மத்திய அமைச்சரவை தலைமைச் செயலகம்
இரசாயன ஆயுதங்களைத் தடை செய்வதற்கான அமைப்பு தனது ஆசிய சந்திப்பை புதுதில்லியில் 2025 ஜூலை 1 முதல் 3 வரை நடத்தியது
प्रविष्टि तिथि:
03 JUL 2025 3:15PM by PIB Chennai
இரசாயன ஆயுதங்கள் மாநாடு 1997-ல் நடைபெற்றது. இந்த மாநாட்டின் திட்டங்களை செயல்படுத்துவதற்காக இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. இந்த அமைப்பு இரசாயன ஆயுதங்களை ஒழிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளை மேற்பார்வையிட்டு வருகிறது. இந்த முயற்சிக்காக இந்த அமைப்பிற்கு 2013-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்தியாவின் மிகப்பழமையான இரசாயன தொழில்கள் சங்கமான இந்திய இரசாயன கவுன்சிலானது இரசாயன ஆயுதங்கள் மாநாட்டுக்கான தேசிய ஆணையத்துடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. இந்திய இரசாயன கவுன்சில் 2024-ம் ஆண்டு இரசாயன ஆயுதங்கள் தடைக்கான அமைப்பின் த ஹேக் விருதினைப் பெற்றதற்காக பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இரசாயன ஆயுதங்கள் மாநாட்டுக்கான இந்திய தேசிய ஆணையத்தின் ஆதரவுடன் இரசாயன ஆயுதங்களைத் தடை செய்வதற்கான அமைப்பின் 23-வது பிராந்திய அளவிலான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சந்திப்பு புதுதில்லியில் உள்ள வனிஜ்யா பவனில் ஜூலை 1 அன்று தொடங்கியது.
இந்த சந்திப்பின் போது ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பூட்டான், சீனா, கம்போடியா, இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான் உட்பட 38 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது தங்களின் அனுபவங்களை பிரதிநிதிகள் பகிர்ந்து கொண்டதுடன், தேசிய அளவில் அமலாக்க சவால்கள், சிறந்த நடைமுறைகள், கூடுதல் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் பற்றியும் விவாதித்தனர். இரசாயன ஆயதங்கள் மாநாட்டு செயல்திட்டங்களை அமல்படுத்துவதில் ஆசிய நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை இந்தச் சந்திப்பு வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2141792
***
AD/TS/SMB/AG/KR
(रिलीज़ आईडी: 2141837)
आगंतुक पटल : 7