பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-சைப்ரஸ் நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமரும் சைப்ரஸ் அதிபரும் கலந்துரையாடினர்

Posted On: 16 JUN 2025 2:17AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியும் சைப்ரஸ் அதிபர் திரு நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸும் லிமாசோலில்  சைப்ரஸ் – இந்தியா நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் வட்ட மேசை நிகழ்ச்சியில் கலந்துரையாடினர். வங்கிகள், நிதி நிறுவனங்கள், உற்பத்தி, பாதுகாப்பு, சரக்குப் போக்குவரத்து, கடல்சார் பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து, தொழில்நுட்பம், புத்தாக்கம், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்ப சேவைகள், சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில்  பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் விரைவான பொருளாதார மாற்றம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். எதிர்கால தலைமுறையினர் பயனடையும் வகையில் சீர்திருத்தங்கள், கொள்கைகள், நிலையான அரசியல் மற்றும் வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். உலகிலேயே விரைவான பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். புத்தாக்க கண்டுபிடிப்புகள், டிஜிட்டல் புரட்சி, உள்கட்டமைப்பு  வசதிகளின் மேம்பாடு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக கூறிய பிரதமர், சில ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து, துறைமுகம், கப்பல் கட்டுதல், டிஜிட்டல் பணப்பரிமாற்றம், பசுமை மேம்பாடு போன்ற துறைகளில் சைப்ரஸ்  நாட்டைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய எண்ணற்ற வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். இந்தியாவில் உள்ள திறன்வாய்ந்த தொழிலாளர்கள், புத்தொழில் நிறுவனங்களுக்கான சூழல்சார் அமைப்பு போன்றவை வலுவான நிலையில் உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும்  செயற்கை நுண்ணறிவு, உற்பத்தி, குவாண்டம் தொழில்நுட்பம், செமிகண்டக்டர், தாதுக்கள் போன்ற துறைகளில் இந்தியா வளர்ச்சி அடைந்து வருவதாக பிரதமர் கூறினார்.

அந்நிய நேரடி முதலீடுகளுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்றும் சைப்ரஸ் இந்தியாவின் மிகமுக்கியமான பொருளாதார நட்பு நாடாக உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அந்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். நிதிச் சேவைத் துறையில் வர்த்தக ரீதியிலான சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்த இரு தலைவர்களும், குஜராத் மாநிலத்தில் உள்ள கிப்ட் நகரில் அமைந்துள்ள தேசிய பங்குச் சந்தையின் சர்வதேச அமைப்பு மற்றும் சைப்ரஸ் பங்குச் சந்தை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு வரவேற்பு தெரிவித்தனர். சுற்றுலாப் பயணிகள், வர்த்தக நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில், யுபிஐ செயலி முறையில் இரு நாட்டிற்கும் இடையேயான பணப்பரிவர்த்தனை முறையை அறிமுகப்படுத்துவது குறித்து என்ஐபிஎல் – என்பிசிஐ - சைப்ரஸ் யூரோ வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சிவில் விமானப் போக்குவரத்து, டிஜிட்டல் சேவைகள் போன்ற துறைகளில் முத்தரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்யும்வகையில், இந்தியா-கிரீஸ்-சைப்ரஸ் நாடுகளிடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டு குழுமம்  தொடங்கப்பட்டுள்ளதற்கும் பிரதமர் வரவேற்பு தெரிவித்தார். இந்திய நிறுவனங்கள் சைப்ரஸ் நாட்டை ஐரோப்பாவிற்கான நுழைவாயிலாகவும், தகவல் தொழில்நுட்ப சேவைகள், நிதிசார் மேலாண்மை, சுற்றுலாவுக்கான மையமாகவும் கருதுவதாக பிரதமர் கூறினார்.

சைப்ரஸ் அடுத்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராகி வரும் நிலையில், இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதென இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதிசெய்யப்படும்  என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர், இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்புக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று இருதலைவர்களும் தெரிவித்தனர். வர்த்தகம், புத்தொழில்நீண்டகால ஒத்துழைப்பை உறுதி செய்யும், வகையில் மேற்கொள்ளப்படவுள்ள பொருளாதார நடவடிக்கைகளுக்கு இந்த வட்டமேசை மாநாடு அடித்தளம் அமைத்துள்ளதாக பிரதமர் கூறினார்.

இவ்விரு நாடுகளின் எதிர்பார்ப்புகள், எதிர்கால தேவைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பரஸ்பரம் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இத்தகைய நடவடிக்கைகள் புதிய  சகாப்தத்திற்கு தயாராக உள்ளன.

***

(Release ID: 2136541)

AD/TS/SV/AG/KR


(Release ID: 2136609) Visitor Counter : 2