குடியரசு துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர் இன்று, “உலகளாவிய வல்லரசாக இந்தியாவின் எழுச்சியானது அதன் அறிவுசார் மற்றும் கலாச்சார ஈர்ப்புகளின் எழுச்சியுடன் சேர்ந்து இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் ஒரு தேசத்தின் வலிமை அதன் சிந்தனையின் அசல் தன்மை, அதன் மதிப்புகளின் காலங்கடந்த தன்மை மற்றும் அதன் அறிவுசார் மரபுகளின் மீள்தன்மை ஆகியவற்றில் தான் உள்ளது. அதுதான் நீடித்து நிலைத்திருக்கும் மென்மையான சக்தி’’ என்று கூறினார்.
காலனித்துவத்திற்குப் பிந்தைய கட்டமைப்புகளின் எல்லைகளுக்கு அப்பால் இந்தியாவின் அடையாளத்தை மீண்டும் உறுதிப்படுத்திய குடியரசு துணைத்தலைவர், “இந்தியா என்பது 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் கட்டமைப்பு மட்டுமல்ல. இது ஒரு நாகரிகத் தொடர்ச்சி - உணர்வு, விசாரணை மற்றும் கற்றல் ஆகியவற்றின் கலவை ” என்று குறிப்பிட்டார்.
இந்தியாவின் அறிவுசார் பயணத்தில் ஏற்பட்ட வரலாற்றுச் சிதைவுகளைப் பற்றிப் பேசிய அவர், “இந்தியாவின் மீதான இஸ்லாமியப் படையெடுப்பு பாரத வித்யா பரம்பரையின் புகழ்பெற்ற பயணத்தில் முதல் இடைச்செருகலை ஏற்படுத்தியது. தழுவல் மற்றும் ஒருங்கிணைப்புக்குப் பதிலாக, அவமதிப்பும் அழிவும் ஏற்பட்டது. பிரிட்டிஷ் காலனித்துவம் இரண்டாவது இடைச்செருகலை முன்வைத்தது. அப்போது இந்திய அறிவு அமைப்பு தடுமாறி, தடைபட்டு, கவிழ்க்கப்பட்டது. கற்றல் மையங்கள் அவற்றின் நோக்கங்களை மாற்றின. திசைகாட்டி மிதப்படுத்தப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியின் தேவைகள், சிந்தனையாளர்களைக் கொண்டிருக்க வேண்டிய தேசத்தின் தேவையை மாற்றியது.” என்று கூறினார்.
இன்று புதுதில்லியில் நடைபெற்ற இந்திய அறிவு அமைப்புகள் தொடக்க வருடாந்திர மாநாட்டில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய திரு தன்கர், ஐரோப்பாவின் பல்கலைக்கழகங்கள் உருவாவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, பாரதத்தின் பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே செழிப்பான கற்றல் மையங்களாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருந்தன. நமது பண்டைய நிலம் அறிவுசார் வாழ்க்கையின் ஒளிரும் மையங்களான தக்ஷசிலா, நாளந்தா, விக்ரமசிலா, வல்லபி மற்றும் ஓடந்தபுரி ஆகியவற்றின் தாயகமாக இருந்தது. இவை அறிவின் உயரமான கோட்டைகளாக இருந்தன. அவற்றின் நூலகங்கள் பரந்த ஞானக் கடல்களாக இருந்தன, பல்லாயிரக்கணக்கான கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டிருந்தன என்று சுட்டிக்காட்டினார்.
இவை உலகளாவிய பல்கலைக்கழகங்களாகத் திகழ்ந்தன. கொரியா, சீனா, திபெத் மற்றும் பெர்சியா போன்ற அருகிலுள்ள மற்றும் தொலைதூர நாடுகளிலிருந்து கற்றலைத் தேடுபவர்கள் இங்கு வந்தனர். உலகின் அறிவு பாரதத்தின் உணர்வைத் தழுவிய இடங்கள் இவை என்று அவர் மேலும் கூறினார்.
“கடந்த கால ஞானம் புதுமைக்குத் தடையாக இருக்காது - மாறாக அது அதை ஊக்குவிக்கிறது. ஆன்மீக நுண்ணறிவு அறிவியல் துல்லியத்துடன் இணைந்து செயல்பட முடியும், ஆனால் ஆன்மீக நுண்ணறிவு என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ரிக்வேதத்தின் பிரபஞ்சத்திற்கான பாடல்கள் வானியற்பியல் யுகத்தில் புதிய பொருத்தத்தைக் காணலாம். பொது சுகாதார நெறிமுறைகள் குறித்த உலகளாவிய விவாதங்களுடன் சரக சம்ஹிதையைப் படிக்கலாம்.”என்று அவர் கூறினார்.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட், இக்ஷா இயக்குநர் பேராசிரியர் எம்.எஸ். சைத்ரா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
----
(Release ID 2143682)
AD/TS/PKV/KPG/DL