வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா 4,000% சூரிய சக்தி திறன் வளர்ச்சியை எட்டியுள்ளது: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல்
Posted On:
10 JUL 2025 3:47PM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இன்று புதுதில்லியில் 11-வது இந்திய எரிசக்தி சேமிப்பு வாரம் - 2025 இல் உரையாற்றும் போது, இந்தியாவின் நிறுவப்பட்ட சூரிய சக்தி திறன் 4,000% அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும் நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் இப்போது வலுவான 227 கிகாவாட்ஸ் ஆக உள்ளது என்று கூறினார். பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை பூர்த்தி செய்த முதல் ஜி20 நாடு இந்தியாவாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பல்லி கிராமத்தின் உதாரணத்தை திரு கோயல் மேற்கோள் காட்டினார். இது சூரிய சக்தி மற்றும் எரிசக்தி செயல்திறனைப் பயன்படுத்தி இந்தியாவின் முதல் கார்பன் வெளியேற்றமற்ற நடுநிலை பஞ்சாயத்தாக மாறியுள்ளது. யஷோபூமியில் உள்ள ஐஇஎஸ்டபிள்யூ அரங்கானது கூரை சூரிய சக்தி நிறுவல்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் எரிசக்தி-திறனுள்ள உள்கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு நிலைத்தன்மையின் மாதிரியாகவே உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் உற்பத்தி முன்னேற்றத்தை எடுத்துரைத்த திரு கோயல், நாட்டின் சூரிய ஒளி மின்னழுத்த தொகுதி திறன் கிட்டத்தட்ட 38 மடங்கு அதிகரித்துள்ளது என்றும், அதே நேரத்தில் ஒளிமின்னழுத்த செல் திறன் 21 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் கூறினார். 1 கோடி வீடுகளில் கூரை மீது சூரிய மின்கலங்களை பொருத்தி, அவர்களை மின்சாரத்தில் தன்னிறைவு அடையச் செய்வதையும், மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட பிரதமர் சூர்யக்கூரை திட்டம் பற்றி அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் விவசாயப் பொருளாதாரத்தில் சூரிய மின்கலங்களை விரிவுபடுத்துவதை ஆதரிக்கும் பிரதமரின் திட்டம் பற்றியும் அவர் பேசினார்.
இந்தியாவின் எதிர்கால எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பேட்டரிகள், பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு, நீர் மின் சேமிப்பு அல்லது புவிவெப்பம் போன்ற சேமிப்பு தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை அமைச்சர் வலியுறுத்தினார். இந்தியாவின் சுத்தமான மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சார ஆதாரங்களுக்கு மாறுவதில் எரிசக்தித் துறை ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்றும், கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் சாதனைகளில் இந்த தொலைநோக்குப் பார்வை ஏற்கனவே பிரதிபலிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் எரிசக்தி சுதந்திரத்தை முன்னேற்றுவதற்கான விரிவான நான்கு முனை அணுகுமுறையை முன்மொழிந்த மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட புதுமை, உள்கட்டமைப்பு மேம்பாடு, விநியோகச் சங்கிலி மீள்தன்மை மற்றும் முழுமையான மதிப்புச் சங்கிலி வளர்ச்சி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ரூ 1 லட்சம் கோடி ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமை நிதிக்கு அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளதை எடுத்துரைத்த அவர், இந்தியாவின் செலவு நலன்களைக் கருத்தில் கொண்டு, முன்னேறிய பொருளாதாரங்களில் ரூ 6–7 லட்சம் கோடி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீடுகளுடன் ஒப்பிடும் திறனை இது கொண்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டார்.
செயல்பாடுகளை அதிகரிக்கவும் போட்டித்தன்மையை வலுப்படுத்தவும் புதிய வாய்ப்புகளை ஆராயுமாறும் பங்குதாரர்களை அமைச்சர் வலியுறுத்தினார். 2030 ஆம் ஆண்டுக்குள் 500 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைவதற்கான இந்தியாவின் இலக்கை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்திய எரிசக்தி சேமிப்பு வாரம் என்பது எரிசக்தி சேமிப்பு, மின் இயக்கம், பேட்டரி உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு முதன்மையான தொழில்துறை நிகழ்வாகும். 11வது பதிப்பு உலகளாவிய தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களை ஒன்றிணைத்து இந்தியாவின் எரிசக்தி மாற்றத்திற்கு முக்கியமான புதுமைகள் மற்றும் கொள்கை மேம்பாடுகள் குறித்து விவாதித்தது. இந்த நிகழ்வு தேசிய எரிசக்தி இலக்குகளுடன் இணைந்த உரையாடல், கூட்டாண்மை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப காட்சிப்படுத்தலை ஊக்குவிக்கிறது.
*****
(Release ID: 2143701)
AD/TS/PKV/KPG/DL
(Release ID: 2143839)