ஆயுஷ்
பாரம்பரிய மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு - உலக சுகாதார நிறுவனத்தின் முக்கிய வெளியீட்டில் இந்தியாவின் ஆயுஷ் கண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன
Posted On:
12 JUL 2025 1:01PM by PIB Chennai
உலகளாவிய சுகாதார கண்டுபிடிப்புகளுக்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, உலக சுகாதார அமைப்பு (WHO) "பாரம்பரிய மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை திட்டமிடுதல்" என்ற தலைப்பில் ஒரு தொழில்நுட்ப சுருக்க அம்சத்தை வெளியிட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவை (AI) பாரம்பரிய மருத்துவ அமைப்புகளுடன், குறிப்பாக ஆயுஷ் அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பதில் இந்தியாவின் முன்னோடி முயற்சிகளை அங்கீகரித்துள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவின் முன்மொழிவை இந்த வெளியீடு பின்பற்றுகிறது. இது பாரம்பரிய மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான உலக சுகாதார நிறுவனத்தின் முதல் செயல் திட்டத்தை உருவாக்க வழிவகுத்தது.
இந்தியா தனது ஆயுஷ் அமைப்புகளின் வலிமையை மேம்படுத்தவும் பெருக்கவும் செயற்கை நுண்ணறிவின் திறனைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான முயற்சிகள், அதிநவீன தொழில்நுட்பம் மூலம் பாரம்பரிய மருத்துவத்தை ஊக்குவிப்பதில் இந்திய விஞ்ஞானிகளின் ஆழ்ந்த அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் குறிப்பிட்டார். பாரம்பரிய மருத்துவத்தை உலக அளவில் விரிவுபடுத்த செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு சிந்தனையை, இந்த அங்கீகாரம் எடுத்துக் காட்டுகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் தளங்கள் மூலமாக இந்தியா தனது நூற்றாண்டுகள் பழமையான மருத்துவ ஞானத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், உலக அளவில் அணுகக்கூடிய சுகாதாரப் பாதுகாப்பின் எதிர்காலத்தை வடிவமைப்பதிலும் முன்னணியில் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இந்த ஆவணம் ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவின் பல்வேறு பயன்பாடுகளைக் காட்டுகிறது. இதில் நாடி வாசிப்பு, நாக்கு பரிசோதனை, பிரகிருதி மதிப்பீடு போன்ற பாரம்பரிய முறைகளை இயந்திர கற்றல் வழிமுறைகள் மற்றும் ஆழமான நரம்பியல் கட்டமைப்புகளுடன் ஒருங்கிணைக்கும் நோயறிதல் ஆதரவு அமைப்புகள் அடங்கும். இந்த முயற்சிகள் நோயறிதல் துல்லியத்தை மேம்படுத்துவதோடு தனிப்பயனாக்கப்பட்ட நோய்த் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்தும்.
***
(Release ID: 2144184)
AD/PLM/DL
(Release ID: 2144222)