விண்வெளித்துறை
சர்வதேச விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை விரிவுபடுத்தும் உத்திகள்
Posted On:
24 JUL 2025 3:31PM by PIB Chennai
2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கியமான விண்வெளி சீர்திருத்தங்களுடன் இந்திய அரசானது விண்வெளித் துறையை தாராளமயமாக்கியுள்ளது. விண்வெளித் துறையில், தன்னாட்சியான, ஒற்றைச் சாளர அமைப்பில் தனித்தியங்கும் ஒருங்கிணைப்பு முகமையாக இந்திய தேசிய விண்வெளி மேம்பாட்டு மற்றும் அங்கீகார மையத்தை(இன்–ஸ்பேஸ்) இந்திய அரசு உருவாக்கியுள்ளது. விண்வெளி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் தனியார்/அரசு சாராத அமைப்புகள் பங்கேற்பதற்கு உதவுவதும் பங்கேற்பை மேம்படுத்துவதும் இந்த மையத்தின் நோக்கமாகும்.
இஸ்ரோ, அரசு சாராத நிறுவனங்கள் மற்றும் ஒரு முன்னணி ஆலோசனை நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இன்–ஸ்பேஸ் “இந்திய விண்வெளிப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான பத்தாண்டு தொலைநோக்கு மற்றும் செயல் உத்தி” என்ற அறிக்கையை உருவாக்கியுள்ளது. அடுத்த பத்தாண்டு காலத்திற்கு இந்திய விண்வெளித் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளை வழி நடத்தும் ஆவணமாக இது உள்ளது.
2033 ஆம் ஆண்டுக்குள் 44 பில்லியன் டாலர் என்ற பத்தாண்டு தொலைநோக்கு இலக்குகளை அடையும் வகையில் இன்–ஸ்பேஸ் பல முன்முயற்சிகளையும் செயல்திட்டங்களையும் ஒருங்கிணைத்து வருகின்றது.
இந்திய விண்வெளி தொழில் பிரிவுக்கு ஒழுங்குமுறை மற்றும் கொள்கை சட்டக வரைவை வழங்குதல், அரசு சாராத நிறுவனங்களுக்கு எளிதில் வர்த்தகம் மேற்கொள்ள உதவுதல், அந்த நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப பரிமாற்றத்துக்கு உதவுதல், முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை அணுக உதவுதல், புவி கூர்நோக்கு கண்காணிப்புக்கு அரசு-தனியார் பங்கேற்பை ஊக்குவித்தல், விண்வெளித் துறையைக் கவனத்தில் கொள்ளும் வகையில் ரூ.1000 கோடி மதிப்பில் அந்தரிக்ஷா புதிய தொழில்களுக்கான மூலதன நிதியத்தை ஏற்படுத்துதல். தொழில்திறன் பெற்றவர்கள் தொகுப்பை உருவாக்குவதற்கு திறன் மேம்பாட்டு வகுப்புகள் மற்றும் விண்வெளி பயிற்சி வகுப்புகள் நடத்துதல் போன்ற முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்திய விண்வெளித் துறை முக்கியமான மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் பங்கினை வகிக்க தயாராக உள்ளது. வேளாண்மை, பேரிடர் மேலாண்மை, நகர அபிவிருத்தி, வாகனப் போக்குவரத்து, பாதுகாப்புத் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் போன்ற பிரிவுகளுடன் ஒருங்கிணைந்ததாக விண்வெளித் துறையை நிலைநிறுத்த வேண்டியது அவசியமாகும். விண்வெளித் துறையை பரவலாக மற்றும் அனைவருக்கும் சமூகப் பொருளாதார ரீதியில் பலன் அளிக்கும் வகையில் இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இத்தகவலை அறிவியல் & தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜித்தேந்திர சிங் இன்று மாநிலங்களவையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 2147733)
AD/TS/KR
(Release ID: 2147840)