அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் மருத்துவர்கள் தின கொண்டாட்டம் - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்பு

அலோபதி மற்றும் ஆயுஷ் மருத்துவ முறைகளின் ஒருங்கிணைப்பு தேவை - டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 13 JUL 2025 7:23PM by PIB Chennai

உலகப் புகழ்பெற்ற மருத்துவரும் மருத்துவக் கல்வியாளருமான டாக்டர் பிதன் சந்திர ராய், மருத்துவத் துறைக்கும் தேசக் கட்டமைப்புக்கும் சிறப்பான பணிகளை ஆற்றியுள்ளதாக மத்திய அறிவியல், தொழில்நுட்ப இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA -ஐஎம்ஏ) சார்பில் புதுதில்லியில் இன்று (13.07.2025) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவர்கள் தின கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்திய மருத்துவ சங்கம், இந்திய சுகாதாரப் பராமரிப்பின் தூணாகத் திகழ்கிறது என்றார்நாட்டின் மிகப்பெரிய மருத்துவர்கள் அமைப்பாக இது உள்ளது எனவும் அவர் கூறினார். தில்லியை தலைமையகமாகக் கொண்ட ஐஎம்ஏ, சுகாதாரக் கொள்கையை வடிவமைப்பதிலும், மருத்துவ நெறிமுறைகளை வலுப்படுத்துவதிலும், பொது சுகாதார விழிப்புணர்வை ஊக்குவிப்பதிலும் முன்னணியில் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

நவீன அலோபதி மருத்துவத்தை ஆயுஷ் மருத்துவத்துடனும், அதிநவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களுடனும் இணைத்து செயல்படுத்துவதன் மூலம் சுகாதாரப் பராமரிப்பில் சிறந்த பலன்களை எட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்தார். நாள்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்துவதில் யோகா ஒரு பயனுள்ள பயிற்சியாக அமையும் என்று குறிப்பிட்ட அவர், பல்வேறு மருத்துவ முறைகளுக்கு இடையில் ஒருங்கிணைப்புக்கான திறந்த தன்மையை ஊக்குவிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

 

மரபணு தடுப்பூசி, மரபணு சிகிச்சை சோதனைகள் போன்ற உள்நாட்டு முன்னேற்றங்களை மேற்கோள் காட்டிய அமைச்சர், மருத்துவ அறிவியலில் இந்தியாவின் வளர்ச்சியை எடுத்துரைத்தார். விரைவான தொழில்நுட்ப மாற்றம் ஏற்பட்டு வரும் இந்தக் காலகட்டத்தில், மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, ரோபோடிக் நோயறிதல் முறைகள், தொலை மருத்துவம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, மருத்துவர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டு செயலாற்ற வேண்டும் என மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டார்

*****

(Release ID: 2144395)

AD/TS/PLM/SG

 

 


(Release ID: 2144414)