பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – மெக்சிகோ இடையே வர்த்தகம், கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி அந்நாட்டு அதிபருடன் பேச்சு நடத்தினார்

प्रविष्टि तिथि: 17 JUN 2025 11:54PM by PIB Chennai

கனடாவில் உள்ள கனனாஸ்கிஸில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே மெக்சிகோ அதிபர் டாக்டர் கிளாடியா ஷீன்பாம் பர்டோவை, பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இவ்விரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறையாகும்.  இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின் போது, அந்நாட்டு தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு மெக்சிகோ அளித்த ஆதரவிற்கு பிரதமர் நன்றி  தெரிவித்துக் கொண்டார். இந்தியா - மெக்சிகோ இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவு குறித்து இவ்விரு தலைவர்களும் பரஸ்பரம் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். வர்த்தகம், முதலீடு, புத்தொழில் நிறுவனங்கள், புதுமைக் கண்டுபிடிப்பு, அறிவியல், தொழில்நுட்பம், வாகன உற்பத்தி போன்ற பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடுகள் அதிகரித்து வருவது குறித்து திருப்தி தெரிவித்த தலைவர்கள், கடற்பகுதிகளில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்துவது குறித்து அவர்கள் விரிவாக விவாதித்தனர். குறைந்த விலையில் தரமான மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் விவசாயம், சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.

 

தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்பு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் இந்தியா அடைந்து வரும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு மெக்சிகோ அதிபர் டாக்டர் ஷீன்பாம் பாராட்டுத் தெரிவித்தார். மேலும் இந்தத் துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட மெக்சிகோ விரும்புவதாக அவர் கூறினார்.  குறைகடத்திகள், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் முக்கிய கனிம வளங்கள் உற்பத்தி போன்ற துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்வதென ஒப்புக் கொண்டனர்.  இருநாடுகளுக்கும் இடையேயான மக்கள் தொடர்பு, கலாச்சாரப் பரிமாற்றம், சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதென இருதலைவர்களும் முடிவு செய்தனர்.

இந்தியா – மெக்சிகோ இடையேயான வலுவான நட்புறவு குறித்தும் சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். உலகின் தென்பகுதி நாடுகளில் நிலவும் சூழல் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். 2016–ம் ஆண்டில் மெக்சிகோவிற்கு தாம் மேற்கொண்ட பயணத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்தியாவுக்கு வருமாறு அந்நாட்டு அதிபர் டாக்டர் ஷீன்பாமிற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

***

(Release ID: 2137063)

SV/KPG/KR


(रिलीज़ आईडी: 2137261) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , Malayalam , Gujarati , Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Telugu