன. இதற்கான திட்டத்தின் கீழ் 17,589 கி.மீ சாலைப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொலைத்தொடர்பு இணைப்பை மேம்படுத்துவதற்காக, 10,644 மொபைல் கோபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. அவற்றில் 8,640 கோபுரங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.
திறன் மேம்பாட்டிற்காக, 48 தொழில்துறை பயிற்சி நிறுவனங்களும், 61 திறன் மேம்பாட்டு மையங்களும் இப்பகுதிகளில் அமைக்கப்படுகின்றன. பழங்குடியினர் பகுதிகளில் தரமான கல்விக்காக 258 ஏகலைவா மாதிரி பள்ளிகளைத் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதால் வன்முறை தொடர்ந்து குறைந்து வருகிறது. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 2013-ல் 126 ஆக இருந்த நிலையில், ஏப்ரல் 2025-ல் 18 மாவட்டங்களாகக் குறைந்துள்ளன.
மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149786
***
AD/SM/PLM/RJ/KR/DL
(Release ID: 2149892)