பாதுகாப்பு அமைச்சகம்
அந்தமான் அருகே சிக்கிய அமெரிக்க பாய்மரப்படகு பணியாளர்களை இந்திய கடலோர காவல்படை பத்திரமாக மீட்டது
Posted On:
11 JUL 2025 11:21AM by PIB Chennai
அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் தெற்கே அமைந்துள்ள இந்திரா பாயிண்டிலிருந்து சுமார் 52 கடல் மைல்கள் தொலைவில், அமெரிக்க பாய்மரப்படகு ‘சீ ஏஞ்சல்’ 2025 ஜூலை 10 அன்று கடுமையான வானிலைச் சூழ்நிலைகளால் சிக்கித் தவித்தது. இந்த படகில் இரண்டு பணியாளர்கள் இருந்தனர்.
தீவிர சூறாவளி மற்றும் கடல் அலைகளால் பாதிக்கப்பட்ட படகு குறித்து பேரிடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, இந்திய கடலோர காவல்படை (ICG) உடனடியாக மீட்புப் பணிகளை தொடங்கியது. தேசிய மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையமான எம்ஆர்சிசி (MRCC) போர்ட் பிளேர் மூலமாக சுற்றுவட்டார வணிகக் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்திய கடலோர காவல்படையின் ஐசிஜி கப்பல் ‘ராஜ்வீர்’ சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, அமெரிக்க படகில் இருந்த பணியாளர்களுடன் தொலைத்தொடர்பு மூலம் நிலைமைகள் மதிப்பீடு செய்யப்பட்டது. கடுமையான காற்று மற்றும் படகு செயலிழந்த நிலையில் இருந்த போதிலும், பணியாளர்கள் இருவரும் பாதுகாப்பாகவும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இன்று காலை, ‘சீ ஏஞ்சல்’ பாய்மரப்படகும் அதில் இருந்த பணியாளர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டு, பாதுகாப்பாக கேம்ப்பெல் விரிகுடா துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
***
(Release ID: 2143932)
VJ/TS/GK/AG/SG
(Release ID: 2143990)