மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் இயக்கத்தின் 2-ம் கட்டம் - தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
05 JUN 2025 3:34PM by PIB Chennai
மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இன்று புதுதில்லியில் தாயின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கத்தின் இரண்டாம் கட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கத்தின் அடிப்படையிலான இணைய தளத்தையும், இந்த முயற்சிக்கான சிறப்பு தொகுதிகளையும் அவர் வெளியிட்டு தொடங்கி வைத்தார். கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார், தில்லி தேசிய தலைநகர் பிரதேச அரசின் கல்வி அமைச்சர் திரு ஆஷிஷ் சூட், மத்திய பள்ளிக் கல்வி - எழுத்தறிவுத் துறை செயலாளர் திரு சஞ்சய் குமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு தர்மேந்திர பிரதான், இயற்கையைப் பாதுகாப்பதிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் அவர்களின் அதிக பங்களிப்பை உறுதி செய்வதிலும் சிறப்பு தொகுதிகள், இணைய தளம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ், சுற்றுச்சூழல் கல்வியை பிரதான நீரோட்டத்திற்கு கொண்டு வரும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பள்ளிகளில் "சுற்றுச்சூழல் வாழ்க்கை முறை இயக்கம் தொடர்பான சுற்றுச்சூழல் சங்கங்கள்" அமைக்கப்படுவதன் மூலம், அவை மாணவர்களிடையே சுற்றுச்சூழல் தொடர்பான மதிப்புகளை வளர்க்கும் என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டில், நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் சார்பில் 5 கோடிக்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன என்பதை அமைச்சர் குறிப்பிட்டார். இந்த முறை, நாடு முழுவதும் 10 கோடி மரங்களை நடுவதே இலக்கு என்றும், தாயின் பெயரில் மரக்கன்று நடும் இரண்டாம் கட்ட இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு அதிக உத்வேகம் அளிக்கப்பட வேண்டும் என்றும் திரு தர்மேந்திர பிரதான் கேட்டுக்கொண்டார்.
***
(Release ID: 2134147)
AD/SM/PLM/AG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2134174)
வருகையாளர் எண்ணிக்கை : 19